
கன்னியாகுமரி மாவட்டத்தில் கிஸான் நிதியுதவி திட்டத்தில் முறைகேடு கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து தகுதியற்ற விவசாயிகள் அல்லாத 451 பேரின் வங்கிக் கணக்குகளை முடக்கி பணத்தை பிடித்தம் செய்ய மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.
பாரதப் பிரதமரின் கிஸான் திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு ஆண்டு தோறும் 3 தவணையாக ரூ.6 ஆயிரம் நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தில் தமிழகத்தில் விசாயிகள் அல்லாதோர் சேர்க்கப்பட்டு முறைகேடாக வங்கி கணக்கு மூலம் பணம் பெற்றிருப்பது கண்டறியப்பட்டது.
குறிப்பாக கன்னியாகுமரி மாவட்டத்தில் அதிக அளவில் மோசடி நடந்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதைத்தொடர்ந்து குமரி மாவட்ட வருவாய் அலுவலர் ரேவதி உத்தரவின் பேரில் வருவாய்த்துறையினர், மற்றும் வேளாண்துறை அதிகாரிகள் கடந்த ஏப்ரல் மாதத்திற்கு பின்னர் கிஸான் நிதிதிட்டத்தில் சேர்க்கப்பட்ட 14 ஆயிரம் பேரின் விண்ணப்பங்களை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர்.
இதில் முதற்கட்டமாக விவசாயிகள் அல்லாத அரசு அலுவலர்கள், ஓய்வூதியம் பெறுபவர்கள், பிற தொழில் நடத்துவோர் என 241 பேர் கிஸான் திட்டத்தில் சேர்க்கப்பட்டு பணப்பலன்களை இரு தவணையாக பெற்று வந்தது கணடறியப்பட்டது.
இது தொடர்பான விவரங்கள் மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே, மற்றும் வேளாண் அதிகாரிகளிடம் சமர்ப்பிக்கப்பட்டது. இவ்விவரங்கள் உண்மை என நிரூபணம் ஆன நிலையில் 241 பேரும் கிஸான் நிதியுதவி பெற்று வந்த வங்கிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
இதைத்தொடர்ந்து அந்த கணக்குகளை வங்கி அலுவலர்கள் முடக்கம் செய்தனர். விசாரணையில் இதுவரை முறைகேடாக இரு தவணையாக ரூ.4ஆயிரம் நிதியுதவி பெற்றிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இத்தொகையை விவசாயி அல்லாமல் பணம் பெற்றோர்களிடம் இருந்து பிடித்தம் செய்ய மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த முறைகேடு தொடர்பாக குமரி மாவட்டத்தில் தீவிர விசாரணை நடந்து வரும் நிலையில் இன்று வரை நாகர்கோவில், கன்னியாகுமரி, மார்த்தாண்டம், குலசேகரம், தென்தாமரைகுளம், சாமிதோப்பு மேல்புறம், நெய்யூர், திங்கள்நகர், குழித்துறை, ஆரல்வாய்மொழி, புதுக்கடை, கருங்கல், மைலாடி உட்பட பல பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் அல்லாமல் நிதியுதவி பெற்ற 451 பேரின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. விவசாயிகள் அல்லாமல் அரசு பணி, மற்றும் பிற தொழில்களில் ஈடுபட்டுள்ளோரை கிஸான் திட்டத்தில் சேர்த்து
உதவித்தொகை கிடைப்பதற்கு உடந்தையாக இருந்த குமரி மாவட்டத்தை சேர்ந்த வேளாண், மற்றும் பிற அலுவலர்கள் மீது விசாரணை மேற்கொள்ளளப்பட்டு வருகிறது. அவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட இருக்கிறது.
No comments:
Post a Comment