சர்வதேச அளவில் புகழ் பெற்ற பெங்களூரில் உள்ள இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் சயின்ஸ் கல்வி நிலையத்தில் 4 ஆண்டு இளநிலைப் பட்டப் படிப்புகளில் பிளஸ் டூ தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் சேரலாம்.
அறிவியல் படிப்புகளைக் கற்றுத் தருவதில் சர்வதேச அளவில் புகழ் பெற்ற கல்வி நிறுவனம் பெங்களூரில் உள்ள இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் சயின்ஸ் (ஐ.ஐ.எஸ்சி.). நூறு ஆண்டுகள் பழமையான இந்த கல்வி நிறுவனத்தில் உயிரியல், வேதியியல், சுற்றுச்சூழல் அறிவியல், மெட்டீரியல்ஸ், கணிதம், இயற்பியல் ஆகிய ஆறு பாடப்பிவுகளில் நான்கு ஆண்டு பி.எஸ். பட்டப் படிப்புகள் உள்ளன. அறிவியல் ஆராய்ச்சியில் ஆர்வமிக்க பிளஸ் டூ மாணவர்கள் இங்குள்ள பி.எஸ். என்ற நான்கு ஆண்டு இளநிலை அறிவியல் பட்டப் படிப்புகளில் சேரலாம். இது, எட்டு செமஸ்டர்கள் கொண்ட படிப்பாகும்.
இந்தப் படிப்பில் சேரும் மாணவர்களுக்கு பல்வேறு பாடப்பிரிவுகளையும் அறிந்து கொள்ளும் வகையில் பாடத் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த அறிவியல் படிப்புகளில் சேரும் மாணவர்களுக்கு, என்ஜினீயரிங் பாடங்களையும் படிக்க வாய்ப்பு அளிக்கப்படுகிறது. அத்துடன் கலைப் பாடப் பிரிவுகளிலும் மாணவர்களுக்கு அறிமுகம் இருக்கும். இளநிலைப் பட்டப் படிப்பில் படிக்கும் இந்த மாணவர்கள், மற்றத் துறைகளிலிருந்தும் பாடங்களை எடுத்துப் படிக்க ஊக்கப்படுத்தப்படுவார்கள். இளநிலைப் பட்ட நிலையிலேயே மாணவர்கள் ஓராண்டு ஆராய்ச்சித் திட்டத்திற்காக (ரிசர்ச் புராஜக்ட்) செலவிட வேண்டியதிருக்கும் என்பதிலிருந்தே இந்தப் படிப்பின் தனி முக்கியத்துவத்தைத் தெரிந்து கொள்ளலாம். அறிவியலிலும் என்ஜினீயரிங்கிலும் மாணவர்களுக்கு வலுவான அடித்தளம் அமைத்துக் கொடுக்கும் வகையில் இந்தப் படிப்புகள் இருக்கும்.இந்தக் கல்வி நிறுவனத்தில் உள்ள ஆசிரியர்களுடனும் ஆய்வு மாணவர்களுடனும் இளநிலைப் பட்ட நிலையிலேயே இணைந்து செயல்படுவதற்கு கிடைக்கும் வாய்ப்பு முக்கியமானது. எம்.எஸ்சி. படிப்பில் படிக்கும் மாணவர்களுக்கு நிகராக பி.எஸ். படிக்கும் மாணவர்களுக்கு உறுதியான அடித்தளம் அமைக்கப்படுகிறது. இங்கு படித்த மாணவர்களுக்கு இஸ்ரோ, டிஆர்டிஓ, சிஎஸ்ஐஆர், டிஏஇ போன்ற அரசுத் துறை ஆய்வு நிறுவனங்களில் வேலை கிடைக்கும். டிசிஎஸ், இன்போசிஸ், ஐபிஎம், மைக்ரோசாஃப்ட், அக்சஞ்சர் போன்ற ஐடி நிறுவனங்களிலும் பிரபல பயோ டெக் நிறுவனங்களிலும் வேலை கிடைக்கும். இங்கு பி.எஸ். படித்த மாணவர்கள் இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் சயின்ஸ், ஐஐடிக்கள் போன்ற கல்வி நிறுவனங்களில் உள்ள என்ஜினீயரிங் படிப்புகளில் முதுநிலைப் பட்டம் மற்றும் பிஎச்டி படிப்புகளில் சேரவும் வாய்ப்பு உள்ளது.
இந்தப் படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள், பிளஸ் டூ வகுப்பில் இயற்பியல், வேதியியல், கணிதம் ஆகிய பாடப்பிரிவுகளை எடுத்துப் படித்திருக்க வேண்டும். இயற்பியல், வேதியியல், கணிதம் ஆகிய பாடப்பிரிவுகளுடன் உயிரியல், பொருளாதாரம், எலெக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர் சயின்ஸ், புள்ளியியல் உள்ளிட்ட பாடப்பிரிவுகளில் ஏதாவது பாடப்பிரிவை எடுத்துப் படித்த மாணவர்களும் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் மாணவர்கள் பிளஸ் டூ தேர்வில் குறைந்தது 60 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மாணவர்கள் பிளஸ் டூ தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்தால் போதும்.
இந்தப் படிப்பில் 120 மாணவர்கள் சேர்க்கப்படுகிறார்கள். இதற்கென தனியே நுழைவுத் தேர்வு எதுவும் நடத்தப்படுவதில்லை. எனினும், தேசிய அளவில் நடத்தப்படும் பல்வேறு நுழைவுத் தேர்வு அடிப்படையில் இந்தப் படிப்புகளுக்கு மாணவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். கிஷோர் விஞ்ஞானிக் புரோத்சஹான் யோஜனா (கே.வி.பி.ஒய்.) தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் இந்தப் படிப்புகளில் சேர விண்ணப்பிக்கலாம். ஐஐடி-ஜேஇஇ மெயின் தேர்வு, ஐஐடி-ஜேஇஇ அட்வான்ஸ்ட் தேர்வு, எம்பிபிஎஸ், பிடிஎஸ் பொது நுழைவுத் தேர்வு (நீட்-யுஜி) எழுதுபவர்களும் இந்தப் படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம். ஐஐடி-ஜேஇஇ மெயின் தேர்வில் பொதுப் பிரிவு மாணவர்கள் 60 சதவீதமும் கிரீமிலேயர் அல்லாத ஓபிசி பிரிவினர் 54 சதவீதமும் தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், மாற்றுத் திறனாளிகள் 30 சதவீதமும் மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். ஐஐடி-ஜேஇஇ அட்வான்ஸ்ட் தேர்வில் இதேபோல மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். எம்பிபிஎஸ், பிடிஎஸ் பொது நுழைவுத் தேர்வில் அகில இந்திய ரேங்க் பட்டியலில் தேர்வு பெற்றிருக்க வேண்டும். இந்த நுழைவுத் தேர்வு எழுதிய மாணவர்கள் பி.எஸ். படிப்பில் சேர, இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் சயின்ஸ் கல்வி நிலையத்திற்கு தனியே விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். பொதுப் பிரிவு மற்றும் ஓ.பி.சி. பிரிவு மாணவர்களுக்கான விண்ணப்பக் கட்டணம் ரூ.400. தாழ்த்தப்பட்ட, பழங்குடியினர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான விண்ணப்பக் கட்டணம் ரூ.200. பாரத ஸ்டேட் வங்கி அல்லது கனரா வங்கி கிளைகளில் நெட் பேங்கிங் மூலம் இந்த விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்தலாம் அல்லது செலான் மூலமும் செலுத்தலாம். விசா கார்டு, மாஸ்டர் கார்டு, டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு மூலமும் கட்டணத்தைச் செலுத்தலாம். விண்ணப்பம் பெறுவதற்கான வழிமுறைகள், இந்த படிப்பு குறித்த விவரங்கள் இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் சயின்ஸ் இணையதளத்தில் இடம் பெற்றுள்ளன. அறிவியல் பாடங்களில் ஆர்வமிக்க திறமைசாலி மாணவர்களை பட்டை தீட்டி ஜொலிக்க வைக்க காத்திருக்கிறது இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் சயின்ஸ். ஆர்வமிக்க பிளஸ் டூ மாணவர்கள் விண்ணப்பிக்க வேண்டிய நேரம் இது.
விவரங்களுக்கு: www.iisc.erner.in/ug
நன்றி : புதிய தலைமுறை
No comments:
Post a Comment