குவைத்: குவைத்தில் முதன்முறையாக நோன்புக் கஞ்சியுடன் நோன்பு திறக்கும் நிகழ்ச்சிகள் நடந்து வருகின்றன. குவைத்தில் தமிழ் பேசும் மக்களுக்காக கடந்த 8 ஆண்டுகளாக சமயம், சமூகம், கல்வி மற்றும் சேவை தளங்களில் சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) முதன்முறையாக குவைத் வாழ் தமிழ் நோன்பாளிகள் நோன்பு திறக்க வசதியாக ரமலான் மாதம் முழுவதும் தமிழக நோன்புக் கஞ்சியுடன் இஃப்தார் நிகழ்ச்சிகளை சங்கத்தின் தமிழ் ஃகுத்பா பள்ளிவாசலில் நடத்தி வருகிறது.
தினந்தோறும் நோன்பு திறக்கும் நேரத்திற்கு முன்பாக சிந்தைக்கினிய சிற்றுரைகள், உள்ளங்களை நிம்மதியாக்கும் இறை நினைவு திக்ர் மஜ்லிஸ், அதைத் தொடர்ந்து சிறப்பான கூட்டுத் துஆவுடன் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்று வருகின்றது. நோன்பு திறப்பதற்கு தமிழக ருசியுடன் கூடிய நோன்புக் கஞ்சி, பேரீத்தம் பழம், தண்ணீர், மோர், குளிர்பானம் மற்றும் பழ வகைகள் வழங்கப்படுகின்றன. மக்ரிப் தொழுகைக்குப் பிறகு இரவு உணவு வழங்கப்படுகின்றது. இஷா மற்றும் தராவீஹ் (ரமலான் சிறப்புத் தொழுகை) தொழுகைகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இந்த நிகழ்ச்சியில் தினந்தோறும் சுமார் 200 சகோதரர்கள் வரை கலந்து கொண்டு பயன்பெறுகின்றனர். விடுமுறை நாட்களில் இந்த எண்ணிக்கை இரண்டு மடங்காக மாறி உள் பள்ளிவாசல் நிரம்ப மக்கள் நோன்பு திறக்கின்றனர்
சுமார் 25 களப்பணியாளர்கள் தங்களின் பணிகளை முடித்துக் கொண்டு அஸர் முதல் பம்பரமாக சுழன்று சேவையாற்றுகின்றனர். நோன்பு திறக்க வரும் நோன்பாளிகளை இன்முகத்துடன் வரவேற்று, அன்பாக அமர வைத்து, சிறப்பான முறையில் உபசாரம் செய்து தாயகத்தில் இருப்பதை போன்ற சூழ்நிலையை உருவாக்கி மகிழ்ச்சியுடன் வழியனுப்பி வைக்கின்றனர். இவ்வருடம் முதல் முறையாக ஆரம்பிக்கப்பட்டாலும் மக்களின் வரவேற்பு அதிகமாக இருப்பதால் இன்ஷா அல்லாஹ் வரும் ஆண்டுகளில் இத்திட்டத்தை மேலும் விரிவுபடுத்தி, நிறைய நோன்பாளிகள் நோன்பு திறப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்படும் என சங்க நிர்வாகிகள் நம்பிக்கை தெரிவித்தனர்
No comments:
Post a Comment