
6 வயது மதிக்கத்தக்கதாக கருதப்படும் சிறுமியொருவர் பாலியல்
வல்லுறவிற்கு உட்படுத்தப்படும் விதத்திலான காணொளியொன்று சமூக
வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை குறித்து இலங்கை மக்கள் மத்தியில்
அதிகளவில் பேசப்பட்டு வருகின்றது.
இந்த சம்பவத்துடன் தொடர்புடையதாக
கூறப்படும் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு, சட்டத்திற்கு முன்
நிறுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் வலு பெற்று வருகின்றது.
எனினும்,
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களை கைது செய்து சட்டத்திற்கு
முன் நிறுத்துவதற்கு உரிய தரப்பினர் நடவடிக்கை எடுக்க தவறி வருவதாக சமூக
செயற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த
சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களம் மற்றும் சிறுவர்
பாதுகாப்பு அதிகார சபை ஆகியவற்றிற்கு முறைப்பாடு செய்துள்ளதாக சிறைக்
கைதிகளின் உரிமைகளை பாதுகாக்கும் குழு அறிக்கையொன்றின் ஊடாக
அறிவித்துள்ளது.
தாம் முதலில் இந்த சம்பவம் தொடர்பில் குற்றப்
புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்ததாகவும், குற்றப் புலனாய்வு
திணைக்களம் இது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் அந்த குழு
குறிப்பிட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து, சிறுவர் பாதுகாப்பு அதிகார
சபையிலும் இந்த சம்பவம் தொடர்பில் முறைப்பாடு செய்துள்ளதாக அந்த குழுவின்
அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எனினும், இந்த சம்பவத்துடன்
தொடர்புடைய சந்தேகநபர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை உரிய தரப்பினர்
எடுப்பதாக தெரியவில்லை என சிறைக் கைதிகளின் உரிமைகளை பாதுகாக்கும் குழு
தெரிவிக்கின்றது.
இந்த விடயம் தொடர்பில் பிபிசி தமிழ் சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையிடம் வினவியது.
இந்த சம்பவம் குறித்து தாம் விசாரணைகளை நடத்தி வருவதாக சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை குறிப்பிட்டது.
இலங்கையில் சிறுவர் துஷ்பிரயோகம் அதிகரிப்பு
2020ஆம்
ஆண்டு ஆரம்பமாகி முதல் 15 நாட்களுக்குள் மாத்திரம் 54 சிறுவர் துஷ்பிரயோக
சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ
நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
இவற்றில் 34 சம்பவங்கள் தொடர்பில் விசாரணைகள் நிறைவடைந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
2012ஆம் ஆண்டு முதல் 2020ஆம் ஆண்டு வரையான காலப் பகுதியில் மாத்திரம் இலங்கையில் 5891 சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
நாட்டில்
சிறுவர் துஷ்பிரயோகம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை காணக்கூடியதாக
உள்ளதாக சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவிக்கின்றது.
இலங்கையில்
நாளாந்தம் இடம்பெறும் துஷ்பிரயோகங்களில் ஒரு சிறு அளவு மாத்திரமே தமது
அதிகார சபைக்கு பதிவாவதாக அந்த அதிகார சபையின் உயர் அதிகாரியொருவர்
கூறியுள்ளார்.
No comments:
Post a Comment