Latest News

பயணங்கள் அனுபவம் – “ சீனா “ – பகுதி I

இந்தியாவில் கல்வி பயில வேண்டும் !
அமெரிக்காவில் பொருளாதாரம் ஈட்ட வேண்டும் !!
சீன உணவுகளை சாப்பிட வேண்டும் !!!
இங்கிலாந்தில் வசிக்க வேண்டும் !!!!

என்பது பழமொழி !

பல்வேறுபட்ட இனங்களைக் கொண்ட சீனா தேசம். தெற்குப் பகுதி , வடக்கு பகுதி என இரண்டு வகைகளாகப் பிரிக்கப்பட்டு முறையே “ கேன்டனிஷ் ” மற்றும் “ மேன்ட்ரின் ” என இரு வகை மொழிகள் பேசப்படுகிறது. பல்வேறு மகாணங்களைக் கொண்ட சீன தேசத்தில், என் பயணம் தென் சீனாவில் அமைந்துள்ள தொழிற் நகரம், வரலாற்று நகரம் சுற்றுலா நகரம் என பல்வேறு சிறப்புகளைப் பெற்ற “ குவாங்சோ “ ( Guangzhou ) என்ற மகாணத்திற்க்கு..........

பல முறைகள் தொழில் நிமித்தமாக சீனா சென்றுள்ள நான், எனது முதல் சீனப் பயணத்தின் சில அனுபவங்கள் இதோ.....................

நேரம் : மாலைப்பொழுது
இடம் : துபாய் இன்டர்நேஷனல் ஏர்போர்ட்

நான் காரிலிருந்து இறங்கியவுடன், கை குலுக்கி வாழ்த்து தெரிவித்து விடைபெற்றுக்கொண்டு புறப்பட தயாராகிறார் என்னுடன் பணி புரியும் என் லிபிய நண்பர்...... நேராக சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் போர்டிங் கவுண்டருக்கு சென்று என்னுடைய பிசினஸ் கிளாஸ் டிக்கெட்டையும், எனது பாஸ்போர்ட்டையும் கொடுத்து, “ ஹலால் உணவு “ மற்றும் “ ஜன்னல் ஓர சீட் “ போன்ற வேண்டுகோளுடன் இரண்டு போர்டிங் பாஸ்களையும் ( ஓன்று துபாய் – சிங்கப்பூர், மற்றொன்று சிங்கப்பூர் - குவாங்சோ ) கவுண்டரிலிருந்து பெற்றுக்கொண்டேன்.

அடுத்ததாக இமிக்கிரேஷன் கவுண்டர் சென்று, நடைமுறைப் பணிகளை அங்கே முடித்துக்கொண்டு விமானம் புறப்படக்கூடிய வாசல் பகுதியின் அருகில் உள்ள ஓய்வு அறையில் சிறிது நேரத்தைப் போக்கினேன்.

அப்பொழுது எனது நினைவுகள் பின்னோக்கி சென்றது................... “ டேய் மாப்ளே அங்கே “ ஹலாலா “ சாப்பாடு கிடைக்காது, சைனிஸ்காரன் இங்கிலீஷ் பேச மாட்டான், லொகேஷன் ப்ராப்ளமா இருக்கும் பாரேன்.... “ என்று என்னை பயமுறுத்திய எனது நண்பர்களின் சொற்க்கள் என் நினைவில் ஓடிக் கொண்டிருந்தது.

மேலும் பதினைந்து மணி நேரப் பயணமாக இருப்பதால், எனக்கு பெரிய சலிப்பாகவே இருந்தது. விமானம் புறப்படத் தயாராவதை ஒலி பெருக்கியில் அறிவித்தவுடன், நேராக எனக்காக ஒதுக்கப்பட்ட சீட்டில் போய் அமர்ந்தேன்.

விமானம் சிறிது நேரத்தில் சிங்கப்பூர் நோக்கி புறப்பட்டது. சுமார் எழு மணிநேரம் முப்பது நிமிடப் பயணம்....................

நேரம் : அதிகாலைப்பொழுது
இடம் : செங்கி இன்டர்நேஷனல் ஏர்போர்ட்,

சிங்கப்பூர் விமானத்திலிருந்து இறங்கியவுடன் நேராக அருகில் உள்ள அறிவிப்பு பலகையில் “ குவாங்சோ “ செல்லக்கூடிய விமானம் நிறுத்தி வைத்திருக்கிற வாசலின் எண்னை ( Gate Number ) தெரிந்து வைத்துக்கொண்டேன். காரணம் சில மணி நேரங்களில் அடுத்த விமானத்தில் பயணம் மேற்கொள்ள வேண்டிய சூழலால்..............

தமிழ் அங்கே ஆட்சி மொழியாக இருப்பதால், அங்காங்கே தமிழில் எழுதிய அறிவிப்புகளை கண்டு வியந்தேன். அதேபோல் சுத்தம் ! ( அதான் நம்மூரூ பேரூராட்சி தலைவரு சுத்தத்திற்கு எடுத்துக்காட்ட ஜி(சி)ங்கப்பூரைச் சொன்னாரோ ? என்னவோ ! ) ஏர்போர்ட் முழுவதும் சுத்தமாகவும், பாரம்பரிய கலை நயத்துடன் அலங்கரிக்கப்பட்டிருந்தது. சுத்தமான நாடு என்று சொல்லக்கூடிய நாடுகளில் குறிப்பிடத்தக்க நாடாக சிங்கப்பூர் விளங்குகிறது.

விமானம் சிறிது நேரத்தில் சீன தேசத்தில் உள்ள குவாங்சோ நகரை நோக்கி புறப்பட்டது. சுமார் நான்கு மணிநேரம் மற்றும் சில மணி துளிகள் பயணம்....................

விமானத்தில் இரண்டு விண்ணப்ப படிவங்கள் கொடுக்கப்பட்டது. ஓன்று உடல் ஆரோக்கியம் சம்பந்தப்பட்டது. மற்றொன்று இமிக்கிரேஷன் நடைமுறை பணிகளுக்காக என்று. கிடைக்ககூடிய நேரங்களில் நம்மைப்பற்றிய தகவல்களை அதில் குறிப்பிட்டுள்ள இடங்களில் பூர்த்தி செய்து வைத்துக்கொண்டேன்.

அடுத்த சில மணி நேரங்களில் விமானம் தரை இறங்கியது ஒரே பணிமூட்டம் போல் காட்சியளித்தது. சராசரியான வெப்பநிலைகளுடன் கூடிய அந்நகரில் இதுவரையில் ஒரு முறைக்கூட சூரியனை நான் பார்த்தது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. காரணம் சூரியனை எப்பொழுதும் ஒரு வகை வெள்ளை நிறத்துடன் கூடிய மேகங்கள் சூழ்ந்துகொண்டு மறைத்துவிடுவதுதான்.



நேரம் : பகல் ( அடுத்த நாள் )
இடம் : பையூன் இன்டர்நேஷனல் ஏர்போர்ட், குவாங்சோ, சீனா

விமானத்தில் இருந்து இறங்கி நேராக இமிக்கிரேஷன் நடைமுறை பணிகளை முடிப்பதற்க்காக கவுண்டரை நோக்கி பயணமானேன். இடையில் சைனீஸ் போலீசார்கள் ஆங்காங்கே செக்கிங் செய்து கொண்டுருந்தார்கள். அவர்கள் தோற்றத்தில் ஒரே அமைப்பிலும், முகத்தில் சிரிப்பு என்பதையே காணமுடியவில்லை. நம்ம ஊர் “ சிரிப்பு ” போலீஸ்கள் போல் “ மாமூலாக ” இல்லை அவர்கள். ஆனால் அவர்களின் கண்காணிப்பு “ கழுகுப் “ பார்வையாக இருந்தது குறிப்பிடதக்கது.

நமது உடல் ஆரோக்கியம் சம்பந்தமாக ஏற்கனவே பூர்த்தி செய்து வைத்திருந்த விண்ணப்ப படிவத்தினை அருகில் உள்ள கவுண்டரில் கொடுத்து விட்டு செல்ல வேண்டும். அங்கே இமிக்கிரேஷன் கவுண்டர்களை இரண்டு வகைகளில் பிரித்து வைத்துள்ளார்கள். ஓன்று உள்நாட்டு பயணிகளுக்காக சில கவுண்டர்களும், மற்றொன்று வெளிநாடுகளில் இருந்து வருகிற பயணிகளுக்காக சில கவுண்டர்களும் என்று.

நடைமுறை பணிகளை முடித்துக்கொண்டு எனது லக்கேஜ்களை தேடி எடுத்துக்கொண்டு ஏர்போர்ட்டை விட்டு வெளியே வந்தேன்.
எனக்காக ஏர்போர்ட் வெளியில் கையில் பெயர் பலகையுடன் எனது பெயரை “ நஜ்மி “ என்று அதில் எழுதி வைத்துக்கொண்டு ( சீனர்கள் எனது பெயரை “ நஜ்மி “ என்றே அழைப்பார்கள் ) காத்துருந்தான் என் சைனீஸ் நண்பன் “ ஜேம்ஸ் “ அவனது சீனப் பெயர் “ வு ஜியாவ் பாவ் “ !

என்ன சகோதரர்களே, வாயில் நுழைய மாட்டேன்ங்குதா..........! இங்கே அலுவலங்களில் பணிபுரியக்கூடிய ஒவ்வொரு சீனர்களும் தங்களுக்கு இரண்டு பெயர்களை வைத்துள்ளனர். ஓன்று சீனப் பெயர், இப்பெயர்களுடன் அவர்களின் குடும்ப இனத்தை அதாவது “ யோ, ஹுய், யீ, ஹேச்சே, துங், மஞ்சு, தை, மியாவ், பூயீ, காவ்ஷான், எலுன்ஸுன், டாங், பாவ், வூ, ஜோவ் இப்படி பல பெயர்களையும் “ அதில் இணைத்துருப்பார்கள். மற்றொன்று இங்கிலீஷ் பெயர், இவை தங்களின் வெளிநாட்டு வாடிக்கையாளர்களால் அழைப்பதற்கு இலகுவாக தங்களின் தொழிற்பெயராக சூற்றிக்கொள்வார்கள்.

Canton Fair – அனுபவம், சீன உணவு முறைகள், தொழிற்சாலைகளின் – பயணம், குவாங்சோ மஸ்ஜித் - ஜும்மா தொழுகை போன்ற எனது அனுபங்களைப்பற்றி வருகின்ற வாரங்களில் ஒவ்வொன்றாகப் பார்ப்போம் ( இன்ஷா அல்லாஹ் ! )

இறைவன் நாடினால் ! தொடரும்.....................

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.