பழைய ரூபாய் நோட்டை மாற்றுவதில் வங்கி அதிகாரிகள் முறைகேட்டில்
ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ரிசர்வ் வங்கி எச்சரிக்கை
விடுத்துள்ளது.
பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதில் வங்கி அதிகாரிகள்
முறைகேடு ஏதேனும் செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என ரிசர்வ் வங்கி
தெரிவித்துள்ளது. 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என
அறிவிக்கப்பட்டதை அடுத்து நாடு முழுவதும் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி
வருகின்றனர்.
புதிய 500 ரூபாய் நோட்டு புழக்கத்தில் விடப்படாததாலும், பல இடங்களில்
புழக்கத்திற்கு வரவில்லை. பல்வேறு வங்கிகளிலும், ஏடிஎம் மையங்களிலும்
மக்கள் கூட்டம் அலை மோதுகிறது.
இதனிடையே பழைய ரூபாய் நோட்டுகளை வங்கியில் மாற்ற வருபவர்களுக்கு பல்வேறு
கட்டுப்பாடுகளை விதித்தது மத்திய அரசு. பணம் மாற்ற வந்தவர்களே மீண்டும்
மீண்டும் வருவதை தடுக்க விரலில் மை வைக்கப்படும் என்று கடந்த சில
தினங்களுக்கு முன்பு மத்திய அரசு அறிவித்தது. மேலும் பழைய ரூபாய் நோட்டுகளை
மாற்ற வருபவர்களுக்கு ரூ.4,500க்குப் பதிலாக ரூ.2000 மட்டுமே வழங்கப்படும்
என்று கடந்த வாரம் அறிவிக்கப்பட்டது.
இதனிடையே ஒரு சில வங்கி அதிகாரிகள் சிலர் கமிஷனுக்கு பழைய ரூபாய் நோட்டுகளை
மாற்றி தருவதாக புகார் எழுந்தது. இதையடுத்து முறைகேட்டில் ஈடுபடும்
அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என ரிசர்வ் வங்கி
எச்சரித்துள்ளது.
இதுகுறித்து ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், சில இடங்களில் வங்கி
கிளை அதிகாரிகள் அதிக ரொக்கமாக பணம் பறிமாறப்பட்டது எங்கள் கவனத்திற்கு
வந்துள்ளது. வங்கி அதிகாரிகள் மோசடி முறைகளில் ஈடுபட வேண்டாம். ஊழியர்களை
கண்காணித்து ரூபாய் நோட்டை மாற்றுவதில் முறைகேடு செய்யும் வங்கி
அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வங்கிகளுக்கு
அறிவுறுத்தப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள், ரூபாய் நோட்டு விவரத்தை
வங்கிகள் பதிவு செய்ய வேண்டும். டெபாசிட் ஆவணங்களை வங்கிகள் முறையாக
பராமரிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment