பாரதிய ஜனதா கட்சியின் உ.பி. தலைவர் தயா சங்கர் சிங் பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதியை பாலியல் தொழிலாளியுடன் ஒப்பிட்டு பேசியதற்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி பணத்துக்கு கட்சி பதவிகளை விற்பதாக உத்தரப்பிரதேச மாநில பா.ஜ.க துணைத் தலைவர் தயா சங்கர் சிங் குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும், மாயாவதியை பாலியல் தொழிலாளர்களுடன் ஒப்பிட்டு பேசியுள்ளார். மாயாவதி ஒரு விபச்சாரியை விட மோசமானவர் என்று குற்றம்சாட்டியுள்ளார். வரவிருக்கும் உத்தரப் பிரதேச சட்டசபைத் தேர்தலில் போட்டியிட யார் அதிகப் பணம் தருகிறார்களோ அவர்களுக்கே வாய்ப்பளிக்கிறார். விபச்சாரத்திலும் அவ்வாறே பணம் செலுத்தியப் பிறகே அர்ப்பணிப்பு நிகழ்கிறது. ஆனால் இங்கே மாயாவதி கட்சி இடங்களை விற்கிறார். அவர் கன்சிராமின் கொள்கையை விற்று விட்டு விபச்சாரியை விட மோசமாக செயல்படுகிறார் என பேசியுள்ளார். இது பெரும் சர்ச்சையை கிளப்பியது. இந்நிலையில் தயா சங்கர் சிங் பயன்படுத்திய வார்த்தைகள் கடும் கண்டனத்திற்குரியது என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில், அரசியலில் மாறுபட்ட கருத்துடைய தலைவர்களை தரம் தாழ்த்தி விமர்சிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. அவர் பயன்படுத்திய வார்த்தைகள் பாஜகவிற்கு பெரும் இழுக்கை தேடித்தருவதாக அமைந்துள்ளது. அரசியலில் ஈடுபட்டுள்ள பெண்களுக்கு இதுபோன்ற கொடுமை அவ்வப்போது நிகழ்கிறது.
பெண்ணினத்தை அவமதித்த தயா சங்கர் சிங்கை பாரதிய ஜனதா கட்சியிலிருந்து நீக்க வேண்டும். உத்தரப்பிரதேச பாஜக துணைத் தலைவர் பதவியிலிருந்து தயா சங்கர் சிங்கை நீக்க வேண்டும் என அக்கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷாவை ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார். இவ்வாறு ஜெயலலிதா கூறியுள்ளார்.


No comments:
Post a Comment