Latest News

  

அதிரையை அசர வைத்த கொரியர் கம்பெனி!


"பொதங்கெழம ஜித்தாவுக்கு ஆளு போவுது! தபால் ஈக்கிதா?"

"சாமான் கொண்டு போறாங்களான்னு தெரியாது. தபால மட்டும் என்னட்டக் கொடுத்துட்டு, நான் சொன்னேன்னு சொல்லாம சாமான் கொண்டுபோக முடியுமான்னு நீங்களே கேட்டுப்பாருங்க"
அதிரைவாசிகளுக்கு நன்கு பரிச்சயமான உரையாடல்தான் இது. கொரியர் சர்வீஸும் டோட்-டு-டோர் டெலிவரியும் நமதூர் மக்களுக்கு அறிமுகமாகும் முன்பே,நன்கு அறிமுகமான நடமாடும் தபால்காரர்.வெளிநாட்டு கடிதங்களுக்கு AIRMAIL தபால்தலை (Stamp) 11 ரூபாயாக இருந்தபோது, வெரும் 3 ரூபாய் கொடுத்தால் கொரியரைவிட விரைவாகச் சேர்க்கும் தொழில் நுட்பத்தை அறிந்து, குறைந்தபட்ச எழுத்தறிவு இருந்தாலேபோதும் உள்ளூரில் உழைக்கமுடியும் என்பதற்கு உதாரணமாக விளங்கும் தொழில் முனைவர்.

அதிரையர்களுக்கு இவரைப்பற்றி மேலதிக அறிமுகம் தேவையில்லை. உள்ளங்கையில் உலகத்தையே சுருக்கிய செல்போன் மூலம் SMS மற்றும் MMS செய்திபரிமாற்றங்களைத் தாண்டி முகம் பார்த்து பேசக்கூட நேரமில்லாமல் FACEBOOK இல் மூழ்கிய இளைய தலைமுறையினரும், அதிரைக்கு அப்பாற்பட்ட அக்கம் பக்கத்தினரும் அறிந்து கொள்ள வேண்டிய நபர்.

வளைகுடாவும் கீழைத்தேய நாடுகளுமே அதிரையர்களின் போக்கிடமாகிப்போன காலகட்டத்தில் தகவல் தொடர்பு சாதனமாக விளங்கிய வெளிநாட்டுக் கடிதங்களை வீடுவீடாகச் சேகரித்து, நாடு, பகுதிவாரியாகப் பிரித்து அந்தந்த நாட்டுக்குச் செல்லும் அதிரையர்களிடம் உரிமையுடன் கட்டாகக்கொடுக்கும் இவரது இயற்பெயர் முத்து மரைக்காயர். எனினும் "தொனாகானா" என்றால் அறியாத சீனியர் ஸபுறாளிகள் (வெளிநாட்டில் உழைத்தவர்கள்) அரிது என்றால் மிகையில்லை.

காலை 6:30 மணிக்குத் தொடங்கும் இவரது நடமாடும் அலுவலகப் பணி நள்ளிரவு தாண்டி 1:00 மணி, 2:00 மணிவரை கூட நீடிக்கும். சென்னையிலிருந்து காரைக்குடி செல்லும் கம்பன் எக்ஸ்பிரஸ் காலை 6:40 க்கு அதிரையைக் கடந்து செல்லும். கம்பனிலிருந்து இறங்கும் வெளிநாட்டு ஸபுறாளிகளை அடையாளம் கண்டு கடுதாசி,சாமான் ஈக்கிதா? சாய்ங்காலம் வந்து வேங்கிக்றேன்" என புன்முறுவலோடு கேட்பார்.அவர்களும் கிடைத்த ஒருமாத லீவில்ஒருநாள் மிச்சம் பிடிக்கலாமென்று கண்டிப்பா வந்துடுங்க தொனாகானா! வெளியூர் தபால்களும் ஈக்கிது. நான் போஸ்ட்ல அனுப்பிடுறேன். மத்ததை நீங்க 'உம்மா ஊட்ல' வந்து வாங்கிக்குங்க" என்று சொல்வதுண்டு.

இப்படியாக, வெளிநாட்டிலிருந்து வருபவர்கள் கொண்டுவரும் உள்ளூர் கடிதங்களை உரியவர்களிடம் சேர்ப்பதும், வெளிநாட்டுக்குச்செல்லும் கடிதங்களைத் திரட்டி பொட்டி கட்டும்முன்பே கொடுப்பதும் இவரது வேலை. வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் மொத்தமாக கடிதங்களைக் கொடுப்பதால் தொகையும் கொஞ்சம் அதிகமாக இருக்கும். சிலர் அன்பாக கோடாளி தைலம், வீசக்கார தைலமும் கொடுப்பதுண்டு.

தொனாகானாவால் அதிரைவாசிகள் பலனடைந்தாலும், காலை 8-12 மற்றும் மாலை 3-5 வரை வேலை செய்யும் அதிரை தபால் அலுவலகம் இவரால் கொஞ்சம் பாதிக்கப்பட்டதாகச் சொல்லப்பட்டதுண்டு. ஒருமுறை இவரிடம் இருந்த கடிதங்களைப் பார்த்துவிட்டு,தபால்துறைக்கு இழப்பு ஏற்படுத்துவதால் உங்கள்மீது சட்டப்படி நடவடிக்கை ஏன் எடுக்கக்கூடாது என்று தபால்துறை அதிகாரிகள் கேட்டதாகவும், அதற்கு எனக்கு வேறு தொழில் தெரியாது. ஆகவே, உள்ளூர் கடிதங்களை பட்டுவாடா செய்யும் தபால்காரராக என்னையும் பணிக்குச் சேர்த்துக்கொண்டால், அவர்களில் யார் லீவில் இருந்தாலும் அவர்களுக்குப் பதிலாக நான் பட்டுவாடா செய்வேன்" என்று சொன்னதாக கேள்விப்பட்டதுண்டு.
இவரிடம் காணப்படும் சுவாரஸ்யமான தோற்றம் என்னவென்றால் வலதுகால் செருப்பை இடது காலுக்கும், இடது கால் செருப்பை வலது காலுக்கும் அணிந்திருப்பார்.தெருத்தெருவாக அலைந்து திரிந்து கடிதங்களை திரட்டுவதால் செருப்பு ஒருபக்கமாகத் தேய்ந்துவிடும் என்ற முன்னெச்சரிக்கையாம்! தொனாகானா என்பதற்கு சிலர் தொங்கும் கடிதம் என்றும் விரிவாக்கம் செய்வதுண்டு.

ஹலாலாக உழைக்கும் எந்தத் தொழிலும் கேவலமல்ல. உழைக்காமல் இருப்பதே கேவலம் என்பதை சொல்லாமல் சொல்லும் இவர், சமீபத்தில்,செல்ஃஃபோன், இணைய தளம் என தொலைத்தொடர்பு சுருங்கி விட்டதாலும், கடிதப் போக்குவரத்து அறவே அற்றுப் போய்விட்டதாலும், இவரது தொழிலை தொடர இயலவில்லை. . இவரைப் பற்றி  மேலும் அறிந்தவற்றை  வாசகர்கள் பின்னூட்டத்தில் பகிர்ந்துகொள்ளலாம்.

ஆக்கம்: அதிரைக்காரன்

நன்றி : அதிரை எக்ஸ்பிரஸ்

9 comments:

  1. ஜனாப். தொனா.கானா. முத்து மரைக்காயர் :

    மறந்து போன இவரைப்பற்றி நல்லதொரு நினைவூட்டல் !
    பக்கத்திலிருந்தும் கண்டு நாளாகி விட்டது காக்காவை !

    சிக்கனத்துக்கு எடுத்துக்காட்டாவும்......

    சேமிப்புக்கு பெயர் சொல்லுமளவுக்கும்.........

    தன் முடியாத தம்பிக்கு நல்ல பாதுகாவலராகவும்........

    லட்டருக்கு நல்ல ஒரு அமானுதரராகவும்..........

    சிறந்த சேவையை செய்து வந்தீர்கள்.

    ReplyDelete
  2. //ஹலாலாக உழைக்கும் எந்தத் தொழிலும் கேவலமல்ல. உழைக்காமல் இருப்பதே கேவலம் என்பதை சொல்லாமல் சொல்லும் இவர், சமீபத்தில்,செல்ஃஃபோன், இணைய தளம் என தொலைத்தொடர்பு சுருங்கி விட்டதாலும், கடிதப் போக்குவரத்து அறவே அற்றுப் போய்விட்டதாலும், இவரது தொழிலை தொடர இயலவில்லை. . இவரைப் பற்றி மேலும் அறிந்தவற்றை வாசகர்கள் பின்னூட்டத்தில் பகிர்ந்துகொள்ளலாம்.//

    தொழில் முடங்கி விட்டதால்...இவரின் நிலைமை "எளிமை"யாகத்தான் உள்ளது.

    இவரின் விசுவாசிகள் இவரோடு தொடர்புக் கொண்டு தாராளமாக "அன்பை"ச் செலுத்தலாம். மகிழ்ச்சியாக ஏற்றுக்கொள்ளக் கூடியவர்.

    ReplyDelete
  3. உழைப்புக்கு முன் மாதரி என்று தான் சொல்லவேண்டும் தோனா கான அவர்களுக்கு இன்றும் ரசிகர்கள் உண்டு அவரின் சிறந்சேவையை நாம் அனைவரும் பாராடிட வேண்டும். தனக்கென்று மட்டுமல்லாமல் தன் உடன் பிறப்புக்கும் சேர்து இரவு பகல் என்று கூட பாராமல் இன்று முதல் இன்றுவரை உழைப்பே உயர்வு என்று வாழ்ந்து கொண்டும் வரும் தோனா கான உழைக்காமல் ஊரை சுற்றி கொண்டிருக்கும் ஒவ்வெருவருக்கும் இவர் ஒரு எடுத்து காட்டு

    ReplyDelete
  4. ivarai patri theriyaatha innoru visayam (munnar) thona kaana nadu iravil mattume (sediyan kulathil) kulippathu ivarathu valakkam athuvum avarudaiya paiyai(bag) oru kayiraal katti athai pidithu konde kulippar(appadi ennathaan pokkisamo?)

    ReplyDelete
  5. வசதியான குடும்பத்தில் பிறந்து ஏழ்மையில் வாழ்பவர் தோனா கானா வரும் ரமளானில் ஜக்காத்தை சேககனா நிஜாமுக்கு அனுப்பி அவருக்கு கொடுக்கலாம் .

    ReplyDelete
  6. தொழிலிலே கண்ணாய் இருந்தவர் முதுகில்
    ..... தொங்குபை கடிதமும் காண
    வழியிலே விழியை வைத்திடும் ஆவல்
    .....வடிவுடன் தீர்ந்திடும் கடிதாய்
    பழியினை வகுத்து குற்றமும் சுமத்திப்
    .... படுத்தினர் இடுக்கணில் இவரை
    குழியினுட் செல்லும் மவுத்வரும் வரைக்கும்
    ..... குறைவிலா நடையினைக் காண்பாய்!


    தொ.க = தொழிலில் கண்ணானவர்

    ReplyDelete
  7. தோனா.கான பற்றி சொன்னீர்கள் நான் அவருடைய தம்பியை பற்றி சொல்கிறேன் கேளுங்கள்......
    செல்ல பெயர் மம்மூனி பார்பதற்க்கு முதியோர் தோற்றம் ஆனால் வயதோ 40க்கு கீழ். ஆண்கள்
    இல்லாத வீட்டுகளுக்கு வெளிவேலை பார்த்துக்கொடுப்பது அதாவது கடைத்தெருவில் இறச்சி, மீன்,
    காய்கறி மளிகை கடையில் சீனி,மல்லி வீட்டுக்கு தேவையான பொருட்களும் ரேசன் கடைக்கும்
    சென்று வருவார்..இதன் மூலம் கிடைக்கும் ஊதியத்தை கொண்டு அவரும் அவருடைய சகோதரரான
    தோனா.கான இன்று வரையும் வாழ்ந்து வருகிறார். மேலும் இவருடை இறையச்சைத்தை பற்றி சொன்னால்
    கண்களில் கண்ணீர் விடாதவர்கள் கூட கண்ணீர் விடுவார்கள்... ஐவேலை தொழுகையும் அந்தெந்த வஃத்துகளில்
    இமாம் ஜமாத்துடன், முதல் ஷஃபில் தொழுவார் தனியாக......ஜூம்மா பள்ளியில் தொழுபவர்களுக்கு நன்றாக தெறியும்...
    நீங்கள் நினைக்களாம் ஏன்னெற்று மேல குறிபிடேன். யாரும் தன்னை திட்டிவிட கூடாதென்றும் தன் அறிகில் யாரும் வரமாடார்
    என்று தான். யாரிடமும் கையேந்தமாட்டார் ஆண்களை பெரியவர் சிரியவர் என்று பாராமல் எல்லோரையும் காக்கா என்பார் இதைப்போன்று
    பெண்களை பெரியவர் சிரியவர் என்று பாராமல் எல்லோரையும் ராத்தா என்பார்....

    ReplyDelete
  8. ஏழ்மையில் வாழ்பவர் தோனா கானா வரும் ரமளானில் ஜக்காத்தை சேககனா நிஜாமுக்கு அனுப்பி அவருக்கு கொடுக்கலாம் .

    ReplyDelete

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceTemplateism Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.