Latest News

குடும்பத்தின் நிம்மதி உங்கள் கையில் !

ஆக்கம் : ஆடிட்டர் பெரோஸ்கான்
முன் எப்போதுமில்லாத அளவுக்கு விஞ்ஞானம் மற்றும் தொழில் நுட்பத்துறையில் இமாலய முன்னேற்றத்தை மனிதன் அடைந்துள்ளான் என்பதை மறுக்கவியலாது. அதே சமயம் இவ்வளவு பெரிய முன்னேற்றத்தை அவன் அடைந்திருந்தாலும் – அவனுடைய தனிப்பட்ட வாழ்வில் நிம்மதியற்ற நிலையிலும் பல்வேறு குழப்பத்துடனும் தான் இருக்கிறான் என்பதும் கசப்பான உண்மை.


இதற்கான காரணத்தை நாம் ஆராய்ந்தால், விஞ்ஞானத்தையோ, அல்லது தொழில்நுட்பத்தையோ நாம் குறை காண முடியாது. இதற்கான விடையை தத்துவ ஞானியும் கவிஞருமான அல்லாமா இக்பால் இரண்டே இரண்டு வரிகளில் விளக்குவார்.



“தொழில்நுட்ப வளர்ச்சி என்பதும் மனித முன்னேற்றம் என்பதும் வெவ்வேறானவை”



தொழில்நுட்ப வளர்ச்சி என்பது விஞ்ஞான வளர்ச்சியோடு தொடர்புடையது. அது மனிதனின் உடல் சார்ந்த சொகுசான வாழ்விற்குத் தேவையானதை நிறைவு செய்யும். அது போல அவனது தேவைகளை அதிவிரைவில் செய்து முடிக்க அது உதவும். இண்டர்நெட், அதிவிரைவு வாகனங்கள் போன்றவற்றை இதற்கு உதாரணங்களாகக் கூறலாம்.



ஆனால்… மனித முன்னேற்றம் என்பது மனிதனுடைய ஒழுக்கம், நற்பண்புகளை மையமாகக் கொண்டது. யாரெல்லாம் நல்லொழுக்கம், நற்பண்புகளுக்கு முன்னுரிமை அளித்து வாழ்கிறார்களோ அவர்கள் குறைவாக பொருளீட்டினாலும் நிறைவான வாழ்வுக்குச் சொந்தக்காரர்கள். ஆனால் யாரெல்லாம் பேராசையை அடிப்படையாகக் கொண்ட நவீன சிந்தாந்தங்களுக்கு அடிமைப்பட்டு வாழ்கிறார்களோ அவர்கள் அதிகமான பொருளீட்டுபவர்களாய்த் திகழ்ந்தாலும் அமைதி இன்றி தவிப்பதைத்தான் நம் அனுபவத்தில் காண்கிறோம்.



நபித்தோழர்களை எடுத்துக் கொள்ளுங்கள். அவர்கள் தங்களுடைய வாழ்வில் நல்லொழுக்கங்களுக்கு அதிமுக்கியத்துவம் கொடுத்து வந்தார்கள். அவர்கள் உலக வாழ்விலும் மறுமை வாழ்விலும் வெற்றி பெற்றார்கள் என்றால், எதற்கு நாம் முக்கியத்துவம் தருவது என்ற சூட்சுமத்தை அவர்கள் விளங்கி வைத்திருந்தார்கள். ஆனால் அத்தகைய சூட்சுமத்தை இன்றைய இஸ்லாமியர்கள் நுகர்வுக் கலாச்சாரத்தின் முன் மண்டியிட வைத்து விட்டார்கள்.



இறைவனால் நமக்கு வழங்கப்பட்டுள்ள அறிவு, செல்வம், நேரம், உடல்பலம் இவை எல்லாவற்றையும் நாம் திட்டமிட்டு நிர்வகித்தோம் என்றால் நாம் எத்தகைய நிம்மதிக்காகவும் மகிழ்ச்சிக்காகவும் ஏங்கி அலைகிறோமோ அது நம்மைத் தேடி வரும்.



அதிலும் குறிப்பாக பொருளாதாரம் என்பது இன்றைய வாழ்வின் பல்வேறு விஷயங்களின் ஆதாரமாக உள்ளது. வறுமை இறைநிராகரிப்பிற்கு நம்மை இட்டுச் செல்லும் என்பது நபிமொழி. மேலும் பொருளாதாரப் பிரச்சினை என்பது ஏழை, பணக்காரன், நடுத்தரவாதி என எல்லோருக்கும் பொதுவானது. எனவே, எல்லோரும் அதை முறையாக நிர்வகிக்கத் (Money Management) தெரிந்திருக்க வேண்டும். இல்லை என்றால் பல்வேறு சிரமத்திற்கும் கேவலத்திற்கும் உள்ளாக நேரிடும்.



நம்மூர் பக்கம் போனால், சிலரை வாழ்ந்து கெட்ட குடும்பம் என்று சொல்வார்கள். தினசரி பத்திரிகைகளில் வங்கிகளுக்கு செலுத்த வேண்டிய கடனைத் திருப்பிச் செலுத்தாத பல ஒட்டாண்டிகளின்                (Bank Rupt) சோகக் கதைகளைப் படிக்கிறோம். இது போல கந்து வட்டிக்காரர்களிடம் கடன் வாங்கி அதைத் திருப்பித் தர முடியாத அவமானத்தில் மறைந்து வாழ்வதையும், ஆடம்பரமாக வாழ்ந்தவர்கள் இடையில் ஏற்பட்ட பெரும் நஷ்டத்தைத் தாங்க மாட்டாமலும், ஏழ்மையான வாழ்வு இனி இழிவானது என்ற எண்ணத்திலும் குடும்பத்தோடு தங்களுடைய உயிர்களை மாய்த்துக் கொள்ளும் கையாலாகாத் தன்மையையும் பார்க்கிறோம்.



இவை அத்தனையும் Money Management இல்லாமையின் வெளிப்பாடுகள் என்பதில் சிறிதும் சந்தேகமில்லை.



இன்று உலக அளவில் நுகர்வு (பயனீட்டாளர்) கலாச்சாரம் மேலோங்கி நிற்கிறது. கையில் காசு இல்லாவிட்டாலும் காண்பதை எல்லாம் வாங்கிக் குவிக்க வேண்டும் என்று அலைகின்றனர் பலர். இலவசங்களின் பக்கம் அலை மோதிக் கொண்டிருக்கின்றனர் பலர்.



சமீபத்தில் சிங்கப்பூரில் உள்ள பிடோக் எனும் பகுதியில் அதிகாலையில் மெக்டோனல், ஃபாஸ்ட் ஃபுட் உணவகத்தின் முன் மக்கள் நீண்ட வரிசையில் நின்று கொண்டிருந்தனர். அவ்வழியே சென்ற நான் ஆர்வ மிகுதியால் அங்கே வரிசையில் பின்னால் நின்ற ஒருவரிடம் என்ன விவரம் என்று கேட்டேன்.



விவரம் என்னவென்று தெரியாது ஆனால், லைனில் தான் பிந்தி விடக் கூடாது என்பதற்காக நின்று கொண்டிருக்கிறேன் என்று வெகு அலட்சியமாக பதில் அளித்தார். இன்னும் கொஞ்சம் முன்னால் சென்று அங்கு நின்ற இன்னொருவரிடம் விவரத்தைக் கேட்டேன். அதற்கு அவர் சொன்ன பதில் இதுதான்.



“இருபது வெள்ளிக்கு ‘மெக்டோனால்’ வாங்கினால் ஜப்பானியப் பொம்மை ஒன்று இலவசமாகத் தருகிறார்களாம். அதற்காகவே இந்தக் கூட்டம்.”உண்மையில் அந்தப் பொம்மையின் விலை வெறும் ஐம்பது காசுகள் கூடப் பெறாது.



இந்தியாவில் ஒரு சேலைக்கு இன்னொரு சேலை இலவசம் என்ற கூத்து நடக்கிறதே அது போலத்தான் இதுவும். ( யாதும் ஊரே; யாவரும் கேளிர். இலவச மயக்கம் எங்கள் தத்துவம் ஒன்று பாட வேண்டும் போல் இருக்கிறதா…)



ஒன்றை நன்றாக நாம் புரிந்து கொள்ள வேண்டும். ”இலவசம் என்பது ஒரு வியாபார டெக்னிக். தூண்டிலில் மண் புழுவை மாட்டி மீனைப் பிடிப்பது போல ஒன்றின் கீழ் அதிக விலை வைத்து ஒன்றை இலவசமாகத்தான் தர வேண்டும். இல்லையேல், விலை போகாத இருப்புச் சரக்கை நம் தலை மீது கட்ட வேண்டும். இதுதான் இலவசத்தின் இரகசியம். இந்தச் சின்ன விவரம் கூட நம் மக்களிடம் இல்லை.



“ஓர் நம்பிக்கையாளன் ஒரே பொந்தில் இருமுறை கொட்டுப்பட மாட்டான்” என்று எச்சரிக்கை உணர்வு ஊட்டப்பட்ட இஸ்லாமிய சமூகமும் இதில் உள்ளடக்கம் என்பதுதான் வேதனையிலும் வேதனை.



நவீன மார்க்கெட்டிங் டெக்னிக் படிப்பவர் ஆற்று மணலைக்கூட பாக்கெட் போட்டு நம்மிடம் விற்கும் அபார (ஏமாற்றும்) திறமை பெற்றவர்கள். விற்காத சரக்கை ஏமாற்றி வெற்றிகரமாக விற்று விட்டால் இவருக்கு பி.ஹெச்டி. பட்டம் கூட கொடுப்பார்கள்.



வணக்க வழிபாடுகளின் நோக்கத்தை அறிந்து கொள்ளாமல் சடங்கு ரீதியாக நிறைவு செய்து அதில் எவ்வாறு முஸ்லிம்கள் கவனக்குறைவுடன் செயல்படுகிறார்களோ அது போலவே இது போன்ற நடைமுறை வாழ்வியலிலும் ஏமாற்று வேலைகளில் சிக்கித் தடுமாறுகின்றனர். முன்னுரிமை தரவேண்டிய பல விஷயங்களைப் பின்னுக்குத் தள்ளி விட்டனர்.



அத்தகைய பின்னுக்குத் தள்ளப்பட்ட விஷயங்களில் ஒன்று தான் குடும்பப் பொருளாதார நிர்வாகம் என்பது. முதல் கட்டமாக இது சம்பந்தமாக சில விவரங்களை நாம் அறிந்து கொண்டு, அடுத்தடுத்த கட்டமாக முன்னுரிமை தர வேண்டியவற்றை ஒவ்வொன்றாகப் பார்ப்போம். இன்ஷா அல்லாஹ்,



இந்தக் கட்டுரை பாமர மக்களை மனதில் கொண்டு எழுதப்பட்டதாக இருந்தாலும் படித்தவர்கள், செல்வந்தர்கள், இஸ்லாமியர்கள், இஸ்லாமியர் ‘அல்லாதோர் அனைவருக்கும்’ பொதுவான ஒர் எளிமையான வழி காட்டுதலாக அமையும் என நம்புகிறேன். ‘பொருளாதார நிர்வாகம்’ என்பது ஏதோ ஒரு அரசாங்கத்துக்கோ, அல்லது பன்னாட்டு நிறுவனத்துக்கு மட்டுமோ சொந்தமானது அல்ல. ஒவ்வொரு குடும்பத்தலைவனும் தலைவியும் தெரிந்து வைக்க வேண்டிய விஷயங்கள். பொருளாதார நிர்வாகம், எதிர்கால வரவு செலவு திட்டம், அசலான செலவிற்கும் திட்டமிடுதலுக்குமிடையே உள்ள ஒப்பீடு இவற்றையெல்லாம் நாம் அறிந்து கொள்வது அவசியமாகும்.
வரவுக்கும் செலவுக்கும் இடையே சமநிலை காணல்



எவ்வளவு நாம் சம்பாதிக்கிறோம் என்பதை விட அதை நாம் எவ்வாறு, எவ்வழியில் செலவு செய்கிறோம் என்பதே முக்கியம். இதுவே நாம் பொருளாதாரச் சிக்கலிலிருந்து விடுபட ஒரு காரணியாக அமையும்.



மேலோட்டமாக நாம் பார்க்கும் போது செல்வந்தர்கள் மகிழ்ச்சியாக இருப்பது போலவும் குறைந்த வருமானமுள்ளவர்கள் சிரமத்திற்குள்ளாவது போலவும் தோன்றலாம். ஆனால் எதார்த்தத்தில் அவ்விரு சாரார்களும் அவர்களுடைய செல்வம், அதன் மூலம் வரும் வருமானத்தை எவ்விதம் நிர்வகிக்கிறார்கள் என்பதைப் பொறுத்தே அவர்களது வாழ்க்கை நிம்மதியானதாகவும் மகிழ்ச்சியானதாகவும் அமையும்.


பரிந்துரை : 
M.S. ஷிஹாப்தீன்
நன்றி : சமூக் விழிப்புணர்வு பக்கங்கள்

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.