அதிராம்பட்டினம் அனைத்து சமுதாய கூட்டமைப்பு சார்பில், தேசிய குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெறக் கோரி மத்திய அரசையும், அவற்றை ஆதரித்த மாநில அரசையும் கண்டித்து அதிராம்பட்டினத்தில் கடைகள் அடைப்பு போராட்டம், வாடகை ஆட்டோ, கார், வேன் வாகனங்கள் வேலை நிறுத்தம், பிரமாண்ட பேரணி, ஆர்ப்பாட்டம் வியாழக்கிழமை காலை நடைபெற்றது.
அதிராம்பட்டினம் ஜமாத்தார்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள், இஸ்லாமிய அமைப்புகள், கிராம பஞ்சாயத்தார்கள் உள்ளிட்ட 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அனைத்து சமுதாயத்தினர் பங்கேற்ற பிரமாண்ட பேரணி, தக்வா பள்ளிவாசல் அருகில் இருந்து புறப்பட்டு, ஜாவியா சாலை, கிழக்கு கடற்கரைச் சாலை வழியாக பேருந்து நிலையம் சென்றடைந்தது.
பின்னர், சிறப்பு அழைப்பாளர்களாக, மவ்லவி எம்.எஸ். அப்துல் ஹாதி முப்தி, மவ்லவி தேங்கை சரபுதீன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கா.அண்ணாதுரை, என்.காளிதாஸ், மவ்லவி சபியுல்லாஹ் அன்வாரி, இராம.குணசேகரன், ஏ.ஜெ ஜியாவுதீன், எஸ்.எஸ்.ஹாரூன் ரஷீத், ஏ.அபுபக்கர் சித்திக், கோவை செய்யது ஆகியோர் கலந்துகொண்டு கண்டன உரை நிகழ்த்தினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில், தேசிய குடியுரிமை சட்ட திருத்தத்தை மத்திய அரசு திரும்பப் பெறக் கோரியும், மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து முழக்கமிட்டனர். நிறைவில் எம்.சாகுல் ஹமீது நன்றி கூறினார்.
போராட்டத்திற்கு, அதிராம்பட்டினம் வர்த்தகர்கள் ஆதரவு தெரிவித்து, அதிராம்பட்டினம் பேருந்து நிலையம், பழைய அஞ்சலக சாலை, பெரிய கடைத்தெரு மார்க்கெட், ஜாவியா சாலை, ஆஸ்பத்திரி தெரு, வண்டிப்பேட்டை, ஈஸ்ட் கோஸ்ட் சாலை உள்ளிட்ட பிரதான பகுதிகளில் உள்ள கடைகள், உணவகங்கள் அடைக்கப்பட்டிருந்தன. மேலும், அதிராம்பட்டினம் கார், வேன், ஆட்டோ வாகனங்கள் ஓட்டுனர் மற்றும் உரிமையாளர்கள் நலச்சங்கத்தினர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
No comments:
Post a Comment