மாஸ்கோ: ரஷ்யா ரகசியமாக தயாரித்து வரும் ராணுவ ஆகாயக் கப்பலின் புகைப்படங்கள் இணையத்தில் கசிந்துள்ளது. சுமார் 15 மில்லியன் டாலர் செலவில் ராணுவத்திற்கான ஆகாயக் கப்பல்களை ரஷ்யா ரகசியமாக தயாரித்து வருகிறது. உலக நாடுகள் மற்ற நாடுகளிடமிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள ஏவுகணைகளை, போர் விமானங்களைத் தயாரித்து வரும் வேளையில், ரஷ்யா, சீனா உள்ளிட்ட சில நாடுகள் மற்ற நாடுகளின் மீது படையெடுக்க ஏவுகணைகள், போர் விமானங்கள் மற்றும் போர்க் கப்பல்களைத் தயாரித்து வருகின்றன.
அந்தவகையில் ரஷ்யா, சுமார் 200 ராணுவ வீரர்களை அல்லது 60 டன் கார்கோ பொருட்களை ஏற்றிச் செல்ல வசதியான ராணுவ ஆகாய கப்பலை ரகசியமாக தயாரித்து வருகிறது. அக்குவார் ரோஸ்ஏரோ சிஸ்டம் இந்த ஆகாயக் கப்பலை உருவாக்கி வருகிறது. வரும் 2018ம் ஆண்டு இது முழுமையாக தயாராகும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், தற்போது இந்த ஆகாய கப்பல் தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்த ஆகாய கப்பலின் முக்கிய அம்சம் என்னவென்றால் , இதற்கு விமான ஓடு பாதை (ரன் வே) தேவையில்லை. நின்ற நிலையில் இருந்து இந்த ராணுவ ஆகாய கப்பல் அப்படியே செங்குத்தாக எழுந்து பறக்க வல்லது ஆகும். மொத்தம் 2 மாடல்களில் இது தயாராகிறது. ஒன்று மணிக்கு 86 மைல் வேகத்தில் செல்லக் கூடியது. இது பெரியது. சிறிய ரக ஆகாயக் கப்பல் மணிக்கு 105 கிலோமீட்டர் வேகத்தில் செல்லக் கூடியதாகும். மைனஸ் 40 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையிலும் இது செல்லக் கூடியதாகும். காற்றை விட மெல்லியது என்று ரஷ்யர்களால் வர்ணிக்கப்படும் இந்த ஆகாயக் கப்பலானது, விமானங்கள், ஹோவர்கிராப்ட் ஆகியவற்றின் கூட்டுக் கலவையாகும்.
No comments:
Post a Comment