Latest News

  

+2 தேர்வை எதிர்கொள்வது எப்படி?


பிளஸ் டூ தேர்வு எழுதும் மாணவர்கள் வெற்றிகரமாகத் தேர்வு எழுத பயனுள்ள தகவல்கள் இதோ..

பிளஸ் டூ தேர்வு மாணவர்களின் வாழ்க்கையில் திருப்புமுனை. இத் தேர்வில் மாணவர்கள் எடுக்கும் மதிப்பெண்களைப் பொருத்துதான், எதிர்காலத்தில் படிக்க வேண்டிய பாடங்களையும், சேர வேண்டிய கல்வி நிறுவனங்களையும் தேர்வு செய்ய முடியும். இந்தத் தேர்வுக்கு மாணவர்கள் தயாராகி வரும் நேரம் இது. தேர்வு நெருங்க நெருங்க பதற்றம் தொற்றிக்கொள்ளும். பதற்றம் தேவையில்லை. படிக்க வேண்டிய பாடங்களை தள்ளிப் போடாமல் படித்து விட்டாலே கடைசி நேரம் பதற்றம் இருக்காது. பாடங்களை நன்றாகப் படித்திருந்தாலே தன்னம்பிக்கை ஏற்பட்டு விடும். தேர்வுக்கு முந்தைய நாட்களில் நள்ளிரவுவரை கண்விழித்துப் படிக்க வேண்டாம். போதுமான தூக்கம் இல்லாவிட்டால் அடுத்த நாள் தேர்வு எழுதும்போது சோர்வாக இருக்கும் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள். டியூஷனில் போய் படித்தாலும் வீட்டிலும் படிக்க வேண்டும். எப்போதும் புத்தகமும் கையுமாக இருப்பதுபோல காட்டிக் கொண்டிருக்க வேண்டாம். தேர்வு நேரத்தில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்ப்பதற்கு அதிக நேரம் செலவழித்து உங்களது படிப்புக் கவனத்தை சிதறடிக்கக்கூடாது.  வீட்டிற்கு விருந்தினர்கள் வந்தாலும்,  தனி அறையில் அமர்ந்து படிக்க வேண்டும். வீட்டில் உள்ளவர்களுடன் வீண் வாக்குவாதம் செய்து நேரத்தை வீணடிக்கக்கூடாது. அமைதியான சூழ்நிலையில் மனதை ஒருநிலைப்படுத்தி பாடத்தில் கவனம் செலுத்த வேண்டும்.

சூத்திரங்கள், சமன்பாடுகள், கோட்பாடுகள் போன்றவற்றை குறிப்புகளாக எடுத்து வைத்துக்கொண்டு அவ்வப்போது எடுத்துப் படித்துப் பார்க்க வேண்டும். எனவே, அவை எப்போதும் மறந்து போகாது. மனப்பாடப் பாடல்களை மனனம் செய்தால் மட்டும் போதாது. தவறு இல்லாமல் எழுதிப் பார்க்க வேண்டும். அப்போதுதான் தேர்வின்போது தடுமாற்றம் இருக்காது. தொடர்ந்து இடைவிடாமல் படித்துக் கொண்டிருப்பதைவிட, சிறிய இடைவெளிவிட்டுப் படிப்பது நல்லது. பாடங்கள் மனதில் நன்கு பதியும். கடினமான வினாக்களுக்கான விடைகளை எழுதிப் பார்க்கலாம். வரைபடங்களை முன்னதாகவே வரைந்துபார்த்துக் கொள்ள வேண்டும். அப்போதுதான் தேர்வு நேரத்தில் அதிக நேரம் எடுத்துக்கொள்ளாமல் படங்களை வரைந்து, விடைகளை எழுதி முடிக்க முடியும்.

தேர்வு நேரத்தில் ‘கேள்வித்தாள் அவுட்’ ஆகிவிட்டது. இந்தக் கேள்விகள்தான் வரும்’ என்ற வதந்திகளை நம்பாதீர்கள். இருக்கின்ற நாட்களில் எந்தெந்தப் பாடங்களுக்கு எவ்வளவு நாட்கள் ஒதுக்கிப் படிக்க வேண்டும் என்பதைத் திட்டமிட்டுப் படிக்க வேண்டும். தேர்வு நெருங்க, நெருங்க படிப்பைத் தவிர வேறு எதிலும் கவனத்தைச் செலுத்தக்கூடாது. தேர்வுக் கால அட்டவணையை அனைவருக்கும் தெரியும் இடத்தில் ஒட்டி வைக்கவும். எந்தெந்தத் தேதிகளில் தேர்வுகள் நடைபெறுகின்றன என்பதை அது அவ்வப்போது நினைவுபடுத்திக் கொண்டிருக்கும். பாடப்புத்தகங்கள், குறிப்பேடுகள், கையேடுகள் போன்றவற்றை ஒரே இடத்தில் வைக்கவும். இல்லாவிட்டால் கடைசி நேரத்தில் அவற்றை எங்காவது ஞாபக மறதியாக வைத்து விட்டு தேடும் நிலை ஏற்படலாம் என்பதால் கவனமாக இருக்க வேண்டும்.

தேர்வுக்குத் தேவையான பேனா, பென்சில், ஸ்கேல், ரப்பர், ஜாமெண்ட்ரி பாக்ஸ் போன்றவற்றைதேர்வின் முதல்நாளன்றே எடுத்துவைத்துக் கொள்ளவும். ஹால் டிக்கெட்டை மறந்து விடாதீர்கள்!

படித்த பாடங்களை மீண்டும் படித்து நினைவுபடுத்திக் கொள்ளுங்கள். தேர்வு குறித்து பயம் வேண்டாம்! தன்னம்பிக்கையோடு இருங்கள்!
தேர்வுக்குச் செல்லும்போது பட்டினி வேண்டாம். அளவோடு சாப்பிட்டுச் செல்லவும். திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டால், தகுந்த மருந்துகளைசாப்பிட்டுவிட்டு தேர்வுக்குச் செல்லவும்.

தேர்வு தொடங்க ஒரு மணி நேரத்துக்கு முன்னதாகவே தேர்வு நடைபெறும் பள்ளிக்குச் சென்று விடுவது நல்லது. இதனால், போக்குவரத்து நெரிசல், பஸ் தாமதம் போன்ற கடைசி நேரப் பரபரப்புகளில் சிக்கித் தவிப்பதைத் தவிர்க்க முடியும்.
தேர்வு மைய வளாகத்தில் உங்களிடம் உள்ள பாடக் குறிப்புகளை சிறிது நேரம் திருப்பிப் பார்த்துவிட்டு அமைதியாக இருக்கவும். மற்றவர்களுடன் தேவையில்லாத அரட்டை வேண்டாம்.

தேர்வு அறையில் உங்களது தேர்வு எண் குறிப்பிடப்பட்டுள்ள இருக்கையில் அமரவும். அதற்கு முன்னதாக, உங்களது புத்தகங்களையும் உங்களது பையில் ஏதாவது பாடக்குறிப்புகளோ, காகிதங்களோ இருந்தால், அதையும் சேர்த்து தேர்வு அறைக்கு வெளியில் வைத்து விட்டு வர வேண்டும்.

தேர்வுக் கூடத்தில் உங்களிடம் பிட் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டாலோ அல்லது காப்பி அடிப்பது தெரிந்தாலோ நீங்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டீர்கள். எனவே, குறுக்கு வழிகள் வேண்டாம்!

உங்களுக்கு விடைத்தாள் கொடுக்கப்பட்டதும் பரபரப்பாக உடனே எழுதத் தொடங்கி விடாதீர்கள். வினாத்தாளை முழுமையாக ஒரு பார்வை பார்த்து விட்டு, முதலில் தெரிந்த வினாக்களுக்கு விடை எழுதத் தொடங்குங்கள். தெரியாத அல்லது கடினமான வினாக்களைப் பார்த்து சோகமாகி விடாதீர்கள்.

விடைத்தாளில் தேர்வுத்துறையினர் குறிப்பிட்டுள்ள இடத்தைத் தவிர வேறு இடங்களில் தேர்வு எண்ணையோ, பெயரையோ எழுதக் கூடாது. விடைத்தாளில் தேர்வு எண்ணை சரியாக எழுதியிருக்கிறோமா என்பதை ஒரு முறைக்கு இருமுறை சரிபார்த்துக் கொள்ளவும்.
தேர்வு அறையில் மற்ற மாணவர்கள் என்ன செய்கிறார்கள் என்று பார்க்காதீர்கள். விடைகளை எழுதுவதில் மட்டுமே முழுமையான கவனம் இருக்கட்டும்.

தேர்வில் ஆரம்பம் முதல் இறுதி வரை ஒரே பேனாவால் எழுத வேண்டும். புதிய பேனா வேண்டாம். அது சில நேரங்களில் சரியாக எழுதாமல் போகலாம். எனவே, ஏற்கெனவே பயன்படுத்திய பேனாவையே பயன்படுத்தவும். முன்னெச்சரிக்கையாக, எக்ஸ்ட்ரா பேனா வைத்துக் கொள்ளலாம்.

தேர்வு நேரத்தில் ஏதாவது சந்தேகம் ஏற்பட்டால் தேர்வுக்கூடக் கண்காணிப்பாளரிடம் மட்டுமே கேட்க வேண்டும். பக்கத்தில் உள்ள மாணவர்களிடம் கேட்கக்கூடாது.

ஆரம்பம் முதல் இறுதி வரை கையெழுத்து சீராக இருக்கட்டும். அதற்காக மெதுவாக எழுதி நேரத்தை வீணடிக்கவும் தேவையில்லை. கூடிய வரை அடித்து அடித்து எழுதுவதைக் தவிர்க்கவும்.

முதலில் நன்கு தெரிந்த விடைகளை எழுதுங்கள். நேரம் வீணாகாது. ஒவ்வொரு வினாவுக்கும் முழுமையாக விடை அளிக்க வேண்டும்.
ஒவ்வொரு வினாவுக்கும் விடை அளிக்க எவ்வளவு நேரம் என்று திட்டமிட்டுக்கொண்டு விடைகளை எழுத வேண்டும். இதனால், சில வினாக்களுக்குப் பதில் தெரிந்தும் நேரம் இல்லாமல் போய், விடை எழுதாமல் விட்டுவிட வேண்டிய சூழ்நிலை ஏற்படாது. சில வினாக்களுக்கு விடை எழுத அதிக நேரம் பிடிக்கலாம். அதுபோன்ற நிலையில், அடுத்து எழுதும் விடைகளில் அந்த நேரத்தைச் சரிசெய்துகொள்ள வேண்டும்.

விடை எழுதும்போது தேவையான இடங்களில் வரைபடங்களை வரைய வேண்டும். அதற்காக நீண்ட நேரம் எடுத்துக் கொள்ளக் கூடாது.
எந்த வினாவுக்கும் அரைகுறையாக விடையளிக்க வேண்டாம். சுருக்கமாகவாவது முழுமையாக விடை எழுத முயலுங்கள். ஏதாவது வினாவுக்கு விடை நன்கு தெரிகிறதே என்று நேரம் போவது தெரியாமல் தேவைக்கு அதிகமாக நீட்டி முழக்கி எழுதிக் கொண்டிருக்காதீர்கள். அப்புறம், மற்ற வினாக்களுக்கு விடை எழுத நேரம் இல்லாமல் போகலாம் என்பதைக் கவனத்தில் கொள்ளுங்கள்.
விடைகளை எழுதும்போது வினா எண்ணை சரியாக எழுத வேண்டும். விடைகளை எழுதி முடித்த பிறகு வினா எண்களை சரிபார்ப்பதுடன் எழுதிய விடைகளையும் சரிபார்க்க வேண்டும்.

வினாக்களுக்கான விடைகளை எழுதி முடித்துவிட்டு, பின்னர் தெரியாத வினாக்களுக்கான விடைகளை நினைவுக்குக் கொண்டுவந்து எழுத முயல வேண்டும்.

தேர்வு நேரம் முடிய சிறிது நேரமே இருக்கிறது என்றால், எழுத வேண்டிய விடைகளை சுருக்கமாக எழுதி, உரிய நேரத்திற்குள் முடிக்கப் பார்க்க வேண்டும்.

தேர்வு நேரம் முடிவதற்கு 15 நிமிடங்களுக்கு முன்னதாகவே எழுதி முடித்துவிட்டு, எழுதிய விடைகளை சரிபார்ப்பது நல்லது. தெரியாத வினாக்களுக்கு விடைகளை எழுதவும் இந்த நேரத்தைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

விடைத்தாளை எழுதிய மேஜையில் வைத்துவிட்டு தேர்வு அறையை விட்டு வெளியேறக்கூடாது. விடைத்தாளை தேர்வுக்கூடக் கண்காணிப்பாளரிடம்தான் கொடுக்க வேண்டும்.

விடா முயற்சியும் கடின உழைப்பும் வெற்றிப் பாதைக்கு வழிகாட்டிகள். தன்னம்பிக்கையுடன் தேர்வு எழுதுங்கள். வெற்றி நிச்சயம்!

நன்றி : புதிய தலைமுறை

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceTemplateism Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.