Latest News

ரூ. 570 கோடி விவகாரத்தில் ஷாக்... 3 லாரிகளின் பதிவெண்களும் போலி.. திட்டமிட்டு பணம் கடத்தல்: சிபிஐ


பெரும் பரபரப்பை ஏற்படுத்திய ரூ. 570 கோடி பண விவகாரத்தில் அதிர்ச்சி தரும் புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த பணம் கொண்டு செல்லப்பட்ட 3 கண்டெய்னர் லாரிகளிலும் போலி பதிவெண்கள் இருந்ததாக சிபிஐயின் பூர்வாங்க விசாரணையில் தெரிய வந்துள்ளது. தமிழகத்தில் சட்டசபைத் தேர்தல் சமயத்தில், கடந்த மே 13ம் தேதி திருப்பூரில் வைத்து 3 கண்டெய்னர் லாரிகள் பிடிபட்டன. இதில் ரூ. 570 கோடி பணம் இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டது. தேர்தல் பறக்கும் படையினர் இந்த 3 லாரிகளையும் பறிமுதல் செய்தனர். விசாரணையில் இந்த. பணம் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவுக்குச் சொந்தமானது என்றும், ஆந்திராவுக்குக் கொண்டு செல்லப்படுவதாகவும் கூறப்பட்டது. ஆனால் இந்தப் பணம் தங்களுக்குரியது என்று சொல்ல ஸ்டேட் வங்கி பெரும் தாமதம் செய்த பிறகே தெரிவித்தது. ரிசர்வ் வங்கியும், இது ஸ்டேட் வங்கி பணம் தான் என்று கூறியது. இருப்பினும் இந்தப் பண பரிவர்த்தனை தொடர்பாக பெரும் குழப்பங்கள், சந்தேகங்கள் நீடித்தன. இந்த நிலையில் திமுக ராஜ்யசபா எம்.பி. டி.கே.எஸ். இளங்கோவன் சிபிஐ விசாரணை கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு செய்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது.

களத்தில் குதித்த சிபிஐ இதையடுத்து சிபிஐ அதிகாரிகள் பூர்வாங்க விசாரணையில் குதித்தனர். டெல்லியிலிருந்து வந்த சிபிஐ குழு இந்த விசாரணையை நடத்தியது. இதில் பல திருப்பம் தரும் தகவல்கள் கிடைத்துள்ளதாக சிபிஐ வட்டாரம் தெரிவித்துள்ளதாக டிடி நெக்ஸ்ட் இதழின் செய்தி தெரிவிக்கிறது. இவர்கள் சொல்வதைப் பார்த்தால் மிகப் பெரிய அரசியல் பிரளயமே இந்த விசாரணைக்குப் பின்னர் ஏற்படலாம் என்று நம்பப்படுகிறது.

 இதுகுறித்து சிபிஐ வட்டாரத் தகவல்கள் கூறுபவை:

எல்லாமே போலி கடந்த மே 13ம் தேதி திருப்பூர் அருகே ஊத்துக்குளி அருகே உள்ள செங்கப்பள்ளி என்ற இடத்தில் பணம் கொண்டு சென்றதாக பிடிபட்ட 3 கண்டெய்னர் லாரிகளின் பதிவெண்களும் போலியானவை. இவை ஆந்திர மாநிலம் விசாகப்பட்டனத்தைச் சேர்ந்த பதிவெண்கள் ஆகும்.

 மோட்டார் பைக் எண்கள் AP 13X 5204, AP 13X 8650, AP 13X 52035 ஆகிய மூன்று பதிவெண்களும் உண்மையில் மோட்டார் சைக்கிள்களின் எண்கள் ஆகும். இந்த மூன்று மோட்டார் சைக்கிள்களும் விசாகப்பட்டனத்தைச் சேர்ந்தவையாகும்.

திட்டமிட்டுக் கடத்தியுள்ளனர் இந்தப் பணமானது நன்கு திட்டமிட்டு சட்டவிரோதமாக கடத்தப்பட்டதாக சிபிஐ உறுதியாக நம்புகிறது. நிச்சயம் முறைப்படி அனுமதி பெற்று இந்தப் பணம் கொண்டு செல்லப்பட்டதாக தெரியவில்லை.

 விரைவில் முழு விசாரணை சிபிஐயின் டெல்லி குழு நடத்தியுள்ள பூர்வாங்க விசாரணையைத் தொடர்ந்து விரைவில் முழு அளவிலான விசாரணை தொடங்கவுள்ளது. அனேகமாக சென்னையைச் சேர்ந்த ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் இந்த விசாரணையை மேற்கொள்ள வாய்ப்புள்ளது.

 தேவைப்பட்டால் டெல்லி குழு அதேசமயம், தேவைப்பட்டால் டெல்லி குழுவிடம் விசாரணை ஒப்படைக்கப்படும். டெல்லி சிபிஐ தலைமையகத்தில் உள்ள ஊழல் தடுப்புப் பிரிவுகளுக்கு நாடு முழுவதும் சென்று விசாரிக்க அதிகாரம் உள்ளது குறிப்பிடத்தக்கது.

உண்மையில் யாருடைய பணம்? இந்தப் பணம் தங்களுடையது என்று ஸ்டேட் வங்கி கூறியுள்ளபோதிலும், சட்டத்திற்குப் புறம்பான முறையில் இது கொண்டு செல்லப்பட்டிருப்பதால் அதுகுறித்து தீவிரமாக 

விசாரிக்கப்படவுள்ளது. உண்மையிலேயே இது ஸ்டேட் வங்கி பணம்தானா என்பது கண்டுபிடிக்கப்பட வேண்டியுள்ளது.

ஆவணங்கள் திருத்தப்பட்டிருக்கலாம் இந்தப் பண பரிவர்த்தனை தொடர்பான ஆவணங்களை சம்பந்தப்பட்டவர்கள் திருத்தியிருக்கலாம் என்று சிபிஐ நம்புகிறது. ஆனால் என்னதான் மோசடி செய்திருந்தாலும் நிச்சயம் அதைக் கண்டுபிடித்து விட முடியும். அதற்கான வழிகளை சிபிஐ 

கண்டுபிடித்துள்ளதாகவும் சிபிஐ வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எங்க கேள்விகள் இதுதான் சிபிஐ தரப்பில் மேலும் கூறுகையில் நாங்கள் ஸ்டேட் வங்கியிடம் நேரடியாக சில கேள்விகளை வைக்கப் போகிறோம். இந்தப் பணம் சட்டத்திற்கு உட்பட்டுத்தான் கொண்டு செல்லப்பட்டதா? அப்படி என்றால் இதை ஏன் ரகசியமாக செய்ய வேண்டும்? ஏன் பணம் கொண்டு செல்லப்பட்ட லாரிகளுக்குப் போதிய பாதுகாப்பு அளிக்கப்படவில்லை? ஏன் போலியான பதிவெண்களுடன் இந்த லாரிகள் பயன்படுத்தப்பட்டன?. இவைதான் நாங்கள் முன்வைக்கப் போகும் சில கேள்விகள்.

24 மணி நேர தாமதம் ஏன்? அதேபோல இந்தப் பண விவகாரம் தொடர்பாக விளக்கம் அளிக்க 24 மணி நேரம் அளவுக்கு ஸ்டேட் வங்கி ஏன் அவகாசம் எடுத்துக் கொண்டது. இவ்வளவு பெரிய பணம் போகிறது என்றால் அதுகுறித்த விவரங்கள் விரல் நுனியில் அல்லவா இருந்திருக்க வேண்டும். 

அப்படியானால் விளக்கம் தர சில நிமிடங்கள் போதுமானதே. ஆனால் அதை ஏன் ஸ்டேட் வங்கி செய்யவில்லை என்றும் சிபிஐ கேட்கிறது.

லாரியில் இருந்தவர்கள் யார்? அதேபோல சம்பந்தப்பட்ட லாரியில் இருந்தவர்கள் மீதும் சிபிஐ தனது சந்தேகப் பார்வையைத் திருப்பியுள்ளது. அவர்கள் லாரிகள் பிடிபட்டதும் உடனடியாக வங்கி அதிகாரிகளுக்குத் தகவல் கொடுத்தார்களா இல்லையா என்ற கேள்வியையும் சிபிஐ எழுப்பியுள்ளது. அப்படிச் சொல்லாவிட்டால் ஏன் சொல்லவில்லை. சொல்லியிருந்தால், ஏன் வங்கி நிர்வாகம் அதை சீரியஸாக எடுத்துக் கொண்டு தனது உயர் அதிகாரிகளை அனுப்பி வைக்கவில்லை என்ற கேள்விகளையும் சிபிஐ எழுப்பியுள்ளது. 

செல்போன் ஆய்வுகள் லாரிகளில் அப்போது உடன் பயணித்த நபர்களின் செல்போன் உரையாடல்களையும் சிபிஐ ஆய்வு செய்யவுள்ளதாம். ஏற்கனவே அவை தொடங்கி விட்டதாகவும் கூறப்படுகிறது.

பெரும் பிரளயம் வெடிக்கும் மொத்தத்தில் ஆரம்பமே அபசகுணமாக இருப்பதை சிபிஐ கண்டுபிடித்துள்ளதால் இந்த வழக்கின் போக்கும், முடிவும் மிகப் பெரிய பிரளயத்தை தேசிய அளவில் உண்டுபண்ணலாம் என்றும் நம்பப்படுகிறது.. ஆம், இந்தப் பணம் ஸ்டேட் வங்கி பணம் என்று மத்திய நிதியமைச்சரும் கூட ஒத்துக் கொண்டுள்ளாரே!
==

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.