சென்னையில் இன்று நடந்த சாலை விபத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் ஒருவர் தண்ணீர் லாரி மோதி பரிதாபமாக உயிரிழந்தார். ஹெல்மெட் அணிந்திருந்தும் அந்த இளைஞர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் இன்று முதல் நீதிமன்ற உத்தரவுப்படி இரு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் ஹெல்மெட் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஹெல்மெட் அணியாதவர்களை பிடித்து அபராதம் விதிக்க போலீசாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இரு சக்கர வாகனத்தை ஓட்டுபவர் மட்டுமின்றி, பின்னால் அமர்ந்திருப்பவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிந்திருக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. இதனால் ஹெல்மெட் விவகாரத்தில் பல்வேறு குழப்பங்கள் நீடிக்கின்றன. ஹெல்மெட் அணிந்திருந்தால் மட்டும் விபத்துகளில் இருந்து தப்பிக்க முடியுமா என ஏற்கனவே வாகன ஓட்டிகள் கேட்டு வருகின்றனர். இந்நிலையில், இன்று காலை 9 மணியளவில் கிண்டி, சென்னை - வேளச்சேரி மெயின் ரோட்டில் நீச்சல் குளம் அருகே இருசக்கர வாகனம் ஒன்று தண்ணீர் லாரியில் மோதி விபத்துக்குள்ளானது. இதில், இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த கண்ணகி நகரைச் சேர்ந்த செல்வக்குமார் (22) வயது இளைஞர் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்து விரைந்து வந்த கிண்டி போலீசார் செல்வக்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் தலைமறைவான தண்ணீர் லாரி டிரைவரை தேடி வந்தனர். போலீசாரின் விசாரணையில் விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவர் திருவொற்றியூரைச்சேர்ந்த கணேசன் (42) என்பது தெரியவந்தது. இந்நிலையில், கிண்டி போலீசில் கணேசன் சரண் அடைந்தார். அவரிடம் விபத்து குறித்து கிண்டி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இன்று காலை நடந்த இந்த விபத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. விபத்தின் போது செல்வக்குமார் ஹெல்மெட் அணிந்திருந்தார். தற்போது இந்த விபத்து புகைப்படம் வாட்ஸ் அப், பேஸ்புக் உள்ளிட்டவற்றில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது. ஹெல்மெட் அணிந்தால் மட்டும் விபத்துகளில் இருந்து தப்பிக்க முடியுமா, சாலை விபத்துக்களுக்கு ஹெல்மெட் போடுவது ஒன்று மட்டும் தான் தீர்வா என்ற கேள்விகளோடு இந்தப் புகைப்படம் அனுப்பப்படுகிறது.
No comments:
Post a Comment