லக்னோ: இந்தியாவின் மிக உயரமான மனிதர் என்று அழைக்கப்படும் தர்மேந்திர பிரதாப் சிங், அகிலேஷ் யாதவ் முன்னிலையில் சமாஜ்வாடி கட்சியில் இணைந்தார்.
உத்தரபிரதேச மாநிலத்தில் அடுத்த மாதம் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. பிப்ரவரி 10-ம் தேதி முதல் மொத்தம் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறவுள்ளது. இதனால் ஒட்டுமொத்த நாடே உத்தரபிரதேசத்தைதான் எதிர்நோக்கி உள்ளது.
பரபரப்பில் மேற்கு உ.பி: கைரானாவில் வீடு வீடாக பிரச்சாரம் நடத்துகிறார் அமித்ஷா.. விழிக்கும் அகிலேஷ்
அங்கு ஆட்சி புரியும் பா.ஜ.க ஆட்சியை தக்க வேண்டும் என்று வியூகங்களை வகுத்து வருகிறது. பாஜகவுக்கு மிகவும் டப் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படும் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாடி கட்சி மீண்டும் ஆட்சிக்கு வர துடிக்கிறது. ஒரு பக்கம் காங்கிரசும் கோதாவில் பலமாக நிற்கிறது. இப்படி முக்கோண போட்டி உள்ள நிலையில் கட்சிகள் பிரசார பணிகளை முடுக்கி விட்டுள்ளன.
தேர்தலுக்கு சில நாட்களே உள்ள நிலையில் கட்சி விட்டு கட்சி மாறும் காட்சிகள் அரங்கேறி வருகின்றன. ஏற்கனவே பாஜகவில் இருந்து முக்கிய தலைகள் சமாஜ்வாடி கட்சி பக்கம் கரை சேர்ந்த நிலையில் இந்தியாவின் மிக உயரமான மனிதரும் சமாஜ்வாடியில் இணைந்துள்ளார். 8 அடி 2 அங்குலம் கொண்ட நாட்டின் மிக உயரமான மனிதரான தர்மேந்திர பிரதாப் சிங், சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவ் முன்னிலையில் கட்சியில் சேர்ந்துள்ளார்.
இது தொடர்பாக சமாஜ்வாடி கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், ''சமாஜ்வாதி கட்சியின் கொள்கைகள் மற்றும் அகிலேஷ் யாதவின் தலைமையின் மீது நம்பிக்கை வைத்து பிரதாப்கரை சேர்ந்த தர்மேந்திர பிரதாப் சிங் சமாஜ்வாடி கட்சியின் உறுப்பினர் பதவியை பெற்றார்'' என்று கூறப்பட்டுள்ளது. 46 வயதான தர்மேந்திர பிரதாப் சிங் மிக உயரமான மனிதராக கின்னஸ் உலக சாதனையில் இடம் பெற்றுள்ளார்.
உத்தரபிரதேச மாநிலம் பிரதாப்கர் மாவட்டத்தில் உள்ள நர்ஹர்பூர் காசியாஹி கிராமத்தை சேர்ந்த தர்மேந்திர பிரதாப் சிங் முதுகலைப் பட்டம் பெற்றவர். இவர் கடந்த ஆண்டு ஏப்ரலில் நடந்த உத்தரபிரதேச பஞ்சாயத்து தேர்தலில் நண்பர் ஒருவருக்காக பிரசாரம் மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment