6 வயது பள்ளி சிறுமியை பலாத்காரம் செய்ததாக பெங்களூரில் ஹிந்தி ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். அடுத்தடுத்து பெங்களூரில் பள்ளி சிறுமிகள் மீது நடைபெறும் பலாத்கார சம்பவம் பெற்றோர்கள் மத்தியில் பெரும் அச்சத்தையும், ஆதங்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூரின் ஆடம்பர ஏரியாக்களில் ஒன்று இந்திராநகர். இங்குள்ள பிரபல கேம்ப்ரிட்ஜ் பள்ளியில்தான் இந்த பாலியல் தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது. இங்குள்ள பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்துவரும் 6 வயது சிறுமி ராதிகா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) தனது ஹிந்தி ஆசிரியரால் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
கஷ்டப்படும் குடும்பம்
ராதிகாவின் தாய், ஒரு தனியார் நிறுவனத்தில் பராமரிப்பு பணியில் வேலை பார்க்கும் நிலையில், தந்தை டாக்சி டிரைவராக உள்ளார். இருப்பினும் மகள் நல்ல பள்ளியில் படிக்க வேண்டும் என்பதற்காக இப்பள்ளியில் ராதிகாவை சேர்த்திருந்தனர். ராதிகாவும் படிப்பில் சுட்டி என்று கூறப்படுகிறது.
வலி
இந்நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை பள்ளி நேரம் முடிந்து வீட்டுக்கு வந்த ராதிகா தனது பிறப்பு உறுப்பில் வலி இருப்பதாக தாயிடம் கூறியுள்ளார். ஆனால் தாயோ, சாதாரண பிரச்சினைதான் என்று நினைத்து மறுநாளும் பள்ளிக்கு அனுப்பியுள்ளார்.
உறுதி செய்த டாக்டர்
மறுநாள் மாலையில், வலி இன்னும் அதிகமாக இருப்பதாக தாயிடம் கூறியுள்ளார் ராதிகா. இதனால் தனியார் மருத்துவமனை ஒன்றில் ராதிகாவை பரிசோதனைக்கு கூட்டிச் சென்ற அவரது தாய்க்கு அதிர்ச்சி காத்திருந்தது. ஏனெனில், ராதிகா பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக மருத்துவர் தெரிவித்தார். ஆயினும் அதை எழுத்துப்பூர்வமாக தர முடியாது என மறுத்துவிட்டார்.
ஹெல்ப் செய்யாத ஹெல்ப்லைன்
அதிகம் கல்வி பயிலாத ராதிகாவின் தாய்க்கு, அடுத்து என்ன செய்ய என்பது புரியவில்லை. எப்படியோ தெரிந்து வைத்திருந்த, அரசு இயக்கும் குழந்தைகள் ஹெல்ப்லைனுக்கு போன் செய்துள்ளார். ஆனால் மறுமுனையில் போனை எடுக்க ஆளே இல்லையாம்.
உடன் பணியாற்றுவோர் உதவி
இதனால் என்ன செய்ய என புரியாமல் மறுநாளும் (நேற்று) ராதிகாவை பள்ளிக்கே அனுப்பி வைத்துள்ளார் அவரது தாய். இதன்பிறகு வேலைக்கு சென்ற ராதிகாவின் தாய், அழுதபடியே இருந்ததை பார்த்த உடன் வேலை பார்க்கும் சிலர் அதுகுறித்து விசாரித்துள்ளனர். அப்போது அவர்களுக்கு விவரம் தெரிந்து, குழந்தைகள் நல கமிட்டியை தொடர்பு கொண்டு அவர்கள் ஆலோசனைப்படி ஜீவன்பீமாநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
ஹிந்தி ஆசிரியர்
புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், சிறுமியிடம் பேச்சு கொடுத்து கேட்டு பார்த்தபோது, பலாத்காரம் செய்தது ஹிந்தி ஆசிரியர் ஜெய்சங்கர் (37) என்று தெரிவித்துள்ளார். இதையடுத்து நேற்றிரவே ஜெய்சங்கர் வீட்டுக்கு சென்று போலீசார் அவரை கைது செய்தனர். விசாரணையில், 28 மற்றும் 29ம்தேதிகளில் சிறுமியை இருமுறை பலாத்காரம் செய்ததை ஒப்புக்கொண்டார். இந்த பலாத்காரம், ஆண்களுக்கான கழிவறையில் வைத்து நடத்தப்பட்டுள்ளதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
ஒரே வாரத்தில்..
கடந்த வாரம்தான் பெங்களூர் ஜாலஹள்ளியிலுள்ள ஆர்க்கிட் இன்டெர்நேஷனல் பள்ளியில் 3 வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டார். இந்நிலையில் மீண்டும் ஒரு சம்பவம் பெங்களூரில் நடந்துள்ளது. இந்த சம்பவங்களால் பெங்களூரில் பள்ளிக்கு குழந்தைகளை அனுப்பி வைக்கும் பெற்றோர் ஆதங்கத்திலும், அச்சத்திலும் இருக்கின்றனர்.
போலீசார் கெடுபிடி
சிசிடிவி பொருத்துவது, பள்ளி வேன்களில் ஜிபிஎஸ் பொருத்துவது என பள்ளி மாணவிகளின் பாதுகாப்புக்காக, பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை பெங்களூர் போலீசார் பிறப்பித்துள்ளனர். பள்ளியில் வேலை செய்யும் பிரின்சிபால் முதல் அடிமட்ட பணியாளர் வரையில் அனைவரது முகவரியும் போலீசாரிடம் உள்ளது.
தொடரும் துஷ்பிரயோகம்
இதுபோன்ற கிடுக்குப்பிடிக்கு பிறகும் குழந்தைகள் மீதான துஷ்பிரயோகம் தொடர்ந்துவருவது குழந்தைகள் நல ஆர்வலர்களையும், பெங்களூர் நகர மக்களையும் கவலையில் ஆழ்த்தியுள்ளது.
No comments:
Post a Comment