இந்த காலத்திலும் சேவை மனப்பான்மையோடு வெறும் 20 ரூபாய்க்கு சிகிச்சை
அளித்து வந்த கோவையை சேர்ந்த டாக்டர் பாலசுப்பிரமணியன் மாரடைப்பால் மரணம்
அடைந்தார்.
உடல்நலம் சரியில்லை என்றால் மக்கள் மருத்துவமனைகளுக்கு
செல்ல அஞ்சுகிறார்கள். காரணம் ஒரு சாதாரண காய்ச்சலாக இருந்தால் கூட அனைத்து
பரிசோதனைகளையும் செய்ய வைத்து நம்ம பர்ஸை ஓட்டைப்போட்டுவிடுகிறார்கள்.
அத்தனை பரிசோதனைகளையும் செய்த பிறகு உங்களுக்கு சாதாரண காய்ச்சல் தான்
என்கிறார்கள். காய்ச்சலுக்கே பர்ஸ் ஓட்டையாகிவிடும் நிலையில் ஏதாவது பெரிய
பிரச்சனை என்றால் சொல்லவா வேண்டும்.
இப்படி மருத்துவம் பல இடங்களில் வியாபாரம் ஆகிவிட்ட நிலையில் கோவையை
சேர்ந்த டாக்டர் பாலசுப்பிரமணியன் சேவைக்காக வைத்தியம் செய்து வந்தார். ஒரு
காலத்தில் வெறும் 2 ரூபாய்க்கு சிகிச்சை அளித்து வந்தார். மருந்துகளின்
விலைவாசி ஏறிய பிறகு அவர் தனது சிகிச்சைக்கான கட்டணத்தை 2 ரூபாயில் இருந்து
மெல்ல மெல்ல உயர்த்தி கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு 20 ரூபாயாக்கினார்.
ஆம், வெறும் 20 ரூபாய்க்கு சிகிச்சை அளித்து வந்தார் பாலசுப்பிரமணியன்.
அந்த ரூ.20 கூட கொடுக்க முடியாதவர்களுக்கு இலவசமாக சிகிச்சை அளித்து
வந்தார். இதில் விசேஷம் என்னவென்றால் தன்னை நம்பி ஏராளமானோர் உள்ளனர்
என்பதால் மருத்துவமனைக்கு விடுப்பே விடாமல் வேலை பார்த்து வந்தார்.
இந்த காலத்தில் இப்படி ஒரு டாக்டரா என அனைவரையும் வியக்க வைத்த
பாலசுப்பிரமணியன் வாக்கிங் சென்றபோது நேற்று மாரடைப்பால் மரணம் அடைந்தார்.
20 ரூபாய் டாக்டர் என்று அழைக்கப்பட்ட அவரின் மரண செய்தி அறிந்து கோவை
மக்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
No comments:
Post a Comment