டெல்லி: பல்வேறு சர்ச்சைகளில் பாஜக சிக்கியுள்ள பரபரப்பான சூழ்நிலையில் நாடாளுமன்றம் நாளை கூடுகிறது. எனவே, கூட்டத்தொடரை சுமுகமாக நடத்துவது குறித்து கூட்டணி கட்சிகளுடன் பிரதமர் மோடி இன்று முக்கிய ஆலோசனை நடத்துகிறார். நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் நாளை தொடங்கி ஆகஸ்டு மாதம் 13ம் தேதி வரை நடைபெற உள்ளது.
நிதி மோசடி வழக்கில் அமலாக்கப்பிரிவினரால் தேடப்படும் ஐ.பி.எல். முன்னாள் தலைவர் லலித் மோடிக்கு மத்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ், ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே ஆகியோர் உதவிய விவகாரத்தையும், மத்திய பிரதேசத்தில் நடந்த வியாபம் ஊழல் விவகாரத்தையும் மத்திய அரசுக்கு எதிராக காங்கிரஸ் கையில் எடுத்து உள்ளது. சுஷ்மா சுவராஜையும், வசுந்தரா ராஜேவையும் பதவியில் இருந்து நீக்காவிட்டால் நாடாளுமன்றத்தை நடத்த விடமாட்டோம் என்று ஏற்கனவே எச்சரித்துள்ள காங்கிரஸ் கட்சி, வியாபம் ஊழலுக்கு பொறுப்பு ஏற்று மத்திய பிரதேச மாநில பாரதீய ஜனதா முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் பதவி விலக வேண்டும் என்றும் வற்புறுத்தி வருகிறது. மேலும் ஊழல் புகாரில் சிக்கிய சட்டீஷ்கர் முதல்வர், ராமன் சிங் ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் கூறி வருகிறது.
ஆனால் காங்கிரசின் இந்த கோரிக்கையை ஏற்க முடியாது என்று பாஜக திட்டவட்டமாக அறிவித்து உள்ளது. எனவே இந்த பிரச்சினைகள் மூலம் மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுக்க காங்கிரஸ் வரிந்து கட்டி வரும் பரபரப்பான சூழ்நிலையில் நாடாளுமன்றம் நாளை கூடுகிறது. காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பை சமாளிப்பது குறித்து பாரதீய ஜனதா ஏற்கனவே ஆலோசித்து வருகிறது. நாடாளுமன்றத்தில் பாஜக தலைவர்களுக்கு எதிரான பிரச்சினையை காங்கிரஸ் கிளப்பும் போது, இமாசலபிரதேச காங்கிரஸ் முதல்வர் வீரபத்ர சிங் மீதான சொத்து குவிப்பு வழக்கு விவகாரத்தை கிளப்புவது என்று பாஜக தீர்மானித்து உள்ளது. எதிர்க்கட்சிகட்சிகள் கிளப்பும் பிரச்சினைகளை சமாளிப்பது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி இன்று (திங்கட்கிழமை) தனது இல்லத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். அவர் கூட்டணி கட்சிகளுடன் ஆலோசனை நடத்துவது இதுவே முதல் தடவை ஆகும்
No comments:
Post a Comment