குடியுரிமை திருத்தச் சட்டத்தைக் கண்டித்து எஸ்.டி.பி.ஐ கட்சியின்
சார்பாக நெல்லை மேலப்பாளையத்தில் கடந்த 29-ம் தேதி மாநாடு நடைபெற்றது.
அதில் கலந்துகொண்டு பேசிய நெல்லை கண்ணன், பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்
அமித் ஷா ஆகியோரைக் கொலை செய்ய வேண்டும் என்று பேசியதாகச் சர்ச்சை
எழுந்தது.

இது தொடர்பாக நெல்லை மாநகர காவல்துறை ஆணையரிடம் பாரதிய ஜனதா கட்சியினர் புகார் அளித்தனர்.
அதன் அடிப்படையில், நெல்லை கண்ணன் மீது இந்திய
இறையாண்மைக்கு எதிராகப் பேசுதல், இரு சமூகத்தினரிடம் மோதல் ஏற்படுத்த
முயலுதல், கொலை முயற்சி உள்ளிட்ட ஐந்து பிரிவுகளில் வழக்கு தொடரப்பட்டது.
அவரைக்
கைது செய்த போலீஸார், நெல்லை மருத்துவமனையில் உடல்நலப் பரிசோதனை முடித்து
பாளையங்கோட்டை மத்திய சிறைச்சாலைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், அங்கு
அவருக்குப் போதிய பாதுகாப்பு இல்லை என்பதற்காகச் சேலம் சிறைச்சாலைக்கு
அனுப்பி வைக்கப்பட்டார்.
அவரை
ஜாமீனில் விடுவிக்கக் கோரி நெல்லை 2-வது மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில்
தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், முதன்மை அமர்வு
நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. வழக்கறிஞர்கள் பிரம்மா,
காமராஜ் ஆகியோர் இந்த மனுவைத் தாக்கல் செய்தார்கள்.
முதன்மை அமர்வு
நீதிமன்ற நீதிபதி நசீர் அகமது முன்னிலையில் நடந்த விசாரணையின்போது நெல்லை
கண்ணன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பிரம்மா, ``நெல்லைப் பேச்சு வழக்கில்
`சோலி' என்ற சொல்லுக்கு வேலை என்று பொருள் இருக்கிறது. அவர் அந்த
அர்த்தத்திலேயே மேடையில் பேசினார். அவர் யாரையும் வன்முறையைத் தூண்டும்
வகையில் பேசவில்லை. அவரது பேச்சு தவறாக அர்த்தப்படுத்தப்பட் டு வழக்கு
தொடரப்பட்டிருக்கிறது'' என்று வாதிட்டனர்.
பாரதிய
ஜனதா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ராஜீவ்காந்தி, `நெல்லை கண்ணன் பேச்சு
வன்முறையைத் தூண்டும் வகையில் இருந்தது. இரு சமூகங்களுக்கு இடையே பகையைத்
தூண்டும் வகையில் அவர் பேசினார். அவர் பேசிய பின்னரே குமரி மாவட்டத்தில்
சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் கொல்லப்பட்டார்' என்று வாதிட்டார். ஆனால், ஜாமீன்
மனு தொடர்பான விசாரணைக்குத் தொடர்பு இல்லாதவற்றைப் பேசக்கூடாது என நீதிபதி
எதிர்ப்பு தெரிவித்தார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நெல்லை
முதன்மை அமர்வு நீதிமன்றம் நெல்லை கண்ணனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி
உத்தரவிட்டது. நீதிமன்ற நிபந்தனையின்படி சேலம் சிறையில் இருந்து வெளியே
வந்த அவர், இன்று மாலை மேலப்பாளையம் காவல்நிலையத்தில் கையெழுத்திட்டார்.
எஸ்.டி.பி.ஐ மற்றும் இந்திய யூனியன் முஸ்லீம் கட்சியின் மாவட்ட நிர்வாகிகள்
பலரும் அவருடன் சென்றார்கள்.
காவல்நிலையத்தில்
கையெழுத்திட்ட பின்னர் வெளியே வந்த அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது,
``நெல்லைத் தமிழின் எல்லை தெரியாதவர்களால் வந்த தொல்லை'' என்று
சிரித்தபடியே சொல்லிவிட்டு காரில் ஏறிச் சென்றார்.

No comments:
Post a Comment