மதுரையில் கட்டாய ஹெல்மெட் உத்தரவை எதிர்த்து போராட்டங்கள் வெடித்துள்ளன. ஆங்காங்கே போராட்டங்கள் நடந்த நிலையில் மதுரை உயர்நீதிமன்றக் கிளையை முற்றுகையிட்டு வக்கீல்களும் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இன்று முதல் தமிழகத்தில் கட்டாய ஹெல்மெட் விதியை அமல்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து இன்று காலை முதல் ஹெல்மெட் போடாதவர்களை போலீஸார் பிடித்து லைசென்ஸ் உள்ளிட்டவற்றைப் பறிமுதல் செய்யும் வேலையில் இறங்கியுள்ளனர்.
இது பொதுமக்களிடையே கடும் ஆட்சேபனையை ஏற்படுத்தியுள்ளது. ஹெல்மெட் போடுவது தலைக்கு நல்லதுதான் என்றாலும் கூட அந்த விதியை அமல்படுத்துவதில் சில ஒழுங்குகள் செய்யப்பட வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
குறிப்பாக பெண்கள், குழந்தைகளுக்கு ஹெல்மெட்டை கட்டாயமாக்கக் கூடாது என்று அவர்கள் கோருகின்றனர். இருப்பினும் கட்டாய ஹெல்மெட் விதியை எதிர்த்துப் போடப்பட்ட வழக்குகளை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது.
இந்த நிலையில் ஹெல்மெட்டுகளுக்கு எதிராக மதுரையில் போராட்டம் வெடித்துள்ளது. பல இடங்களில் கட்டாய ஹெல்மெட்டை எதிர்த்து போராட்டங்கள் நடந்துள்ளன. வக்கீல்களும் போராட்டத்தில் குதித்தனர். மதுரை உயர்நீதிமன்ற கிளையை முற்றுகையிட்டு வக்கீல்கள் போராட்டம் நடத்தினர். இதேபோல கோரிப்பாளையம் பகுதியிலும் ஹெல்மெட் எதிர்ப்புப் போராட்டம் நடைபெற்றது.
No comments:
Post a Comment