தேர்தலில் அதிமுக வெற்றி பெற்ற உடன் தலைமை அலுவலகத்தின் பால்கனியில்
நின்று ஜெயலலிதா கை அசைத்து வாழ்த்து சொல்லும் வழக்கமான இடத்தில் நின்று
அதிமுக தொண்டர் ஒருவர் இரு விரல் காட்டி கை அசைத்து மகிழ்ச்சியை
வெளிப்படுத்தினார்.
தமிழகத்தில் கடந்த மே மாதம் நடைபெற்ற சட்டசபைப் பொதுத் தேர்தலில் அதிமுக
234 தொகுதிகளிலும் போட்டியிட்டது. கூட்டணி கட்சிகளில் போட்டியிட்டவர்களும்,
அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தில்தான் போட்டியிட்டனர். திமுக காங்கிரஸ்
கூட்டணி, மக்கள் நலக்கூட்டணி, பாஜக, என பலமுனைப் போட்டி நிலவியது. இந்தத்
தேர்தலில் அதிமுக 134, திமுக 89, காங்கிரஸ் 8, இந்திய யூனியன் முஸ்லிம்
லீக் ஓரிடத்தில் வெற்றி பெற்றன.
இந்தத் தேர்தலின்போது, பணம் அதிகளவில் பரிமாறப்பட்டது என்ற குற்றச்சாட்டின்
கீழ் அரவக்குறிச்சி, தஞ்சாவூர் தொகுதிகளில் தேர்தல் ரத்து செய்யப்பட்டது.
தேர்தலுக்குப் பின்னர் திருப்பரங்குன்றம் தொகுதியில் வெற்றி பெற்ற அதிமுக
வேட்பாளர் சீனிவேலு மரணமடைந்தார். இந்நிலையில், இந்த மூன்று
தொகுதிகளுக்கும் கடந்த 19 ஆம் தேதி தேர்தல் நடந்தது.
அதிமுக வெற்றி
முதல்வர் ஜெயலலிதா உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் நடைபெறும் தேர்தல்
என்பதால் அவரால் பிரச்சாரம் செய்ய இயலவில்லை. ஆனால், அனைத்தும் அவரது
சம்மதத்திற்கு பின்னரே நடக்கிறது என்று அதிமுக கட்சி அறிவித்தது. இந்த
மூன்று தொகுதிகளிலும் அதிமுக அமோக வெற்றி பெற்றுள்ளது. முதன் முதலாக
கட்சியின் பொது செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா பிரச்சாரத்தில்
பங்கேற்காமல் இந்த வெற்றியை அதிமுக பெற்றுள்ளது.
அதிக வாக்கு வித்தியாசம்
மூன்று தொகுதிகளிலும் அதிமுக வேட்பாளர்கள் அதிக வாக்குகள் வித்தியாசத்தில்
வெற்றி பெற்றுள்ளனர். எந்த மாநிலமாக இருந்தாலும், இடைத்தேர்தலில் ஆட்சியில்
இருக்கும் கட்சிதான் வெற்றி பெறும் என்பது சரித்திரம். ஆனாலும், இந்தத்
தேர்தலில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வெற்றி பெற்றுள்ளது.
தொண்டர்கள் உற்சாகம்
இந்த வெற்றியும் சரித்திரத்தை திரும்பிப் பார்க்க வைக்கிறது. கடந்த 1984ஆம்
ஆண்டில் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் எம்ஜிஆர் இருக்க,
அப்போது நடத்த தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெற்றது. கடந்த 32
ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ள நிலையில், முதல்வர்
ஜெயலிதாவும், உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த வெற்றி அதிமுக
தொண்டர்களுக்கு உற்சாகத்தை அளித்துள்ளது. பட்டாசுகளை வெடித்து கொண்டாடினர்.
ஜெ., இடத்தில் தொண்டர்
அதிமுக வெற்றி பெற்ற உடன் கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா, கட்சியின்
தலைமை அலுவலகத்தின் பால்கனியில் நின்று தொண்டர்களுக்கு வாழ்த்து கூறுவார்.
தற்போது ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் இருப்பதால் அவரது இடத்தை
தொண்டர் ஒருவர் கைப்பற்றி விட்டார். கட்சியின் தலைமை அலுவலக பால்கனியில்
நின்று இரு விரல் காட்டி உற்சாக முழக்கமிட்டார்.
தலையில் துண்டு
அதிமுகவின் வெற்றியை ஒருபக்கம் கொண்டாடும் தொண்டர்கள் திமுகவின் தோல்வியை
நையாண்டி செய்து வருகின்றனர். திமுக பொருளாளரும் எதிர்கட்சித்தலைவருமான
ஸ்டாலின் தலையில் துண்டு போட்டு அழுவதாக கார்டூன் வரைந்து அதை தனது
கழுத்தில் தொங்க விட்டார் ஒரு தொண்டர்.
எம்ஜிஆருக்கு பாலபிஷேகம்
அதிமுகவின் நிறுவனர் தலைவர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் சிலைக்கு பல
தொண்டர்கள் பாலபிஷேகம் செய்தனர். அதிமுகவிற்கு கிடைத்த வெற்றியை உற்சாக
முழக்கமிட்டு கொண்டாடினர். அதிமுக தொண்டர்களின் வெற்றிக்கொண்டாட்டம்
தொடர்ந்து வருகிறது.
No comments:
Post a Comment