விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் ஓடும் அரசுப்பேருந்தில்
துப்பாக்கியால் இளைஞர் ஒருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பதற்றத்தை
ஏற்படுத்தியுள்ளது. கொல்லப்பட்ட நபர் கோவில்பட்டியை சேர்ந்த கருப்பசாமி
என்பது அவரது அடையாள அட்டையின் மூலம் தெரியவந்துள்ளது. சுட்டுக்கொன்று
தப்பி ஓடிய நபர்களை போலீசார் விரட்டிச் சென்றுள்ளதாக தகவல்
வெளியாகியுள்ளது.
நாகர்கோவிலில் இருந்து அரசுப் பேருந்து ஒன்று மதுரைக்கு சென்று
கொண்டிருந்தது. அதில் 60க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தனர்.
கோவில்பட்டியை சேர்ந்த கருப்பசாமி என்பவர் அந்த பேருந்தில் ஏறினார். அவர்
பின்னால் அமர்ந்திருந்தார்.
அதே பேருந்தில் பின் சீட்டில் அமர்ந்திருந்த இருவருக்கும்
கருப்பசாமிக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில்
ஒருவர் தான் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து கருப்பசாமியை சுட்டதாக
தெரிகிறது. இதில் கருப்பசாமி சம்பவ இடத்திலேயே மரணமடைந்தார்.
அரசு பேருந்தில் திடீரென துப்பாக்கிச் சத்தம் கேட்டு பயணிகள் பீதியில்
அலறினர். பேருந்தை ஓட்டுநர் நிறுத்தவே, துப்பாக்கியால் சுட்டவர்கள் இறங்கி
தப்பி ஓடி விட்டனர். தப்பி ஓடிய நபர்களை போலீசார் தேடி வருவதாக சாத்தூரில்
இருந்து வெளியாகும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சென்னை மாமல்லபுரம் அருகில், சென்னை உயர்
நீதிமன்ற வழக்கறிஞர் காமேஷ் என்பவர் துப்பாக்கியால் சுட்டு படுகொலை
செய்யப்பட்டார். இதே போல கடந்த மே மாதம் சென்னையில் டிராவல்ஸ் அதிபர்
பாபுசிங் சுட்டுக் கொல்லப்பட்டார்.
No comments:
Post a Comment