
புதுச்சேரி சுகாதாரத்துறை அலுவலகத்தில் பணியில் ஈடுபட்டிருந்த
அதிகாரிகளைத் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி கடுமையாகப் பேசியதாகக் கூறப்படும்
விவகாரத்தில், கிரண் பேடிக்கு எதிராக மருத்துவர்கள் போராட்டம் நடத்தினர்.
மேலும்,
கிரண் பேடி கூறியதற்கு வருத்தம் தெரிவித்து, அவர் கூறிய வார்த்தைகளைத்
திரும்பப்பெறச் சட்டப்பேரவையில் சபாநாயகர் வலியுறுத்தினார்.
கேள்வி... விசாரணை
சனிக்கிழமையன்று,
புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குநர் அலுவலகத்தில் கொரோனா தடுப்பு பணிகள்
குறித்து துணைநிலை ஆளுநர் கிரண்பேடி ஆய்வுக்குச் சென்றார். அப்போது
அங்கிருந்த சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் கொரோனா தடுப்பு திட்டங்கள்
குறித்து கேள்வி எழுப்பினார்.
அப்போது, "கொரோனா தடுப்பு பணியில், பொதுவான வழிமுறை
என்று எதுவுமே இல்லையா? இதுபோன்று செயல்படும் உங்களை பிறகு
பார்த்துக்கொள்கிறேன், நீங்கள் தோல்வியடைந்துவிட்டீர்கள், வழிமுறையை
முறையாகப் பின்பற்றவில்லை. இதனால், உங்கள் மீது துறை ரீதியான விசாரணை
நடத்தப்பட வேண்டும். ஆனால், இது அதற்கான நேரம் அல்ல, செயல்படுவதற்கான
நேரம். ஆரம்ப சுகாதார நிலையத்தில் எவ்வாறு ஆய்வு செய்தீர்கள்? கொரோனா
தடுப்பு நடவடிக்கைக்கான பரிந்துரைகளை ஏன் அமல்படுத்தவில்லை? அதன்படி,
தினமும் என்ன செய்தீர்கள் என்ற விபரங்களும் தெளிவாக இல்லை," என
அதிகாரிகளிடம் கடுமையாகச் சாடினார்.
தொடர்ந்து பேசிய அவர், "கொரோனா
தொற்றால் 26 உயிரிழப்பு குறித்து அறிக்கை எனக்குச் சமர்ப்பிக்கப்பட
வேண்டும். கடந்த கால நிலவரம் எப்படி இருந்தது என்பதை ஒப்பிடக்கூடிய வகையில்
அது இருக்க வேண்டும். அதேபோன்று காவல்துறையுடன் ஒருங்கிணைந்து
செயல்பட்டால்தான் மாற்றத்தை ஏற்படுத்த முடியும். ஆனால் நீங்கள் நோயாளிகளை
மட்டும் பின்தொடர்ந்து சென்று கொண்டிருக்கிறீர்கள்," என்றார் கிரண்பேடி.
'முட்டாள் கிடையாது'
மேலும்
அவர், "நான் ஒன்றும் முட்டாள் கிடையாது. வெறும் தரவுகளை மட்டும்
காண்பிப்பதுதான் தற்போது நடக்கிறது. கடந்த காலம் எப்படி இருந்தது என்பதை
என் கண்ணால் பார்த்திருக்கிறேன். நீங்கள் நன்றாக வேலை செய்யத் தயாராக
இருக்கிறீர்களா? அல்லது மருத்துவ விடுப்பில் செல்லப் போகிறீர்களா? இவ்வாறு
பணிசெய்ய, ஏன் இங்கே இருக்க வேண்டும்," என அதிகாரிகளிடம் கிரண் பேடி
கடுமையாகக் கேள்வி எழுப்பினார்
அதிகாரிகளிடம் கிரண்பேடி நடந்து கொண்ட
விதத்துக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இதனால், கொரோனா பணியில்
ஈடுபட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள், மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும்
ஊழியர்கள் பலர் மன உளைச்சலுக்கு ஆளாகினர். கொரோனா நேரத்தில் கடுமையாகப் பணி
செய்தும், எங்களுக்கு அவப்பெயர் கிடைத்துவிட்டதாக மருத்துவர்கள்
வேதனைப்படுகின்றனர். மேலும், துணைநிலை ஆளுநர் கிரண் பேடியைக் கண்டித்து
சுகாதார நிலையங்களில் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் ஊழியர்கள்
கருப்பு பேட்ஜ் அணிந்து தற்போது பணியாற்றி வருகின்றனர்.
புதுச்சேரி
யூனியன் பிரதேசத்தில் நேற்று நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்த விவகாரம்
சர்ச்சை ஏற்படுத்திய நிலையில், இன்று (ஜூலை 21) இரண்டாவது நாளாகக் கூடிய
பட்ஜெட் கூட்டத்தொடரில் மருத்துவர்களை ஆளுர் கிரண்பேடி அவமதித்ததாக ஆளுநர்
கிரண்பேடி மீது கண்டனத் தீர்மானம் கொண்டுவர வேண்டும் எனக் காங்கிரஸ்
மற்றும் திமுக உறுப்பினர்கள் பேரவையில் பேசியது சர்ச்சையை
ஏற்படுத்தியுள்ளது.
அவ்வாறு செய்யக்கூடாது
இதனிடையே,
பேரவையில் பேசிய முதல்வர் நாராயணசாமி, "கொரோனா நோய்த் தொற்று தடுப்பு
மற்றும் சிகிச்சையாக்கும் உன்னத பணியில் ஈடுபட்டிருக்கும் மருத்துவர்கள்
மற்றும் அதிகாரிகளைக் கண்ணியமாக நடத்தப்பட வேண்டும். இதைத் துணைநிலை ஆளுநர்
கடைப்பிடிக்க வேண்டும். பலமுறை அதிகாரிகளை பொது இடங்களில் கிரண்பேடி
திட்டிய போது அவ்வாறு செய்யக்கூடாது எனக் கூறியுள்ளேன். இந்த பேரிடர்
காலத்தில் கிரண் பேடி அரசுடன் இணைந்து பணியாற்ற வேண்டும். புதுச்சேரி அரசு
என்றும் மருத்துவர்களுக்குத் துணையாக இருக்கிறது," என கூறினார்.
குறிப்பாக,
மருத்துவ அதிகாரிகள் மீது ஆளுநர் கிரண் பேடியின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு
தெரிவிக்கும் விதமாக புதுச்சேரி சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி
கிருஷ்ணாராவ் சட்டபேரவைக்கு கருப்பு துண்டு அணிந்து வந்திருந்தார்.
செய்தியாளர்களை
சந்தித்த அவர் கூறுகையில், "கடந்த நான்கு மாதங்களாக இரவு பகலாக கொரோனா
தடுப்பு பணியில் ஈடுபட்டு வந்த மருத்துவர்கள் மற்றும் அதிகாரிகளைத்
துணைநிலை ஆளுநர் கிரண் பேடி மனம் வேதனைப்படும்படி திட்டியுள்ளார்.
இதையடுத்து நான் சுகாதாரத் துறைக்குச் சென்று கிரண் பேடி செய்த தவறுக்காக
அனைத்து மருத்துவர்கள் மற்றும் ஊழியர்களிடம் மன்னிப்பு கோரினேன்," என்றார்.
No comments:
Post a Comment