
திமுக கூட்டணியில் சாதகமான தொகுதிகளை ஒதுக்க மறுப்பதால் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அதிருப்தி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணியில் இணைந்து போட்டியிட உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதற்கிடையே போட்டியிட விரும்பும் தொகுதிகளின் பட்டியலை திமுகவிடம் அக்கட்சி வழங்கியுள்ளது.
இந்நிலையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு சாதகமான தொகுதிகளை ஒதுக்க திமுக மறுப்பு தெரிவித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்திய கம்யூனிஸ்ட் நிர்வாகிகளிடம் கேட்டபோது, ''ஏற்கெனவே எங்களின் வாக்கு வங்கியைவிட குறைந்த அளவில் தொகுதிகளை ஒதுக்கியது. எனினும், தற்போதைய அரசியல் சூழ்நிலை மற்றும் கொள்கையின் அடிப்படையில்தான் கூட்டணியில் தொடர்கிறோம். அதை திமுக தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொள்வது வருத்தம் அளிக்கிறது.
திருத்துறைப்பூண்டி, தளி, பவானிசாகர் உட்பட சில தொகுதிகளில் எங்கள் கட்டமைப்பு பலமாக உள்ளது. ஏற்கெனவே பலமுறை வென்றுள்ளோம். திருத்துறைப்பூண்டி தொகுதியில் 11 முறை வெற்றி பெற்றுள்ளோம். அதைக்கூட வழங்க திமுக மறுப்பது ஏற்புடையதல்ல. கூட்டணி கட்சிகள் வைக்கும் கோரிக்கைகளை திமுக கவனத்தில் கொண்டு செயல்பட வேண்டும்'' என்றனர்.
இந்நிலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகக் குழு கூட்டம் சென்னை தி.நகரில் உள்ள பாலன் இல்லத்தில் இன்று (மார்ச் 10) நடைபெறஉள்ளது. இதில் மாநிலச் செயலாளர் இரா.முத்தரன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொள்கின்றனர்.
No comments:
Post a Comment