Latest News

சென்னையில் எங்கெங்கு காணினும் 'ஹெல்மெட்' தலைகள்....300 இடங்களில் போலீஸ் அதிரடி சோதனை!!


தமிழகம் முழுவதும் இருசக்கர வாகன ஓட்டிகள் கட்டாயம் ஹெல்மெட் அணிவது இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. சென்னையில் 90% வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிந்திருந்தனர். மேலும் ஹெல்மெட் அணிவதை கண்காணிக்க சென்னையில் 300 இடங்களில் போலீசார் சோதனை நடத்தினர். இருசக்கர வாகனங்களில் செல்பவர்களில் பெரும்பாலானவர்கள், விபத்தில் சிக்கும் போது தலையில் அடிபடுவதாலேயே உயிரிழக்கிறார்கள். இதனை கருத்தில் கொண்டு, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன், 2 வாரங்களுக்கு முன்னர் அதிரடி தீர்ப்பு ஒன்றை வழங்கினார். இருசக்கர வாகனம் ஓட்டுபவர்களும், பின்னால் அமர்ந்திருப்பவர்களும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும். போலீசார் இதனை தீவிரமாக கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டிருந்தார். ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுபவர்களின் ஆவணங்களை பறிமுதல் செய்ய வேண்டும் என்றும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது.

கட்டாய ஹெல்மெட் அமல் இதையடுத்து நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த தமிழக அரசு தீவிர நடவடிக்கையை எடுத்துள்ளது. இன்று முதல் நீதிமன்ற உத்தரவுக்கு இணங்க, இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதன்படி தமிழகம் முழுவதும் இன்று முதல் கட்டாய ஹெல்மெட் தீவிரமாக அமல்படுத்தப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும்... இதற்காக அனைத்து மாவட்டங்களிலும் போலீசார் சிறப்பு குழுக்களை அமைத்திருந்தனர். இக்குழுவில் இடம் பெற்ற போலீசார் சாலை சந்திப்புகளில் நின்று கொண்டு ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனங்களில் செல்பவர்களுக்கு அபராதம் விதித்தனர்.

சென்னையில் 90% பேர் ஹெல்மெட்டுடன் சென்னையில், 300-க்கும் மேற்பட்ட இடங்களில் வாகன சோதனை நடத்தப்பட்டது. சென்னை நகரில் 90 சதவீதத்துக்கும் அதிகமானோர் ஹெல்மெட் அணிந்துதான் வாகனம் ஓட்டினர்.

லைசென்ஸ் பறிமுதல் முன்னைப் போல ஹெல்மெட் அணியாமல் இருந்தால் இனி 'ஸ்பாட் பைன்' விதிக்கப்பட மாட்டாது. இன்று முதல் ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டுபவர்களின் லைசென்ஸ் உள்ளிட்ட ஆவணங்கள், மோட்டார் சைக்கிள் ஆகியவை உடனடியாக பறிமுதல் செய்யப்படுகின்றன.

பெண்களுக்கும் ஹெல்மெட் ஹெல்மெட் அணியாமல் வந்தவர், புதிய 'ஹெல்மெட்'டை வாங்கியதற்கான ரசீதை காட்டிய பின்னரே இவை திருப்பி ஒப்படைக்கப்படும். பறிமுதல் செய்யப்படும் மோட்டார் சைக்கிள் மற்றும் ஆவணங்களை நீதிமன்றம் மூலமே திரும்ப பெறமுடியும். மோட்டார், சைக்கிளில் பின்னால் அமர்ந்திருப்பவரும் ஹெல்மெட் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பெண்களும் அவசியம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

469 பேர் மீது நடவடிக்கை சென்னையில் பகல் 12 மணிவரையிலான சோதனையில் மொத்தம் 469 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகர போக்குவரத்துக் காவல்துறை தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.