உ.பி. - மதக்கலவரத்தால் வீடிழந்த முஸ்லிம்களுக்கு ரூ 50,000
பிரதாப்கார் - உத்திரபிரதேசத்தில் நவாப்கஞ்ச் பகுதியில் உள்ள அஸ்தான் கிராமத்தில் தீவிரவாதக்கும்பலால் வீடுகள் எரிக்கப்பட்டு உடைமைகளை இழந்துள்ள முஸ்லிம்களுக்கு தலா ரூ 50,000 உதவித் தொகை வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.
23.06.12 அன்று அஸ்தான் கிராமத்திற்குள் நுழைந்த கும்பல் அங்குள்ள வீடுகளுக்கு தீ வைத்துள்ளது. கடந்த 20.06.2012 அன்று பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு ஒரு தலித் பெண் கொலை செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து அந்தக் கும்பல் அஸ்தான் கிராமத்தில் உள்ள வீடுகளுக்கு தீ வைத்துள்ளது. ஏறத்தாழ ஏழு கிராமங்களைச் சார்ந்தவர்கள் இந்த தீ வைப்பு சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர்.
46 வீடுகள் எரிக்கப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது. இவர்களுக்கு தலா ரூ50,000 வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. கொலை செய்யப்பட்ட பெண்ணின் குடும்பத்தினருக்கு ரூ 5 லட்சம் நஷ்ட ஈடாக வழங்கவும் உத்தரவு இடப்பட்டுள்ளது.
அரசு உதவித் தொகை வழங்கினாலும் அந்தக் கிராமத்தில் நுழைவதற்கு அஞ்சி அங்குள்ள முஸ்லிம்கள் பரோய் என்ற இடத்திலுள்ள மதரஸாக்களில் தங்கியுள்ளனர். கடந்த 03.06.2012 அன்று கோசி கலான் என்ற பகுதியில் உள்ள முஸ்லிம்களின் வீடுகளும் இவ்வாறு தாக்குதலுக்கு ஆளானது குறிப்பிடத்தக்கது.
அஸ்தான் கிராமத்தில் நடைபெற்ற சம்பவத்தில் ஈடுபட்டதாக 68 பேர் மீது முதல் தகவல் அறிக்கை பதியப்பட்ட பின்னரும் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. நவாப்கஞ்ச் காவல் நிலையத்தின் மூத்த காவல்துறை அதிகாரி அருண் குமார் பதக் இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
அரசியல்வாதிகளிடையே நடைபெறும் போட்டியின் காரணமாக மதக் கலவரம் ஏற்பட்டதாக பொது மக்கள் தெரிவித்துள்ளனர். பெண்ணின் கொலையில் சம்பந்தப்பட்டதாக கருதப்படும் நான்கு முஸ்லிம் இளைஞர்கள் கைது செய்யப்பட்ட பிறகும், இதற்கு மதச் சாயம் பூசி கலவரத்தினை உள்ளூர் அரசியல்வாதிகள் ஏற்படுத்தியதாக அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
நன்றி : inneram.com
No comments:
Post a Comment