மத்திய மின்சாரம் துறை அமைச்சர் பியூஸ் கோயல், நாளை மறுநாள் வெள்ளிக்கிழமையன்று சென்னையில் முதலமைச்சர் ஜெயலலிதாவை சந்தித்து பேச உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மின்சாரம், உதய் திட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் குறித்து இருவரும் ஆலோசனை நடத்த இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.
நடந்து முடிந்த தமிழக சட்டசபைத் தேர்தல் பிரசாரத்தின் போது, உதய் மின் திட்டம் தொடர்பாக முதல் அமைச்சர் ஜெயலலிதாவை சந்திக்க
முடியவில்லை என பியூஸ் கோயல் குற்றம்சாட்டியிருந்தார். இது தமிழகம் முழுவதும் காரசாரமான விவாதத்தை ஏற்படுத்தியது. மத்திய அமைச்சரின் குற்றச்சாட்டை மறுத்து, அதிமுக அரசு சார்பில் பதில் அறிக்கை விடப்பட்டது. பல பாஜக அமைச்சர்களும் முதல்வர் ஜெயலலிதாவை எளிதாக சந்திக்க முடிவதாக கூறினர். ஆனால் பியூஸ் கோயல் உள்ளிட்ட சிலர் மட்டுமே ஜெயலலிதாவை சந்திக்க முடியவில்லை என்று கூறினர். இந்த நிலையில் மீண்டும் தமிழக முதல்வராக பதவியேற்றுள்ள ஜெயலலிதாவை அமைச்சர் பியூஸ் கோயல் சந்தித்து பேச உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


No comments:
Post a Comment