பெண் இன்ஜினீயர் சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ராம்குமாருடன் மேன்சனில் தங்கி இருந்த மீனாட்சிபுரத்தை சேர்ந்த 8 பேரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர்.
சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கடந்த 24ம் தேதி பட்டபகலில் இன்ஜினீயர் சுவாதி படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் நெல்லை மாவட்டம், செங்கோட்டையை சேர்ந்த பி.இ பட்டதாரி ராம்குமாரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். சென்னை மாவட்ட முதன்மை செஷன்ஸ் கோர்ட்டில் ராம்குமாரின் ஜாமீன் மனு விசாரணைக்காக ஆஜராகிய வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி திடீரென விலகினார். ராம்குமாரை புழல் சிறையில் சந்தித்த வழக்கறிஞர் ராமராஜ், பல திடுக்கிடும் தகவல்களை கூறினார். இதனால் சுவாதி கொலை வழக்கில் திருப்புமுனைகள் ஏற்பட்டுள்ளன. இவையெல்லாம் போலீஸாருக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. சிறையில் இருக்கும் ராம்குமாரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்குள் வழக்கை விரைந்து முடிக்கும் முயற்சியிலும் போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.
தனிப்படை போலீஸ் வட்டாரங்கள் கூறுகையில், "சுவாதி கொலை வழக்கு விசாரணை சரியான பாதையில் சென்று கொண்டு இருக்கிறது. இந்த வழக்கு தொடர்பாக ஏ.எஸ் மேன்சன் காவலாளி கோபாலிடம் நேற்று விசாரித்தோம். அவரிடம் ராம்குமார் குறித்த கேள்விகளை கேட்டோம். அவருக்கு சரியாக காது கேட்காததால் நாங்கள் கேட்கும் கேள்விகளுக்கு வேறு பதிலை சொல்கிறார். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு இந்த மேன்சனில் காவலாளியாக கோபால் சேர்ந்துள்ளார். பணி நேரத்தில் அவர் அஜாக்கிரதையாகவே இருந்துள்ள தகவல் எங்களுக்கு தெரியவந்துள்ளது. சில கேள்விகளுக்கு அவரால் பதில் அளிக்க முடியவில்லை. தேவைப்பட்டால் அவரிடம் மீண்டும் விசாரணை நடத்துவோம்" என்றனர்.
இந்த சூழ்நிலையில் ராம்குமார் மேன்சனில் சேர யார் சிபாரிசு செய்தார்கள்? என்று போலீஸார் விசாரித்த போது அவர்களுக்கு ஒரு தகவல் கிடைத்தது. ராம்குமார் தங்கி இருந்த 404 அறை அருகேயே அவரது உறவினர் ஒருவர் தங்கி இருக்கிறார். அவர் மூலமாகவே ராம்குமார் இந்த மேன்சனுக்கு வந்து தங்கியுள்ளார். இதுதவிர ராம்குமாரின் சொந்த ஊரான செங்கோட்டை, மீனாட்சிபுரத்தை சேர்ந்த 7 பேரும் அதே மேன்சனில் தங்கியுள்ளனர். அவர்களிடம் போலீஸார் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர். இவர்களில் சிலர் ஐ.டி துறையில் வேலை பார்க்கும் தகவலும் போலீஸாருக்கு தெரியவந்துள்ளது.
இது குறித்து தனிப்படை போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், "இந்த வழக்கில் ராம்குமார்தான் குற்றவாளி என்பதற்கு போதிய ஆதாரங்கள் எங்களிடம் உள்ளன. ஆனால், ராம்குமாருக்கு ஆதரவான வழக்கறிஞர்கள் வழக்கை திசைதிருப்ப சில தகவல்களை சொல்லி வருகிறார்கள். ராம்குமாரை போலீஸ் காவலில் எடுத்து விசாரித்தால் இன்னும் பல முக்கிய தகவல்கள் கிடைக்கும். ராம்குமாருக்கும், சுவாதிக்கும் உள்ள பழக்கம் உள்ளிட்ட இந்த வழக்கு தொடர்பான அனைத்து தகவல்களையும், ஆதாரங்களையும் எங்களிடம் உள்ளது. அதை நீதிமன்றத்தில் சமர்பிப்போம்" என்றார்.
டென்ஷனான உயரதிகாரி
கோபாலிடம் விசாரணை நடந்த போது சில கேள்விகளுக்கு அவர் பதில் அளிக்காமல் அமைதியாகவே இருந்துள்ளார். அதோடு, சரியாக காது கேட்காததால் தேவையில்லாத பதிலையும் சொல்லி உள்ளார். இது அங்கு இருந்த போலீஸ் உயரதிகாரி ஒருவருக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனால் அவர் அங்கிருந்து வெளியில் சென்று விட்டார். அவருக்கு கீழே உள்ள அதிகாரிகள் மீண்டும் கோபாலிடம் விசாரித்துள்ளனர். நேற்று நடந்த விசாரணையில் ராம்குமார் சம்பந்தமான கேள்விகளை கேட்டு கோபாலை போலீஸார் துளைத்தெடுத்தனர்.
ராம்குமாருடன் மேலும் இருவர
சிறையில் அடைக்கப்பட்டுள்ள ராம்குமார், யாரிடமும் பேசாமல் அமைதியாக இருக்கிறார். இதனால் அவரது அறையில் நேற்று முதல் இரண்டு கைதிகளை போலீஸார் அடைத்திருக்கிறார்கள். தற்போது ஒரே அறையில் மூன்று பேர் இருப்பதால் கொலை சம்பந்தமாக ராம்குமார், அவர்களிடம் பேச வாய்ப்புள்ளதாக போலீஸார் நம்புகின்றனர்.
நன்றி : ஆனந்த விகடன்


No comments:
Post a Comment