
பாமகவுக்கு நிகராக கூட்டணியில் தேமுதிகவுக்கு சீட் ஒதுக்காததற்கு அவர்கள் இதுவரை பெற்ற வாக்கு சதவீதம் மட்டுமே காரணம் என்று அதிமுக தரப்பில் கூறப்படுகிறது.
அதிமுக கூட்டணியில் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் இணைந்து செயல்பட்ட தேமுதிக, தற்போது சட்டப்பேரவை பொதுத்தேர்தலுக்கான கூட்டணியில் இருந்து விலகியுள்ளது. அதிமுகவில் அமைச்சர்கள் குழுவினருடன் 3 கட்டங்களாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதுதவிர, அக்கட்சியின் துணை செயலாளர் எல்.கே.சுதீஷ் முதல்வர் பழனிசாமியை சந்தித்து பேசினார். அப்போது பாமகவுக்கு இணையாக 23 தொகுதிகள் அதிமுகவிடம் கோரப்பட்டதாகவும், அதிமுக தரப்பில் இறுதியாக 15 தொகுதிகள் ஒதுக்குவதாக தெரிவித்ததாகவும் கூறப்பட்டது.
நேற்று ஒப்பந்தம் இறுதியாகும் என கூறப்பட்ட நிலையில், அதிமுக கூட்டணியில் கேட்கும் எண்ணிக்கையில் தொகுதி ஒதுக்கப்படாத காரணத்தால் கூட்டணியில் இருந்து விலகியுள்ளதாக அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் நேற்று அறிவித்துள்ளார்.
இந்நிலையில் பாமகவுக்கு நிகரான தொகுதியை தேமுதிக கேட்டபோது ஒதுக்காதது ஏன்? என்று அமைச்சர் ஜெயக்குமாரிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, 'அவர்களுக்கு என்ன பலம் இருக்கிறதோ அதன் அடிப்படையில்தான் தொகுதிகள் ஒதுக்கப்படுகின்றன'' என்று தெரிவித்தார். இதுதவிர, தேமுதிகவின் பலம் குறித்து அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி பேசிய விஷயங்களும் கூட்டணி விலகலுக்கு காரணம் என தேமுதிக தரப்பு தெரிவித்துள்ளது.
அதேநேரம், அதிமுக தரப்பு கட்சிகளுக்கு தற்போதுள்ள வாக்கு சதவீதம் அடிப்படையிலேயே தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அந்த வகையில், பாமகவுடன் ஒப்பிடும்போது தேமுதிகவின் வாக்கு சதவீதம் கடந்த 2 தேர்தல்களாக மிகவும் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறிப்பாக, கடந்த 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பெற்ற வாக்குகள் அடிப்படையில் தற்போது சீட் ஒதுக்கியதாக அதிமுக தரப்பில் கூறப்படுகிறது.
கடந்த 2006, 2011, 2016 சட்டப்பேரவை தேர்தல்கள், 2009, 2014, 2019 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல்களை ஒப்பிட்டு பார்க்கும்போது, பாமகவை பொறுத்தவரை வாக்கு சதவீதம் 6 சதவீதத்துக்குள்ளாகவே தொடர்கிறது. அதே நேரம் தேமுதிகவுக்கு வாக்கு சதவீதம் குறைந்துள்ளதை காண முடிகிறது.
No comments:
Post a Comment