
காங்கிரசுடன் ஒட்டும் இல்லை உறவும் இல்லை. எங்களுக்காக காங்கிரஸ்
வேட்பாளர்களை நிறுத்தாமல் தியாகம் செய்ய அவசியமும் இல்லை என்று பகுஜன்
சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி அதிரடி காட்டியுள்ளார்.
உ.பி.யில் கடந்த முறை 80 தொகுதிகளில் 70 தொகுதிகளில் வெற்றிபெற்று
ஆட்சியில் இருக்கும் பாஜகவை வீழ்த்த உ.பி மாநில கட்சிகளான பகுஜன் சமாஜ்
கட்சியும், சமாஜ்வாடி கட்சியும் ஒன்றிணைந்து உள்ளன. காங்கிரஸ் அந்த
மாநிலத்தில் தனித்து விடப்பட்டுள்ளது. இருந்தாலும் காங்கிரஸ் தலைவர்
ராகுலும் சோனியாகாந்தியும் போட்டியிடும் அமேதி மற்றும் ரே பரேலி ஆகிய
தொகுதிகளில் பகுஜன் சமாஜும் சமாஜ் வாடியும் போட்டியிடுவதில்லை என்று முடிவு
செய்துள்ளன. ஆகவே இந்த இரு தொகுதிகள் தவிர மீதமுள்ள தொகுதிகளில்
இருகட்சிகளும் தங்கள் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளன.
இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியும் அகிலேஷ் யாதவ் மற்றும் மாயாவதி
ஆகியோர் மற்றும் அக்கட்சியின் முக்கியப் பிரமுகர்கள் ஆகியோர் நிற்கும்
தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்துவதில்லை என்ற முடிவுக்கு வந்துள்ளது. இது
குறித்து காங்கிரஸ் ஆலோசித்து வந்தபோதே காங்கிரசின் இந்த முடிவை தெரிந்து
கொண்ட சிறு சிறு கட்சிகளும் தாங்கள் போட்டியிடும் தொகுதிகளில் காங்கிரஸ்
வேட்பாளர்களை நிறுத்த வேண்டாம் என்று காங்கிரசிடம் கோரிக்கை விடுத்து
வந்தது.
அதன்படி சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகள் போட்டியிடும் 7
தொகுதிகளில் தங்கள் வேட்பாளர்களை நிறுத்தப் போவதில்லை என்று அறிவித்தது.
அதோடு அஜித்சிங் போட்டியிடும் தொகுதியிலும் வேட்பாளர்களை நிறுத்துவதில்லை
என்று அறிவித்தது. இந்த அறிவிப்பு வெளியானதுமே பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர்
மாயாவதி இன்று டிவிட்டரில் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் காங்கிரஸ்
கட்சியுடன் எங்களுக்கு எந்த கூட்டணியும் இல்லை. காங்கிரஸ் பரப்பும் பொய்
செய்தியை கட்சியினர் தவறான முடிவுகளை எடுக்க வேண்டாம் என்று கேட்டுக்
கொண்டுள்ளார். இது குறித்து மேலும் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ள அவர்
காங்கிரசுடன் உத்திரப் பிரதேசத்தில் மட்டுமல்லாது நாடு முழுவதும் எந்தக்
கூட்டணியும் இல்லை என்று கூறியுள்ளார். பாஜகவை வீழ்த்த சமாஜ்வாடி, பகுஜன்
சமாஜ், ராஷ்ட்ரிய ஜனதா தளம் ஆகியவையே போதுமானது என்றும் அவர்
குறிப்பிட்டுள்ளார்.
மாயாவதியின் இந்த அறிவிப்பு அரசியல் அரங்கில் கடும் அதிர்ச்சி அலைகளை
ஏற்படுத்தியுள்ளது. அமேதி மற்றும் ரே பரேலி ஆகிய தொகுதிகளில் வேட்பாளர்களை
நிறுத்தாமல் விட்டது மற்றும் நடந்து முடிந்த 5 மாநில தேர்தல்களில்
காங்கிரசோடு கூட்டணி அமைக்காமல் இருந்தாலும் காங்கிரஸ் ஆட்சி அமைத்துள்ள
மாநிலங்களில் அவர்களுக்கு மாயாவதி அளித்துள்ள ஆதரவு இவையெல்லாம் நாடாளுமன்ற
தேர்தலுக்குப் பிறகு இவர்கள் அனைவரும் ஒன்றிணைவதற்கான சாத்தியக் கூறுகள்
என்றே அரசியல் நோக்கர்கள் கருதி வந்தனர். ஆனால் மாயாவதியின் இந்த அறிவிப்பு
காங்கிரசை மட்டுமல்லாது அரசியல் அரங்கையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

No comments:
Post a Comment