Latest News

  

அதிரையை அச்சுறுத்தும் “சுகாதாரம்” !

சுகாதாரத்துறை கவனத்திற்கு !

தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டம், அதிரைப்பட்டினம் தேர்வு நிலை பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சுகாதாரத்தை அச்சுறுத்துகின்ற கீழ்க்கண்டவற்றிக்கு எதிராக நடவடிக்கைகள் மேற்கொள்வது என்பது மக்கள் நல்வாழ்வுத்துறையாகிய சுகாதாரத்துறையின் தலையாயக் கடமையாகும்.

1. இறைச்சிக்காக ஆடு, மாடு, கோழி போன்றவற்றை அறுத்து விற்பனை செய்பவர்களால் பயன்படுத்தப்படும் கூடங்கள் சுகாதாரமான முறையில் உள்ளனவா ? இதன் கழிவுகளை எங்கே கொட்டுகின்றனர் ? இதனால் இப்பகுதியைச் சுற்றி வசிக்கக்கூடிய பொதுமக்களுக்கு ஏதேனும் பாதிப்புகள் உண்டா ? அக்கூடத்தில் உயிரற்ற ஆடு, மாடு, கோழி போன்றவைகள் அறுக்கப்படுகின்றனவா ? முறையாக அரசின் முத்திரை அதில் இடம்பெற்றுள்ளதா ?

2. அதேபோல் கடல் சார்ந்த பொருட்கள் குறிப்பாக மீன்கள், இறால், நண்டு, கணவாய், உலர்ந்த மீன் ( கருவாடு ) போன்றவை விற்பனை செய்யபடுகின்ற கூடங்கள் சுகாதாரமான முறையில் உள்ளனவா ? இதன் கழிவுகளை எங்கே கொட்டுகின்றனர் ? இதனால் இப்பகுதியைச் சுற்றி வசிக்கக்கூடிய பொதுமக்களுக்கு ஏதேனும் பாதிப்புகள் உண்டா ?

இதுபோன்ற பொதுமக்களின் சுகாதாரப் பிரச்சனைகளில் கவனம் செலுத்துவது சுகாதாரத்துறையின் தலையாயக் கடமையாகும்.

3. தெருவோரம் சுற்றித்திரியும் நோய் பிடித்த நாய்களால் பொதுமக்கள் மட்டுமல்லாமல் ஆடு, மாடு போன்ற ஜீவனங்களும் அதன் கடியால் பாதிப்புக்கு உள்ளாகின்றன. இதுபோன்ற நாய்களை கட்டுக்குள் கொண்டுவந்து கருத்தடை செய்தால் நாய்களின் கடிக்கும் தன்மை குறைந்து விடும்.

4. பிள்ளைக்குட்டிகளுடன் ஆங்காங்கே தெருவோரம் சுற்றித்திரிவதோடு மட்டுமல்லாமல் இறைச்சிக்கழிவுகள், குப்பைக்கழிவுகள், கழிவு நீர் போன்ற இடங்களில் வசிக்கும் பன்றிகளால் இவைகள் கிளறப்படுவதன் மூலம் பரவும் நோய் கிருமிகளிலிருந்து ஏற்படும் பாதிப்புகளை தடுக்கும் நோக்கில் பன்றிகளின் நடமாட்டங்களை கட்டுக்குள் கொண்டுவருவது அவசியமாகிறது.

5. காளான்கள் போல ஆங்காங்கே தெருவோரக்கடைகளாக “உணவகங்கள்” என்ற பெயரில் நாளும் பொழுதும் அதிகரித்துக்கொண்டு இருக்கும் வேளையில் தரமற்ற, எவ்வித சுகாதார முறைகளையும் பின்பற்றாத இக்கடைகளில் உணவுப்பொருட்களின் சுவையை கூட்டுவதற்கென்று மனிதனால் செயற்கையாக உருவாக்கப்பட்ட சுவையாகிய “அஜினோமோட்டோ” என்ற மோனோ சோடியம் குளூட்டமேட் (Mono sodiumglutamate) என்ற வேதிப்பெயரைக் கொண்ட இந்த விநோத உப்பு புகுந்து விட்டது என்று சொன்னால் மிகையாகாது.

6. செயற்கை முறையில் “கார்பைட்” கற்கள் மூலம் பழுக்க வைக்கப்படும் மாம்பழங்கள் முழு பகுதியும் மஞ்சள் நிறத்தில் மாறுவதோடு அல்லாமல் இவற்றைப் பார்த்தவுடன் வாங்கும் வகையில் நிறம் மாறி காணப்படுவதாலும், சாப்பிட ருசியாக இருப்பாத்தாலும் வியாபாரங்கள் படு ஜோராரக நடைபெறுகின்றன. இவை உண்போருக்கு பல்வேறு வயிற்று தொல்லைகளை கொடுக்கும் என்பது அவர்களுக்கு தெரியவில்லை ! ? இக்கார்பைடைக் கொண்டு வாழைப்பழங்களும் பழுக்க வைக்கப்படுகின்றன என்பது வேதனையான செய்தி.

7. கோடை கால விற்பனையைக் குறி வைத்து தரமற்ற குளிர்பானங்களை விற்பனை செய்து வருகின்ற கடைகளில் தயாரிக்கப்படும் ஆரஞ்சு, லெமன், பாதாம்கீர், புரூட் ஜூஸ், என பல்வேறு ஜூஸ்கள் மொத்தமாக கலந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதுபோன்ற கடைகளில் குளிர்பானங்களில் கலர் சேர்மானத்துக்கு ரசாயன உணவுப் பொருள்களுக்குத் தடை செய்யப்பட்ட கலர் பொடிகளை பயன்படுத்துகின்றனர். மேலும் குளிர்பானங்களில் இனிப்பு சுவை கிடைக்க “சாக்கிரின்” என்ற பவுடர் கலக்கப்படுகிறது. இது போன்ற கலவையை பருகுவோருக்கு வயிறு சம்பந்தப்பட்ட கோளாறுகள் ஏற்பட்டு, அலர்ஜி ஏற்பட்டு சளி, இருமல் உள்ளிட்ட நோய்கள் தாக்கும் நிலையுள்ளது. “மிக்ஸ்டு புரூட் ஜூஸ்” என்ற பெயரில் அழுகிய தரமற்ற பழங்களை பயன்படுத்தி ஜூஸ் தயாரித்து கூடுதல் இனிப்பு சுவையுடன் விற்பனை செய்கின்றனர்.

8. விலைவாசி உயர்வால், செலவைக் குறைப்பதற்காகவும், அதிகமான லாபம் சம்பாதிக்க வேண்டும் என்ற குறுகிய மனப்பான்மையில் நாம் அன்றாடம் சாப்பிடக்கூடிய உணவுப்பொருட்களில் விதம் விதமாய் கலப்பட உத்திகள் . இதனால் உடல் அளவிலும், மனதளவிலும், பொருளளவிலும் பாதிக்கப்படுவது பொதுமக்களாகிய நாம்தான். அன்றாடம் விற்பனை செய்யும் பலசரக்கு கடைகளில் உள்ள உணவுப் பொருட்களை ஆய்வுக்கு உட்படுத்தினாலே தெரிந்துவிடும் பொருட்களின் தரம் என்னவென்று.

9. தண்ணீருக்கு அடுத்தபடியாக நோய்களை பரப்புவது கொசுவே. டெங்கு காய்ச்சல் மற்றும் மஞ்சள் காய்ச்சல் போன்ற பயங்கர வியாதிகளை கொசுக்கள் பரப்புகின்றன. இது தவிர பலவித வைரஸ்களை பரப்புவதன் முலம் வேறு சில வியாதிகள் தொற்றவும் காரணமாக இருக்கின்றன. தெருக்களில், குளம் குட்டைகளில் கழிவுகள் மற்றும் குப்பைகளில் வசிக்கும் இதுபோன்ற உயிர்க்கொல்லிகளை ஒழித்திட உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.

10. மேல்நிலை நீர் தேக்க தொட்டிகளை பதினைந்து நாட்களுக்கொரு முறை சுத்தம் செய்தல் மற்றும் அதற்குரிய விவரங்களை பதிவு செய்தல். குளோரின் கலத்தல் மற்றும் அதற்குறிய சோதனை செய்தல்.

11. மருத்துவக்கழிவுகளை ஒவ்வொரு மருத்துவமனையும் எவ்வாறு அப்புறப்படுத்துகின்றன என்பதை கண்காணித்தல், மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுத்தல் மேலும் அரசு மருத்துவமனையில் உள்ள “பிணவறைக்கூடம்”த்தின் தரத்தை ஆய்வு செய்தல்.

இது போன்றவற்றைக் கொண்டு நோய் தீவிரமாகப் பரவும்போது அதைத் தடுப்பதில் தீவிரம் காட்டும் சுகாதாரத்துறை, நோய் தோன்றக் காரணமாக இருக்கும் விவாகரத்தில் கண் மூடி இருக்கக்கூடாது. நோய் வந்தபின் சிகிச்சை அளிப்பதைக் காட்டிலும் நோய் வராமலே தடுப்பதுதான் செலவையும், வலியையும், பதற்றத்தையும், அலைச்சலையும், இழப்பையும் தவிர்க்கும்.

இதுகுறித்து சுகாதாரத் துறையினர் சோதனை நடத்தி கடுமையான நடவடிக்கையாக “அபராதம் விதித்தல்” தேவைபட்டால் அவர்களின் “உரிமங்கள் ரத்து செய்தல்” போன்றவை அதிரடியாக எடுக்க வேண்டும் என்பதே அதிரைப்பட்டினம் வாழ் சமூக ஆர்வலர்களின் அவசரக் கோரிக்கையாகும்.



சேக்கனா M. நிஜாம்


இறைவன் நாடினால் ! தொடரும்..............

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceTemplateism Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.