அக்னி நட்சத்திரம் நடக்கும் நாட்களில் மழை பெய்துள்ளதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
அக்னி
நட்சத்திரம் நடக்கும் நாட்களில் மழை பெய்ததால், மக்களும், விவசாயிகளும்
மகிழ்ச்சி அடைந்தனர். வெப்ப சலனம் காரணமாக கோடை மழை கடந்த வாரத்தில் மூன்று
நாட்கள் திருப்பூர் மாவட்டத்தின் பல பகுதிகளில் பலத்த மழை பெய்தது.
திருப்பூர்,
அவிநாசி, பல்லடம், காங்கயம், தாராபுரம், உடுமலை என மாவட்டத்தின் பல
பகுதிகளில் மூன்று நாள் இரவு நேரத்தில் பலத்த மழை பெய்தது. இதனால்,
சுற்றுப்பகுதியில் உள்ள ஏராளமான குளம் குட்டைகளுக்கு நீர் வரத்துவங்கியது.
பலத்த மழையுடன் சூறாவளிக்
காற்று பல இடங்களில் காணப்பட்டது. இடி மின்னலுடன் இரவு நேரத்தில் பெய்த மழை
காரணமாக பல பகுதிகளில் மின் சப்ளை துண்டிக்கப்பட்டது. அவிநாசி, காங்கயம்
பகுதிகளில் ஆயிரக்கணக்கான வாழை மரங்கள் பலத்த காற்றால் சேதமானது.
கோடை
வெயில் கொளுத்தி எடுத்த நிலையில், வெளுத்து வாங்கிய மழையால் வெப்பம் சற்று
தணிந்து காணப்பட்டது. பின் கடந்த மூன்று நாட்களாக பெரிய அளவில் மழை
பெய்யவில்லை. இந்நிலையில் நேற்று மாலை 4 மணி முதலே திருப்பூர் மாவட்டம்
முழுவதும், வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது.
தொடர்ந்து
அவிநாசி, காங்கயம், வெள்ளக்கோவில், உள்ளிட்ட பகுதிகளில் அரை மணி நேரம்
கனமழை பெய்தது. திருப்பூர் நகரிலும் மாலை 5 மணியளவில் துவங்கிய சாரல் மழை
மெதுவாக பலத்த மழையாக மாறியது. காற்றின் வேகம் அதிகமில்லாத நிலையில், மழை
சிறிது நேரம் தொடர்ந்து பெய்தது.
குன்னத்துார்,
ஊத்துக்குளி, பெருமாநல்லுார், கணக்கம்பாளையம், பொங்கலுார், தாராபுரம் ஆகிய
பகுதிகளிலும் நேற்று மாலை நீண்ட நேரம் பலத்த மழை பெய்தது. மழையால்
ரோடுகளிலும், ரோட்டோர பள்ளங்களிலும் மழை நீர் வழிந்தோடியது.
கோடை
வெயிலால், வறண்டு கிடந்த விவசாய கிணறுகள், ஆழ் குழாய் கிணறுகள்
உள்ளிட்டவற்றில் இந்த தொடர் மழையால் நீர் ஆதாரம் பெருகும் என விவசாயிகள்
மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
No comments:
Post a Comment