
அதிமுக தலைமை அலுவலகத்தில் அமைச்சர் ஜெயக்குமார் நேற்று கூறியதாவது:
தேமுதிகவுடன் 3 சுற்று பேச்சுவார்த்தை சுமுகமாக நடைபெற்றது. இந்நிலையில் திடீரென மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை கூட்டி, கூட்டணியிலிருந்து விலகுவதாக தேமுதிக அறிவித்திருப்பது துரதிருஷ்டவசமானது.
நண்பர்களாக கூட்டணியில் இருந்துவிட்டு, பிரியும்போது எங்கிருந்தாலும் வாழ்க என்று கவுரவமாக விலகவேண்டும். அதிமுக கூட்டணி பிடிக்கவில்லை என்பதற்காக சேற்றை வாரி வீசி, கீழ்த்தரமான அரசியலை தேமுதிக செய்யக்கூடாது.
கூட்டணியில் இருக்கும்போதே அதிமுக குறித்து எல்.கே.சுதீஷ் கடுமையாக விமர்சனம் செய்தார். அப்போது கூட்டணி தர்மத்துக்காக நாங்கள் பொறுமையாக இருந்தோம். தற்போது வெறுப்பின் உச்சக்கட்டமாக தேமுதிக தலைவர்கள் பேசுகிறார்கள். அதிமுக குறித்து தேமுதிகவினர் தங்களின் வார்த்தைகளை அளந்து பேசவில்லை என்றால், அதற்கான பதிலடியை நாங்களும் கொடுப்போம்.
தேமுதிகவுக்கு அங்கீகாரம் வழங்கி சட்டப்பேரவைக்குள் நுழைய வைத்த நன்றியை மறந்து பேசக்கூடாது. கட்சியின் பலம், கடந்த தேர்தலில் பெற்ற வாக்குகள் உள்ளிட்டவற்றை ஆராய்ந்துதான் தொகுதிகள் வழங்கப்படும். அதன்படி அதிமுக கூட்டணியில் பாமக, பாஜகவின் செல்வாக்குக்கு ஏற்றவாறு தொகுதிகள் வழங்கப்பட்டன.
பிற கட்சிகளை சுட்டிக்காட்டி தொகுதிகள் கேட்க தேமுதிகவுக்கு தார்மீக உரிமை இல்லை. தேமுதிகவின் பலத்தை பொருத்துதான் தொகுதிகள் நிர்ணயம் செய்யப்பட்டது. அதனை ஏற்பதே புத்திசாலித்தனம். அவர்கள் எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. தேமுதிக பலம் என்னவென்பது கடந்த தேர்தலில் நிரூபணமாகிவிட்டது. கூட்டணியில் இருந்து தேமுதிக விலகியதால் அதிமுகவுக்கு பாதிப்பு ஏதும் இல்லை என்றார்.
No comments:
Post a Comment