
குவைத்தில் வேலைக்கான விசா காலம் காலாவதியான புலம்பெயர்
தொழிலாளர்களைச் சட்டவிரோதக் குடியேறிகளாக அறிவித்துவிட்டது குவைத்
அரசாங்கம். எனினும், கரோனா காலம் என்பதால் இவர்களுக்குப் பொது மன்னிப்பு
அளித்து, இரண்டு மாத காலத்துக்குள் அந்தந்த நாட்டுத் தூதரகங்கள் வாயிலாக
அவசரகால பாஸ்போர்ட் பெற்றுத் தாயகம் திரும்ப வாய்ப்பளித்திருந்தது. ஆனால்,
அந்தக் கெடுவுக்குள் அவசர கால பாஸ்போர்ட்களை வழங்க இந்தியத் தூதரகம் உரிய
நடவடிக்கைகளை எடுக்காததால் இன்னமும் பெருவாரியான தமிழர்கள் உள்ளிட்ட
இந்தியர்கள் தாயகம் திரும்ப முடியாமல் குவைத்தில் சிக்கி அவதிப்பட்டுக்
கொண்டிருக்கிறார்கள்.
இதுகுறித்து
நம்மிடம் பேசிய குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கத்தின் பொதுச்செயலாளர்
அ.பா.கலீல் அஹ்மத் பாகவீ, 'குவைத்தில் உள்ள புலம்பெயர் தொழிலாளர்களைத்
தங்களின் தாய்நாட்டுக்கு அனுப்ப எங்களைப் போன்ற சமூக ஆர்வலர்கள் குவைத்தில்
உள்ள இந்தியத் தூதரகத்துக்கு அவசரகால பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பங்களை
அனுப்பி வைத்தோம்.
ஆனாலும் குறிப்பிட்ட காலத்திற்குள் பலபேருக்குப்
பாஸ்போர்ட் கிடைக்கவில்லை. இதனால், வேலைக்கு வைத்திருந்த நிறுவனங்களும்
வெளியில் நிறுத்திவிட்ட நிலையில், நம்மவர்கள் தங்கக்கூட இடமின்றித்
தெருவுக்கு வந்துவிட்டார்கள்.
இவர்களைக் குவைத்தில் இந்தியர்களால்
நடத்தப்படும் பள்ளிகளில் தங்கவைத்து அவர்களுக்கான தேவைகளை ஏற்பாடு செய்து
தரும்படி இந்தியத் தூதரகத்திடம் கோரிக்கை வைத்தோம். அதுவும் நடக்கவில்லை.
அதனால் வாரக் கணக்கில், மாதக் கணக்கில் வீதிகளில் முடங்கிக் கிடந்தவர்கள்
பல பேர். அப்படித் தெருக்களில் கிடந்தவர்களை எல்லாம் கைது செய்து முகாமில்
அடைத்த குவைத் அரசு, அவர்களை மட்டும் தங்களது முயற்சியில் தாயகம் அனுப்பி
வைத்தது.
இந்த நிலையில், குவைத்தில் சிக்கியுள்ள எஞ்சிய தமிழர்கள்
உள்ளிட்ட இந்தியர்களை மீட்க நடவடிக்கை எடுக்க இந்திய அரசுக்கு அழுத்தம்
கொடுக்கும்படி மே 12-ம் தேதி தமிழக முதல்வரின் தனிப்பிரிவுக்கு எங்கள்
சங்கத்தின் சார்பில் மனு அனுப்பினோம். அவசர கால உதவி கேட்டு நாங்கள்
அனுப்பிய மனுவுக்கு இரண்டு மாதங்கள் கழித்து(!) இரண்டு தினங்களுக்கு
முன்புதான் பதில் வந்தது.
அந்தப் பதிலில், 'குவைத்தில் சிக்கியுள்ள
தமிழர்கள் ஒவ்வொருவரின் பாஸ்போர்ட் எண், அவர்களது தொலைபேசி எண், குவைத்தில்
அவர்கள் தங்கியிருக்கும் முகவரி, அவர்கள் வேலை செய்த இடம், கம்பெனி விவரம்
உள்ளிட்டவற்றை அனுப்பினால்தான் மனுதாரரின் கோரிக்கையை மேற்கொண்டு
பரிசீலிக்க முடியும்' என்று சொல்லி இருக்கிறார்கள்.
நாங்கள் எந்தத்
தனிப்பட்ட நபருக்காகவும் உதவி கேட்கவில்லை. ஒட்டுமொத்தமாகக் குவைத்தில்
சிக்கியிருக்கும் இந்தியர்களை அதிலும் குறிப்பாக, தமிழர்களைத்
தாய்நாட்டுக்கு அழைத்துவர நடவடிக்கை எடுங்கள் என்றுதான் கேட்டிருந்தோம்.
தமிழக முதல்வரின் தனிப்பிரிவில் பணியில் இருப்பவர்கள் அதைக்கூடப் புரிந்து
கொள்ளாமல் ஒவ்வொருவரின் தனிப்பட்ட விவரங்களையும் சேகரித்து அனுப்பும்படி
எங்களுக்குப் பதில் கொடுத்திருக்கிறார்கள். எங்களால் இது எப்படிச்
சாத்தியமாகும் என்பதைக்கூட அவர்கள் உணராதது வருத்தமளிக்கிறது' என்றார்.

குவைத்தில்
சிக்கியுள்ள இந்தியர்கள் குறித்து நம்மிடம் மேலும் சில தகவல்களைக்
கவலையுடன் பகிர்ந்து கொண்ட வெளிநாடு வாழ் தமிழர்கள் நலச்சங்கத்தின் குவைத்
மண்டலத் தலைவர் நவுசாத் அலி, 'விசா காலாவதியான இந்தியர்கள் உள்ளிட்ட
வெளிநாட்டினருக்குக் குவைத் அரசு ஏப்ரல் 21 முதல் ஜூன் 21 வரை பொது
மன்னிப்பு வழங்கி இருந்தது.
இந்தக் காலத்துக்குள் தங்கள் நாட்டுத்
தூதரகங்கள் மூலம் அவசர கால பாஸ்போர்ட் பெற்றவர்களைக் குவைத் அரசு, தனது
செலவிலேயே தாயகம் அனுப்பி வைக்கத் தயாராய் இருந்தது. ஆனால், இந்தக்
கெடுவுக்குள் இந்தியத் தூதரகம் சுமார் 4 ஆயிரம் பேருக்கு மட்டுமே அவசர கால
பாஸ்போர்ட்களை வழங்கியது. இதில் சுமார் 800 பேர் மட்டுமே தமிழர்கள். இந்த 4
ஆயிரம் பேரும் குவைத் அரசின் செலவில் அப்போதே இந்தியா
திரும்பிவிட்டார்கள்.
எஞ்சிய சுமார் 5 ஆயிரம் பேருக்கு அவசர கால
பாஸ்போர்ட் வழங்குவதில் இந்தியத் தூதரகம் தாமதித்துவிட்டது. இந்த நிமிடம்
வரை இவர்களில் சுமார் 3 ஆயிரம் பேருக்குத்தான் அவசர கால பாஸ்போர்ட்
கிடைத்திருக்கிறது. எஞ்சியவர்களுக்கு இன்னமும் பாஸ்போர்ட் வந்து சேரவில்லை.
குவைத் அரசின் பொது மன்னிப்பு சலுகைக் காலமும் முடிந்து விட்டதால்
இப்போது, பாஸ்போர்ட் பெற்றவர்களாலும் தாயகம் திரும்ப முடியவில்லை. இவர்கள்
சொந்தச் செலவில் தாயகம் திரும்ப வேண்டுமானால் தலைக்கு 22 ஆயிரம் ரூபாய்
தேவைப்படும். இது விமானப் பயணக் கட்டணம் மட்டுமே. இதில்லாமல் கரோனா
பரிசோதனைகள் உள்ளிட்ட செலவுகளும் இருக்கின்றன.
நான்கு மாத காலமாகப்
பிழைப்புக்கே வழியில்லாமல் அல்லாடிக் கொண்டிருக்கும் இந்தத் தொழிலாளர்களால்
இவ்வளவு பெரிய தொகையை எங்கிருந்து திரட்ட முடியும்? இந்திய அரசு குவைத்
அரசிடம் பேசினால் பொது மன்னிப்புக்கான சலுகைக் காலத்தை நீட்டித்து,
குவைத்தில் எஞ்சியிருக்கும் இந்தியத் தொழிலாளர்களையும் குவைத் அரசின்
செலவில் தாயகம் அனுப்பி வைக்க முடியும். ஆனால், அத்தகைய எந்த முயற்சிகளும்
இந்தியத் தூதரகத் தரப்பில் எடுக்கப்படுவதாகத் தெரியவில்லை.
இதனால்
குவைத்தில் அகதிகள் கணக்காய் இந்தியத் தொழிலாளர்கள் அலைந்து
கொண்டிருக்கிறார்கள். குறிப்பிட்ட காலம் வரை அவர்களுக்கு எங்களைப் போன்ற
தன்னார்வ அமைப்புகள் உணவு உள்ளிட்ட உதவிகளை வழங்கி வந்தோம். இப்போது
எங்களாலும் அப்படி அனைவருக்கும் உதவ முடியவில்லை. நண்பர்கள்,
தெரிந்தவர்களிடம் அடைக்கலம் கிடைத்தவர்களுக்கு அன்றாடச் சாப்பாட்டுக்காவது
வழி கிடைத்திருக்கிறது. அப்படி இல்லாதவர்கள் சாப்பாட்டுக்கே மற்றவர்களிடம்
கையேந்தும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள். இன்னும் சிலர் பிறரிடம்
உதவி கேட்பதை அவமானமாகக் கருதிக் கொண்டு, கிடைத்த இடங்களில் முடங்கிக்
கிடக்கிறார்கள். அப்படி முடங்கிக் கிடந்த ஒருவர் கடந்த வாரம் மெஸ் ஒன்றின்
வாசலில் இறந்து கிடந்ததாகவும் ஒரு செய்தி எங்கள் காதுக்கு வந்தது.
இதேபோல்
குவைத்துக்கு வீட்டுப் பணிப் பெண்களாக வந்த 23 இந்தியப் பெண்களுக்கும்
பாஸ்போர்ட் கிடைக்கவில்லை. தமிழகம், ஆந்திரம், கேரளம், கர்நாடக
மாநிலங்களைச் சேர்ந்த பெண்கள் இவர்கள். இவர்கள் அத்தனை பேரும் தங்களுக்கு
அவசரகால பாஸ்போர்ட் கேட்டுப் பகலெல்லாம் இந்தியத் தூதரகத்தின் வாசலில்
வந்து காத்துக்கிடந்தார்கள். இரவில் அவர்களுக்கு மட்டும் தங்குவதற்குக்
காப்பகம் ஒன்றை ஏற்பாடு செய்து கொடுத்தது தூதரகம்.
அந்தப் பெண்கள்
பகலெல்லாம் தூதரக வாசலில் காத்துக் கிடந்துவிட்டு இரவு அந்தக் காப்பகத்தில்
போய்த் தங்கினார்கள். இரண்டு மாதத்துக்கும் மேலாக இந்த நிலை தொடர்ந்தது.
இந்த நிலையில், அந்தக் காப்பகத்தின் வார்டனுக்குக் கரோனா தொற்று
வந்துவிட்டதால் காப்பகத்தை மூடிவிட்டு அந்த 23 பெண்களையும் அங்கிருந்து
வெளியேற்றி விட்டார்கள். இப்போது எந்த ஆதரவும் இல்லாமல் தெருவில் விடப்பட்ட
அந்தப் பெண்களில் சிலரைப் பற்றி வரும் செய்திகளைக் கேட்கும்போது தமிழரான
நாங்கள் கூனிக் குறுகிப் போகிறோம்.
பிழைக்க வந்த பெண்களை இந்த
நிலைக்கு ஆளாக்கியதில் இந்தியத் தூதரகத்தின் மெத்தனப் போக்கும் இருக்கிறது.
எனவேதான் இதையெல்லாம் சுட்டிக்காட்டி இந்தியத் தூதரகத்தின் மீது சென்னை
உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருக்கிறோம். சீக்கிரமே அது
விசாரணைக்கு வரும்போது நீதிமன்றம் கேட்கும் கேள்விகளுக்கு இந்தியத் தூதரக
அதிகாரிகள் பதில் சொல்லியே தீரவேண்டும். அப்படியாவது இங்கே சிக்கிக்
கொண்டுள்ள இந்திய உறவுகளுக்கு ஒரு விடிவு பிறக்கும் என்று
காத்திருக்கிறோம்' என்றார்.
No comments:
Post a Comment