
பெங்களூர்: கொரோனா வைரஸ் பாதிப்பு அறிகுறிகளுடன் பெங்களூரில் 19
பேர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாக, கர்நாடக சுகாதாரத்துறை அமைச்சகம்
தகவல் வெளியிட்டுள்ளது.
சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு
கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. அங்கு பலியானோர் எண்ணிக்கை என்பது 130ஐ
தாண்டிவிட்டது. அந்த நாட்டிலிருந்து வேறு பல நாடுகளுக்கும் இந்த வைரஸ்
வேகமாக பரவி கொண்டு இருக்கிறது.
இதையடுத்து,
இந்தியாவின் பல்வேறு நகரங்களில் உள்ள விமான நிலையங்களில் சீனாவில் இருந்து
வரக்கூடிய பயணிகள் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர். பிற
நாடுகளிலும் இந்த வைரஸ் நோய் பரவி இருப்பதால் பிற நாடுகளிலிருந்து
வரக்கூடியவர்கள் சோதனைக்கு உட்படுத்தப் படுகிறார்கள்.
கர்நாடக மாநில தலைநகர் பெங்களூரு தகவல்
தொழில்நுட்ப தலைநகரம் என்று அழைக்கப்படக்கூடிய நகரம். அங்கு உலகின் பல
நாடுகளில் இருந்தும் பயணிகள் ஆயிரக்கணக்கானோர் விமான நிலையத்திற்கு வந்து
செல்கிறார்கள். எனவே விமான நிலையத்தில் கொரோனா வைரஸ் அறிகுறிகளுடன் யாராவது
வருகிறார்களா என்பது தொடர்பாக தீவிரமாக சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
இந்த
நிலையில்தான் 19 பேருக்கு இவ்வாறு அறிகுறி இருப்பது தெரியவந்துள்ளதாகவும்,
அதில் 8 பேர் பெங்களூரு வில்சன் கார்டன் பகுதியில் அமைந்துள்ள
ராஜீவ்காந்தி நெஞ்சக நோய் சிகிச்சை இன்ஸ்டியூட் மருத்துவமனையில் தனி
வார்டில் வைத்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் கர்நாடக சுகாதாரத்துறை
இன்று ஒரு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இது தவிர, வைரஸ் அறிகுறியுடன்
தென்பட்ட 11 பேர் அவர்களது வீடுகளில் வைத்து கண்காணிக்கப்படுவதாக
கூறப்படுகிறது. இந்த நபர்கள், அடுத்த, 28 நாட்களுக்கு வெளியே எந்த பொது
நிகழ்ச்சியில் பங்கேற்க கூடாது. வீட்டுக்குள்ளேயே இருக்க வேண்டும் என்று
அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பெங்களூரின் இதமான தட்பவெப்பம் இது போன்ற
வைரஸ்கள் எளிதாக பரவுவதற்கு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்து விடும்
என்பதால் பிற நகரங்களை விட இங்கு தீவிரமாக கண்காணிப்பு நடவடிக்கைகள்
எடுக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment