முதல்வர் ஜெயலலிதா உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில்
அதிமுக பக்கம் அதீத பாசம் காட்டி வரும் காங்கிரஸ் கூடவே திமுகவையும்
கடுமையாக தாக்கிப் பேசி வருகிறது. இதன் மூலம் பலவீனமான அதிமுகவுடன் கை
கோர்த்துக் கொண்டு திமுகவை பலமாக எதிர்க்க காங்கிரஸ் முஸ்தீபு செய்து
வருகிறதோ என்ற சந்தேகம் வலுத்து வருகிறது.
சிதறிக் கிடக்கும் பல்வேறு காங்கிரஸ் தலைவர்களையும், முன்னாள்
தலைவர்களையும் கூட உள்ளே இழுக்கும் நடவடிக்கையிலும் காங்கிரஸ் தலைவர்
திருநாவுக்கரசர் குதித்துள்ளாரோ என்ற சந்தேகமும் வலுத்துள்ளது.
நியூஸ் 18 தொலைக்காட்சியில் நெறியாளர் மு.குணசேகரன் நடத்தும்
காலத்தின் குரல் விவாத நிகழ்ச்சியில் ஜி.கே.வாசன் தலைமையிலான தமிழ் மாநில
காங்கிரஸ் கட்சியின் ஞானதேசிகன் பேசிய பேச்சைப் பார்த்தால் அப்படித்தான்
தெரிகிறது. ஞானதேசிகன் பேச்சு முழுமையாக காங்கிரஸ் - அதிமுக ஆதரவாகவே
இருந்தது. திமுகவை அவர் மறைமுகமாகவும், நேரடியாகவும் சாடிப் பேசினார்.
திமுகவிடம் எப்போதுமே பெரியண்ணன் தனம் உண்டு என்று போட்டு உடைத்த அவர்
காங்கிரஸ் கட்சிக்குள் உள்ள தனது ஆதரவு சக்திகளை வைத்து, தேமுதிகவுக்கு
போகவிருந்த ஆதரவை திமுக தடுத்து கனிமொழியை எம்.பியாக்கி விட்டதையும் அவர்
அம்பலப்படுத்தியுள்ளார். இது முக்கியமானது.
திமுகவை நேரடியாகவே இந்த விஷயத்தில் அவர் சாடியுள்ளார். மேலும் திமுக -
காங்கிரஸ் உறவை விட அதிமுக - காங்கிரஸ் உறவுதான் இயல்பானது,
உணர்வுப்பூர்வமானது என்றும் ஞானதேசிகன் கூறியுள்ளது முக்கியமானது.
வாசன் தலைமையிலான தமாகாவில் அவருக்கு அடுத்த நிலை தலைவர் யார் என்றால்
அது ஞானதேசிகன் மட்டுமே. மற்ற அனைவரும் அதிமுக, காங்கிரஸ் என போய்
விட்டனர். ஏன் ஞானதேசிகனே கூட அதிமுகவுக்குப் போகப் போவதாக தகவல்கள் வந்தன.
ஆனால் தற்போது அவர் பேசியதைப் பார்க்கும்போது அவர் அதிமுக - காங்கிரஸ்
கூட்டணிக்காக தீவிரமாக பாடுபடவும் தயாராகி விட்டது போலவே தெரிகிறது.
அனேகமாக ஞானதேசிகன் காங்கிரஸ் கட்சிக்குத் திரும்பலாம் என்ற சந்தேகமும்
வலுத்துள்ளது. அவரது பேச்சின் தொணி., திமுகவை விட அதிமுக பெட்டர் என்பதாகவே
உள்ளது. அந்த வகையில் ஞானதேசிகன் விரைவில் முடிவெடுக்கலாம் அல்லது
திருநாவுக்கரசர் பகிரங்கமாக ஞானதேசிகனுக்கு அழைப்பு விடலாம் என்று
எதிர்பார்க்கப்படுகிறது.
அரசியலில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.
No comments:
Post a Comment