அதிக தொகை வசூலிப்பு
சென்னை ஐகோர்ட்டில், கோயமுத்தூர் நுகர்வோர் குரல் என்ற அமைப்பு சார்பில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், கோவையில் ஆட்டோ ஓட்டுனர்கள் அளவுக்கு அதிகமாக வாடகைக் கட்டணத்தை பொதுமக்களிடம் இருந்து வசூலிக்கின்றனர். எனவே, சென்னை மாநகருக்கு ஆட்டோ கட்டணம் நிர்ணயம் செய்தது போல, கோவை மாநகருக்கும் கட்டணத்தை நிர்ணயம் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிடவேண்டும்’ என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, கோவை மாநகரத்துக்கு ஆட்டோ கட்டணம் நிர்ணயம் செய்து 5 வாரத்துக்குள் அரசாணை பிறப்பிக்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.
கட்டணம் நிர்ணயம்
இந்த நிலையில், இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல், எம்.சத்தியநாராயணன் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக உள்துறை துணை செயலாளர் எம்.ராமலிங்கம் பதில் மனு தாக்கல் செய்தார். அதில், ‘கோவை மாநகருக்கு ஆட்டோ கட்டணம் நிர்ணயம் செய்து அக்டோபர் 16–ந் தேதி தமிழக உள்துறை (போக்குவரத்து) செயலாளர் அரசாணை பிறப்பித்துள்ளார். இதன்படி, குறைந்தது (1.8 கிலோ மீட்டர் தூரத்துக்கு) ரூ.25 என்றும் அதன்பின்னர் ஒவ்வொரு கிலோ மீட்டருக்கு தலா ரூ.12 என்றும் காத்திருப்பு கட்டணம் 5 நிமிடத்துக்கு ரூ.3.50 என்றும் இரவு கட்டணம், பகல் கட்டணத்தை விட 50 சதவீதம் கூடுதலாக வசூலிக்கலாம் என்றும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஆட்டோ கட்டணம் தமிழகம் முழுவதும் அமல்படுத்த அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது’ என்று கூறியிருந்தார்.
கட்டணம் மாற்றியமைக்க வேண்டும்
இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:–
ஆட்டோ கட்டணத்தை நிர்ணயம் செய்து அரசாணை பிறப்பித்ததை தொடர்ந்து கீழ்கண்ட நிபந்தனைகளை தீவிரமாக அமல்படுத்தும்படி தமிழக அரசுக்கு உத்தரவிடுகிறோம்.
பெட்ரோலிய எரிப்பொருட்களின் விலை நிலவரத்துக்கு ஏற்ப 3 மாதத்துக்கு ஒருமுறை ஆட்டோ கட்டணத்தை தமிழக அரசு நிர்ணயம் செய்து, அதற்கான அரசாணைகளை பிறப்பிக்க வேண்டும். அந்த கட்டண விவரங்கள் பயணிகளுக்கு நன்கு தெரியும்படி, ஆட்டோவில் எழுதி வைக்கவேண்டும்.
கடுமையான நடவடிக்கை
நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட அதிக கட்டணம் வசூலிக்கும் ஆட்டோ டிரைவர்கள் மீது புகார் தெரிவிக்க கட்டணம் இல்லா இலவச தொலைபேசி எண்ணை ஒவ்வொரு ஆட்டோவிலும் (டிரைவர் இருக்கைக்கு பின்னால்) பெரிய அளவில் எழுதியிருக்கவேண்டும். இந்த இலவச தொலைபேசி எண், ஒவ்வொரு மாவட்டத்துக்கும் தனித்தனியாக உருவாக்கவேண்டும்.
அவ்வாறு பயணிகளிடம் இருந்து வரும் புகார்கள் மீது 2 நாட்களுக்குள் தகுந்த நடவடிக்கைகளை அதிகாரிகள் மேற்கொள்ளவேண்டும். தொடர்ந்து அதிக கட்டணம் வசூலித்து புகாரில் சிக்கும் ஆட்டோ டிரைவர் மற்றும் அந்த ஆட்டோவின் உரிமையாளர்கள் மீது கடுமையான நடவடிக்கையை எடுக்கவேண்டும்.
பொதுமக்கள் நலன்
அந்த ஆட்டோவுக்கு வழங்கப்பட்ட உரிமத்தை தற்காலிகமாக நிறுத்தி வைப்பது அல்லது ரத்து செய்வது, ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்வது தொடர்பான விதிமுறைகளையும் அரசு உருவாக்கவேண்டும். பொதுமக்களின் நலனுக்காக பிறப்பிக்கப்பட்டுள்ள இந்த நிபந்தனைகளை அனைத்தையும் வட்டார போக்குவரத்து அதிகாரி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆகியோர் தீவிரமாக அமல்படுத்த வேண்டும்.
இவ்வாறு நீதிபதிகள் கூறியுள்ளனர்.
No comments:
Post a Comment