தம்மிடம் உள்ள துறைகளை அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஒதுக்கும்படி
ஆளுநருக்கு முதல்வர் ஜெயலலிதா எவ்வாறு அறிவுரை வழங்கினார் என்பதை தமிழக
ஆளுநர் விளக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா
உடல் நலம் பாதிக்கப்பட்டு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் மருத்துவம்
பெற்று வருவதால், இதுவரை அவர் கவனித்து வந்த துறைகள் அனைத்தும் நிதித்துறை
அமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. முதல்வருக்கு
பதிலாக பன்னீர் செல்வம் அமைச்சரவைக் கூட்டத்திற்கு தலைமையேற்பார் என்றும்
அறிவிக்கப்பட்டுள்ளது. முதல்வரால் செயல்பட முடியாத நிலையில் அரசு நிர்வாகம்
தடையின்றி இயங்க செய்யப்பட்டுள்ள இந்த ஏற்பாடு சரியானதே.
அதேநேரத்தில் அரசு நிர்வாகத்தில் செய்யப்படும் மாற்றங்கள் மக்கள்
மத்தியில் குழப்பங்களையும், ஐயங்களையும் ஏற்படுத்தாமல் இருக்க வேண்டும்.
முதலமைச்சர் ஜெயலலிதாவின் பொறுப்பு மாற்றம் குறித்து ஆளுனர் மாளிகை
வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்
166(3) பிரிவின்படி, முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஆலோசனையை ஏற்று இந்த
மாற்றங்கள் செய்யப் பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசியலமைப்புச்
சட்டத்தின் 166(3) ஆவது பிரிவின்படி, அரசின் நிர்வாகப் பணிகள் எளிதாக
நடைபெறுவதற்கு வசதியாக அமைச்சர்களின் துறைகளை மாற்றி அமைக்கும் அதிகாரம்
ஆளுனருக்கு உண்டு. ஆனால், முதல்வரின் அறிவுரைப்படி மட்டுமே இந்த மாற்றங்களை
ஆளுனரால் மேற்கொள்ளப்படும். ஆளுனர் மாளிகை வெளியிட்ட செய்திக் குறிப்பில்,
முதலமைச்சரின் அறிவுரைப்படி தான் இந்த மாற்றங்கள் செய்யப்பட்டிருப்பதாகக்
கூறப்பட்டிருக்கிறது.
எனினும், ஆளுனருக்கு முதலமைச்சர் ஜெயலலிதா எந்த முறையில் அறிவுரை
வழங்கினார் என்பது தான் தமிழகத்திலுள்ள ஏழரை கோடி மக்களின் மனதில்
எழுந்துள்ள வினாவாகும். வழக்கமாக அமைச்சரவை மாற்றம் செய்யப்படும் போது,
அதற்கான அறிவுரைக் கடிதத்தை ஆளுனரை நேரில் சந்தித்து முதலமைச்சர்
வழங்குவார். முதலமைச்சரால் நேரில் செல்ல முடியாத பட்சத்தில் தலைமைச்
செயலாளர் மூலமாகவோ அல்லது வேறு வழிகளிலோ ஆளுனரிடம் முதலமைச்சரின் அறிவுரை
கடிதம் சேர்க்கப்பட்டு, அதனடிப்படையில் அமைச்சரவை மாற்றம் அல்லது துறை
மாற்றங்கள் செய்யப்படும்.
ஆனால், தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா இப்போது எந்த வகையிலும் ஆளுனருக்கு
அறிவுரை வழங்கும் நிலையில் இல்லை என்பது தான் அவர் மருத்துவம் பெற்று வரும்
அப்பல்லோ மருத்துவமனை வெளியிட்டு வரும் மருத்துவ அறிக்கைகள் மூலம்
தெரியவரும் உண்மை ஆகும். ஜெயலலிதா மிக மோசமான நோய் தொற்றால்
பாதிக்கப்பட்டிருப்பதால் அவரை மருத்துவர்கள் தவிர வேறு எவரும் சந்திக்க
முடியாத நிலை இருப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
மத்திய அமைச்சர்கள், ஆளுனர்கள், முதலமைச்சர்கள் மற்றும் அரசியல்
தலைவர்கள் என பல்வேறு தரப்பினரும் ஜெயலலிதாவிடம் நலம் விசாரிப்பதற்காக
மருத்துவமனைக்கு சென்ற போதிலும், எவரும் ஜெயலலிதாவை சந்திக்க அனுமதிக்கப்
படவில்லை. மேலும், முதலமைச்சருக்கு செயற்கை சுவாசக்கருவிகள்
பொருத்தப்பட்டிருப்பதாலும், மயக்க நிலையிலேயே இருப்பதாலும் அவரால் பேச
முடியாது. அதுமட்டுமின்றி, அவருக்கு பாசிவ் பிசியோதெரபி (Passive
Physiotherapy) செய்யப்படுவதால் அவரது கைகளும், கால்களும் அசைக்க முடியாத
நிலையில் இருப்பதாகவும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.
இத்தகைய நிலையில் இருக்கும் ஒருவரால் அறிவுரை வழங்கி கையெழுத்து போடுவதோ,
தாம் நினைப்பதை தெரிவிப்பதற்காக சைகை காட்டுவதோ சாத்தியமில்லை. இத்தகைய
சூழலில் முதல்வர் எப்படி அறிவுரை வழங்கியிருக்க முடியும்? 2016 ஆம் ஆண்டு
சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றது. அடுத்த ஐந்தாண்டுகளுக்கு
ஆட்சி செய்யும் உரிமை அக்கட்சிக்கு உண்டு. அக்கட்சியைச் சேர்ந்த யார்
வேண்டுமானாலும் முதலமைச்சராகவோ, பொறுப்பு முதலமைச்சராகவோ நியமிக்கப்படலாம்.
அதை தீர்மானிக்க வேண்டியது அக்கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் தான்.
ஆனால், அவை அனைத்தும் அரசியலமைப்பு சட்டத்தின்படி நடைபெறவேண்டும் என்பது
தான் பாட்டாளி மக்கள் கட்சியின் நிலை. மாறாக, அரசியல் சட்டத்திற்கு எதிரான
வகையில், இந்த நடைமுறைகளுக்கெல்லாம் சம்பந்தமில்லாத சிலர் தங்களின்
விருப்பப்படி அரசு நிர்வாகத்தை ஆட்டிப்படைக்க ஆளுனரும் இடமளித்துவிடக்
கூடாது என்பது தான் தமிழ்நாட்டு நலனில் அக்கறை கொண்டவர்கள் மற்றும்
தமிழ்நாட்டு மக்களின் எதிர்பார்ப்பு ஆகும்.
இதற்கெல்லாம் மேலாக பொறுப்பு மாற்றம் எப்படி நிகழ்ந்தது என்பதை அறியும்
உரிமை மக்களுக்கு உண்டு. எனவே, தம்மிடம் உள்ள துறைகளை அமைச்சர் ஓ.பன்னீர்
செல்வத்துக்கு ஒதுக்கும்படியும், அமைச்சரவையை தலைமையேற்று நடத்த
அனுமதிக்கும்படியும் ஆளுனருக்கு முதலமைச்சர் ஜெயலலிதா எவ்வாறு அறிவுரை
வழங்கினார் என்பதை தமிழக ஆளுனர் விளக்க வேண்டும். இதுகுறித்த விளக்கம்
அளிக்கப்படும் வரை தமிழகத்தில் நடைபெறுவது ஐயத்துக்குரிய ஆட்சியாகவே
மக்களால் பார்க்கப்படும். இவ்வாறு கூறியுள்ளார்.
No comments:
Post a Comment