வங்கி கணக்கு வைத்துள்ள ஏ.டி.எம். மையத்தில் ஒரே மாதத்தில் 5 முறைக்கு மேல் பணம் எடுத்தாலும், பணம் எடுக்கும் ஒவ்வொரு முறைக்கும் இனி தலா ரூ.20 பிடித்தம் செய்யப்படும். இந்த புதிய நடைமுறை இன்று(சனிக்கிழமை) முதல் சென்னை, டெல்லி உள்பட 6 பெரு நகரங்களில் அமலுக்கு வருகிறது.
ஏ.டி.எம். வசதி
வங்கிகளில் சேமிப்பு மற்றும் நடப்பு கணக்கு வைத்து இருப்பவர்கள் தற்போது தாங்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கியின் ஏ.டி.எம். மையங்களில் ஒரு மாதத்தில் எத்தனை முறைவேண்டுமானாலும் தேவைக்கு ஏற்ப பணம் எடுத்துக்கொள்ளும் வசதி இருக்கிறது. அதற்கு எந்த பணமும் பிடித்தம் செய்யப்படுவதில்லை.
இதேபோல் மற்ற வங்கிகளின் ஏ.டி.எம். மையங்கள் என்றால் இவர்களால் 5 முறை வரை பணம் எடுக்க முடியும். இதற்கு மேல் பணம் எடுக்கும் ஒவ்வொரு முறைக்கும் இதுவரை தலா ரூ.20 பணம் பிடித்தம் செய்யப்பட்டு வந்தது.
ஏ.டி.எம். மூலம் பெறப்படும் இருப்புத்தொகை பற்றிய சிறு அறிக்கையை பெறுவதற்கும் இதே நடைமுறைதான் பின்பற்றப்பட்டு வந்தது.
புதிய முறை
கடந்த ஆகஸ்டு மாதம் இந்திய ரிசர்வ் வங்கி, நவம்பர் 1-ந்தேதி (இன்று) முதல் இதில் புதிய நடைமுறையை கடைப்பிடிக்கப்போவதாக அறிவித்தது.
அதன்படி இன்று (சனிக்கிழமை) முதல், வங்கிகளில் கணக்கு வைத்துள்ளவர்கள் தங்களுடைய வங்கிகளின் ஏ.டி.எம். மையங்களில் ஒரு மாதத்தில் 5 முறை மட்டுமே எந்த வித கட்டணமும் இன்றி பணம் எடுக்க இயலும்.
அதற்கு மேல் பணம் எடுத்தால் அதற்கேற்ப ஒவ்வொரு முறைக்கும் தலா ரூ.20 பிடித்தம் செய்யப்படும். இருப்புத்தொகை பற்றிய சிறு அறிக்கையை பெறுவதற்கும் இந்த விதிமுறை பொருந்தும்.
6 பெரு நகரங்களில் அமல்
அதேநேரம், குறிப்பிட்ட வங்கியில் கணக்கு வைத்திருப்பவர் வேறொரு வங்கியின் ஏ.டி.எம். மையத்தில் பணப்பிடித்தம் இன்றி 3 முறை மட்டுமே இனி பணம் எடுக்க முடியும். இதற்கு மேல் எடுத்தால், பணம் எடுக்கும் ஒவ்வொரு முறைக்கும் தலா ரூ.20 பிடித்தம் செய்யப்படும்.
இதேபோல் வங்கிக் கணக்கு வைத்திராத வேறு வங்கிகளின் ஏ.டி.எம். மையங்களில் 3 முறைக்கு மேல் இருப்புத்தொகை பற்றிய சிறு அறிக்கையை பெற்றாலும், ஒவ்வொரு முறையும் தலா ரூ.20 பிடித்தம் செய்யப்படும்.
இந்த புதிய நடைமுறை முதல் கட்டமாக டெல்லி, மும்பை, சென்னை, கொல்கத்தா, ஐதராபாத், பெங்களூர் ஆகிய பெருநகரங்களில் அமலுக்கு வருகிறது.
வங்கிகள் சங்கம் முறையீடு
புதிய ஏ.டி.எம். எந்திரங்களை பொருத்துதல், அவற்றின் பராமரிப்பு செலவு, அடிக்கடி பணம் எடுப்பதால் ஏற்படும் உட்கணக்கு பரிமாற்றம் போன்ற பிரச்சினைகளை காரணம் காட்டி இந்திய வங்கிகளின் சங்கங்கள் முறையிட்டதன் பேரில் இந்த நடவடிக்கையை இந்திய ரிசர்வ் வங்கி மேற்கொண்டு உள்ளது.
கடந்த மார்ச் மாதம் 31-ந்தேதி முடிய நாட்டில் சுமார் 1 லட்சத்து 60 ஆயிரம் ஏ.டி.எம். மையங்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment