Latest News

வக்ஃபுச் சொத்துக்களை மீட்க ஆலிம்களே அணி திரளுங்கள்…!

நமது நாடு பலஇன மக்களின் கூட்டுக் கலவையாக அமைந்திருக்கிறது. அடிப்படைக் கொள்கையிலேயே ஆயிரம் வேறுபாடுகளைக் கொண்ட மக்களாக வாழ்ந்து வருகிறோம்.
ஒவ்வொரு சமுதாய மக்களும் தங்களுக்கான சமுக, பொருளாதாரப் பாதுகாப்பிற்கான திட்டங்களை தாங்களே உருவாக்கி அதன்படி வாழ்க்கையை அமைத்துக்கொள்ள வேண்டும் என்பது தான் இன்றைய நடைமுறை நிதர்சனமாக இருக்கிறது. இத்தகைய திட்டங்களை வகுப்பதிலும் அவற்றை முறையாக நடைமுறைப் படுத்துவதிலும் அந்தந்த சமுதாயத்தில் உள்ள சமூக ஆர்வலர்களுக்கும், படித்தவர்களுக்கும் பெரும் பொறுப்பும் கடமையும் இருக்கிறது. மதச்சார்பற்ற அரசு ஒட்டு மொத்த சமுதாய மேம்பாட்டிற்கும் ஓரளவு தான் உதவி செய்யும். அரசே எல்லா மக்களின் எல்லாத் தேவைகளையும் பூர்த்தி செய்துவிட முடியாது.

இதையெல்லாம் கருத்தில் கொண்டு தான் குடிமக்களில் ஒருசாராரின் தேவைகளைப் பூர்த்தி செய்திட அற்புதமான ஏற்பாடாக வக்ஃபு எனும் அறப்பணிகளுக்கான அமைப்பை இஸ்லாம் ஏற்படுத்தித் தந்திருக்கிறது. இந்தியாவில் முஸ்லிம் முன்னோர்களின் அளப்பரிய தியாகத்தால், இறையச்சத்தால் உருவான இந்தப் பொருளாதாரச் சுரங்கத்தை – விளிம்பு நிலை மக்களின் சமுக, பொருளாதார, பாதுகாப்பு போன்றவற்றிற்கான நிலையான ஏற்பாட்டை – சீரழித்த பெருமை முஸ்லிம்களையே சாரும்.

இந்திய அரசு விடுதலைக்குப் பிறகு 1954 ஆம் ஆண்டில் வக்ஃபுச் சொத்துக்களைப் பாராமரித்திட இந்தியா முழுவதும் வாரியங்களை அமைத்து அவைகளை முறைப்படுத்திட அதற்கொரு சட்டத்தையும் உருவாக்கித் தந்தது. சட்டத்தில் பல ஓட்டைகள் இருந்தன. அது அரசின் குற்றமல்ல, அந்த சட்டத்தை உருவாக்கிய ஒரு சில முஸ்லிம்களுக்கு சட்டத்திலும் ஷரீ அத்திலும் நிபுணத்துவமும் நுண்ணறிவும் இல்லாமல் போனது தான் குற்றம். பழைய சட்டத்தின் ஓட்டையை அடைக்கிறோம் என்ற பெயரில் 1994 -ல் உருவாக்கப்பட்ட புதிய சட்டத்தில் ஓட்டை பெரிதானது தான் மிச்சம். அந்த ஓட்டைகளை பயன்படுத்தி வக்ஃபுச் சொத்துக்களை வல்லூறுகள் கூறு போட்டுக் கொண்டனர். விளிம்பு நிலை மக்களின் வாழ்வியல் சொத்துக்களை வசதி படைத்த பெருச்சாலிகள் துவம்சம் செய்தன. சிவன் சொத்து குல நாசம் என்பதை அவர்கள் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை. அரசு நியமித்த நீதியரசர்கள் வக்ஃபு வாரியங்களை ஆய்வு செய்துவிட்டு இந்திய வக்ஃபு வாரியங்களில் நடப்பது போன்ற ஊழல் இந்த உலகில்  வேறு எங்கும் நடப்பதில்லை என்று அறிக்கை கொடுத்தனர். மறுபடியும் சட்டத்தை மாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டது.

2009-ல் மூன்றாவது முறையாக புதிய சட்டம் உருவாக்கப்பட்டு தற்போது மேல்சபையில் கிடப்பில் கிடக்கிறது. வக்ஃபு வாரியங்களில் பொறுப்பாளர்களாக உள்ளவர்களின் ‘தார்மீக’ ஆதரவோடு சொத்துக்களை ஆக்கிரமிப்புச் செய்துள்ளவர்களுக்கு அமோக விளைச்சல் கிடைக்கிறது. அதில் எல்லோருக்கும் பங்கு. சொத்துக்களுக்குச் சொந்தக்கார விளிம்பு நிலை முஸ்லிம்கள் அடிப்படைத் தேவையைக் கூட பூர்த்தி செய்ய இயலாமல் தெருவில் நிற்கின்றனர். சமுதாய அமைப்புகளும் இளைஞர்களும் வேடிக்கை பார்க்கின்றனர்.

சென்னை அருண்டேல் தெரு பள்ளிவாசலுக்குச் சொந்தமான 95 கிரவுண்ட் சொத்துக்களின் இன்றைய மதிப்பு 250 கோடி ரூபாய். இதை ஆக்கிரமிப்புச் செய்துள்ள முஸ்லிம்(?) குடும்பத்திடமிருந்து அதைப் பாதுகாத்திட கடந்த 63 ஆண்டுகளாக வக்ஃபு வாரியத்திற்கும் நீதிமன்றத்திற்கும் நடையாய் நடக்கும் ஜமாஅத் நிர்வாகிகள், சமீபத்தில் முக்கியஸ்தர்கள் சந்திப்பிற்கு ஏற்பாடு செய்து பிரச்சனையை விளக்கி வக்ஃபுச் சொத்துக்கள் ஆக்கிரமிப்பிற்கும் வாரியத்தின் ஊழலுக்கும் முடிவுகட்டுமாறு வந்திருந்த சமுதாய தலைவர்களுக்கும், முக்கியஸ்தர்களுக்கும் வேண்டுகோள்விடுத்தனர். அருண்டேல் பள்ளி விவகாரம் குறித்து இன்ஷா அல்லாஹ் வரும் இதழில் விரிவாகப் பார்ப்போம்.

இவ்வளவு சொத்துக்கள் பறிபோன பிறகும் இனியும் முஸ்லிம் சமூகம் விழிப்புணர்வு பெறவில்லை என்றால் எதிகால தலைமுறையின் கடுமையான ஏச்சுக்கும் பேச்சுக்கும் ஆளாக வேண்டிய சூழல் ஏற்படும். முதலில் ஆலிம்கள் இதில் அதிக அக்கறை செலுத்த வேண்டும். உலமா நல வாரியம் கேட்டுப் பெறும் அளவிற்கு அவர்களிடம் அறியாமையும் இயலாமையும் மிகுந்துள்ளதை காலம் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.

இறைவனின் வாழ்வியல் அமைப்பு என்று இஸ்லாம் சொல்லும் மரணத்திற்கும், விபத்திற்கும் பணம் பெறுவதற்கு நல வாரியத்தை நாடும் உலமாக்கள் தங்களைப் போன்ற சமுதாய மறுமலர்ச்சியில் ஈடுபடும் அத்தனை மக்களின் அனைத்துத் தேவையையும் பூர்த்தி செய்திட அமைந்துள்ள வக்ஃபுச் சொத்துக்கள் தங்கள் கண்முன் சுரண்டப்படுவதைப் பார்த்து கை கட்டி வாய் பொத்தி நிற்கின்றனர். காவல் அரணாக நிற்க வேண்டிய அவர்களே இப்படி என்றால் பொதுமக்களைப் பற்றிக் கேட்கவே வேண்டாம்.

வக்ஃபுச் சொத்துகளில் முறைகேடு செய்வோர் யாரும் அமைப்பிலோ இயக்கத்திலோ கட்சியிலோ பொறுப்பு வகிக்கத் தகுதியற்றவர்கள் என்று ‘பைலாவில்’ விதி எழுத, அதை பகிரங்கமாக அறிவிக்க எத்தனை அமைப்புகளின் தலைவர்களுக்கு துணிவும் இறையச்சமும் இருக்கிறது?

முஸ்லிம்களிடம் ஒரு பொறுப்பு கொடுக்கப்பட்டால் அது எப்படி நிர்வகிக்கப்படும் என்பதை அரசிற்கும் வெளி உலகுக்கும் படம்பிடித்துக் காட்டுகின்றன இன்றைய வக்ஃபு வாரியங்களின் நிர்வாகங்கள், இறைவனின் பிடி இறுகுவதற்குள் வாரியத்தின் அனைத்துப் பொறுப்பாளர்களும் தங்களைத் திருத்திக் கொள்வது நல்லது.
நன்றி : 
- CMN சலீம்

1 comment:

  1. நல்ல்ல்லல்ல்ல சிந்தனை. தேவையானதும்கூட. ஆனால், சமுதாயத்து ஆலிம்கள், மவ்லானாக்கள், 'நமக்கு ஏன் இந்த வம்பு?' என்று இருக்கின்றனர். காரணம், அவர்கள் 'வேலை' நடக்கவேண்டும். பள்ளிவாசல் மற்றும் 'தர்காஹ்' ட்ரஸ்டிகளைப் பகைத்துக்கொண்டால், பயான் செய்ய முடியாது. அப்படி யாராவது கண்டித்தால் - இல்லை - முகம் சுளித்தால், ரவுடிகளை வைத்து ட்ரஸ்ட்டிகள் மிரட்டுவார்கள்! இதற்கும் மேலாக, இந்தப் பெருச்சாளிகளை எதிர்த்து ஃபத்வா கேட்டால், அது கிடப்பில் போடப்படும்! அல்லது, evading answer 'முஃப்தி' அல்லது காஜி'யிடமிருந்து வரும். ஃபத்வா கேட்டவர் தொய்வடைந்துவிடுவார்.

    தமிழ் நாட்டைப் பொறுத்தவரை, கபுர் வணங்கிகளின் கைகளில்தான் வக்ஃபுச் சொத்துகள் மாட்டிக்கொண்டு இருக்கின்றன! குறிப்பாக, பெரும்பாலான தஞ்சை, திருச்சி, மதுரை போன்ற நகரங்களில், குறிப்பிட்ட ஒரு மொழி பேசும் 'முஸ்லிம்'களின் பிடியில்தான் வக்ஃபுச் சொத்துக்கள் மாட்டியிருக்கின்றன. இவர்களின் பினாமிகள்தான் 'பாய்களாக' அரசுப் பணிகளில் இருந்துவருகின்றனர். இவர்களுக்குப் பெயர், 'சுன்னத் ஜமாஅத்'தாம்!

    கட்டுரையாளரின் இது போன்ற சிந்தனைப் புரட்சி ஏற்படுத்தும் ஆக்கங்களை அடிக்கடிப் பதிந்து, பொது மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள். நன்றி.

    ReplyDelete

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.