நாகை அருகே வீட்டு வேலைக்காரனோடு சேர்ந்து சாம்பாரில் எலி மருந்தை கலந்து உடல் நிலை சரியில்லாத கணவனை தீர்த்து கட்டிய மனைவியின் செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாகை மாவட்டம் வேட்டைக்காரனிருப்பு அடுத்துள்ள சடையன் காடு பகுதியை சேர்ந்தவர் தேவேந்திரன். திமுக கிளை செயலாளரான இவர் தனது மனைவி சூர்யாவுடன் வசித்து வருகிறார். கடந்த வருடம் நவம்பர் மாதம் தேவேந்திரனுக்கு மஞ்சள் காமாலை மற்றும் கல்லீரல் பாதிப்பு ஏற்பட்டு அடிக்கடி மருத்துவமனைக்கு சென்று வந்துள்ளார். திருச்சியில் உள்ள வெல்கர் என்ற தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற தேவேந்திரன் கடந்த 15.12.2021 அன்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளார். உடல்நிலை தேறி இருந்த தேவேந்திரனுக்கு 4.1.2022 அன்று மீண்டும் உடல்நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து சிகிச்சைக்காக அதே மருத்துவமனைக்கு சென்றபோது, அவருடைய உடல் நிலை மோசமாக இருப்பதாகவும், திருச்சி காவேரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறும் அறிவுறுத்தி உள்ளனர்.
அதனைத்தொடர்ந்து திருச்சி காவேரி மருத்துவமனையில் அவருடைய உறவினர்கள் தேவேந்திரனை சிகிச்சைக்காக அனுமதித்த நிலையில், அவர் 06.01.2022 அன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். பின்னர் இதனால் சோகம் அடைந்த அவருடைய உறவினர்கள் தேவேந்திரன் சடலத்தை வேட்டைக்காரனிருப்பு கொண்டுவந்து அங்குள்ள மயானத்தில் எரித்து இறுதிச்சடங்கு செய்துள்ளனர். தேவேந்திரன் உயிரிழந்து 15 நாட்கள் ஆன நிலையில் அவருடைய மனைவி சூர்யா எந்த கவலையும் இல்லாமல் செல்போனில் தனியாக சிரித்து பேசுவதை அவருடைய உறவினர் சதீஷ்கண்ணா பார்த்து சந்தேகமடைந்து உள்ளார். சூர்யா பேசிக் கொண்டிருந்த அவருடைய கணவர் தேவேந்திரனின் செல்போனை அவருடைய உறவினர்கள் சதீஷ்கண்ணா உள்ளிட்டோர் சோதனை செய்து பார்த்த போது, அவருடைய வீட்டில் 15 ஆண்டுகளாக வேலை பார்த்து வந்த சந்திர சேகரன் என்பவருடன் சூர்யா அதிகம் பேசியது கண்டுபிடிக்கப்பட்டது.
பின்னர் சந்திரசேகரை அவருடைய உறவினர்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். அவரிடம் வேட்டைகாரணிருப்பு போலிசார் நடத்திய விசாரணையில், சூர்யாவுக்கும், வேலைக்காரன் சந்திரசேகரணுக்கும் கள்ளத்தொடர்பில் இருந்ததை போலிசார் கண்டறிந்தனர். மேலும் கடந்த 28.12.2021 அன்று சூர்யா மற்றும் சந்திர சேகர் ஆகிய இருவரும் சேர்ந்து தேவேந்திரன் சாப்பிட்ட சாம்பாரில் எலி மருந்தை கலந்து கொடுத்ததை ஒப்புக்கொண்டுள்ளார். அதனை தொடர்ந்து சந்திரசேகரை கைது செய்த வேட்டைக்காரனிருப்பு போலீஸார், கணவரை கொலை செய்த சூர்யாவையும் கைது செய்து வேதாரணியம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.
No comments:
Post a Comment