சென்னை: இருபது ரூபாய்க்கு ஒரு குவாட்டரை வாங்கி அதை 106 ரூபாய்க்கு விற்க ஒரு அரசு தேவையா என்றும் இது தான் அரசின் சாதனையா எனவும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளுத்து வாங்கியிருக்கிறார்.
தமிழகத்திற்கு இரண்டு லட்சத்து 40 ஆயிரம் கோடி வருவாய் வரும் நிலையில் அதை வைத்து திமுக அரசு என்ன செய்கிறது என வினவியுள்ளார்.
பாஜக தலைமையகமான கமலாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனைக் கூறினார்.
முந்திரி ஆலை தொழிலாளி கொலை வழக்கு.. திமுக எம்பி ரமேஷுக்கு ஜாமீன்!
மது மூலம் வருவாய்
மதுவின் மூலம் 33 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் ஈட்டுவதற்கு ஒரு துறையை உருவாக்கி, அந்தத் துறையின் கீழ் பத்தாயிரம் ஊழியர்களை அரசு பணியமர்த்தி உள்ளதாக அண்ணாமலை தெரிவித்தார். நிதி இல்லை என்பது போல் அரசு நாடகம் ஆடி வருவதாகவும் சாதாரண பொதுமக்களுக்கு பயன்பெறக்கூடிய வகையில் அரசு எந்த திட்டங்களையும் அறிவிக்கவில்லை எனவும் அவர் குற்றஞ்சாட்டினார்.
பொதுப்பணித்துறை
மேலும் தமிழகத்தில் உள்ள குறிப்பிட்ட 6 ஒப்பந்ததாரர்களுக்காக பெரிய பட்ஜெட்டில் திட்டங்களை அறிவித்து நிதி ஒதுக்கப்படுவதாக அண்ணாமலை தெரிவித்திருக்கிறார். இதுவரை அமைச்சர்கள் செந்தில்பாலாஜி, அனிதா ராதாகிருஷ்ணன், கயல்விழி செல்வராஜ், பழனிவேல் தியாகராஜன், ராஜகண்ணப்பன் போன்றோரை மட்டும் சாடி வந்த இவர், இப்போது சூசகமாக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலுவின் துறை குறித்தும் மவுனம் கலைக்கத் தொடங்கியிருக்கிறார்.
பொளேர் பதில்
ஐந்தாயிரம் கோடி, பத்தாயிரம் கோடி என்ற அளவில் திட்டங்களை மாநில அரசு அறிவித்தால் சாதாரண மக்கள் அதன் மூலம் என்ன பயன்பெற முடியும் என்ற கேள்வியை அண்ணாமலை எழுப்பியிருக்கிறார். எந்த அரசுக்கும் வக்காலத்து வாங்குவதற்காக பாஜக கிடையாது என்ற தகவலையும் வெளியிட்டார். இதன் மூலம் முந்தைய அதிமுக அரசு மீதான குற்றச்சாட்டுக்களுக்கு பாஜக பதில் கொடுக்காது என்பதையும் பொளேர் என அறிவித்துவிட்டார்.
பாஜக நோக்கம்
அரசின் திட்டங்கள் ஏழை எளிய மக்களுக்கும் சென்றடையக் கூடிய வகையில் இருக்க வேண்டும் என்பதும் ஊழலில்லா தமிழகம் உருவாக வேண்டும் என்பதே பாஜகவின் நோக்கம் எனக் கூறிய அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை, வெள்ள நிவாரண நிதியாக குடும்பம் ஒன்றுக்கு ரூ.5,000 கொடுக்கக் கோரியதற்கு தன்னை ஒரு அமைச்சர் முட்டாள் என விமர்சித்திருப்பதாக தெரிவித்தார். எந்த அமைச்சர் தன்னை அப்படி கூறினார் என்ற விவரத்தை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
source: oneindia.com
No comments:
Post a Comment