Latest News

  

இந்திய ஜிடிபி -23.9% சரிவு - வீழ்ச்சிக்கு எதிராக கொந்தளிக்கும் காங்கிரஸ் தலைவர்கள்

இந்திய உள்நாட்டு மொத்த உற்பத்தியின் அளவு -23.9% அளவுக்கு சரிந்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளிவந்துள்ளது. 24 ஆண்டுகளில் இல்லாத வகையில் இது மோசமான சரிவாக நிபுணர்கள் கூறுகிறார்கள்.

ஏற்கெனவே மோசமான பொருளாதார மந்தநிலையை நாடு எதிர்கொண்டு வரும் வேளையில், கொரோனா பாதிப்பு மற்றும் பரவல் காரணமாக உள்நாட்டு மொத்த உற்பத்தியில் தாக்கம் ஏற்பட்டுள்தாகவும் அறியப்படுகிறது.

தேசிய புள்ளியியல் அலுவலகம் (என்எஸ்ஓ), புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் 2020-21 ஆம் ஆண்டின் முதல் காலாண்டான ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான உள்நாட்டு மொத்த உற்பத்தியின் (ஜிடிபி) மதிப்பீடுகளை 2011-12 ஆண்டின் முதலாவது காலாண்டு மற்றும் நடப்பு நிலவரம் ஆகியவற்றுடனும் உள்நாட்டு மொத்த உற்பத்தியின் செலவின கூறுகளின் காலாண்டு மதிப்பீடுகளுடன் சேர்த்து வெளியிட்டுள்ளது.

2011-12 காலகட்டத்தின் முதலாவது காலாண்டு மொத்த உள்நாட்டு உற்பத்தியின்போது 26.90 லட்சம் கோடி என மதிப்பிடப்பட்டது. இது 2019-20ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் 35.35 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது, இது 2019-2020 நிதியாண்டின் முதலாவது காலாண்டில் பதிவான 5.2 சதவீத வளர்ச்சியுடன் ஒப்பிடும்போது 23.9 சதவீதமாக சரிந்ததை காட்டுகிறது என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

விவசாயத்துறை நீங்கலாக ஏனைய துறைகள் பலவும் சரிவை சந்தித்துள்ளது, ஜிடிபி அறிக்கையில் பதிவு செய்யப்பட்டுள்ளது. நம்பிக்கை தரும் வகையில் இந்த நிதியாண்டின் முதலாவது காலாண்டில், விவசாயத்துறை 3.4% வளர்ச்சியை கண்டுள்ளது. கடந்த நிதியாண்டில் இந்த வளர்ச்சி விகிதம் 3 சதவீதமாக இருந்தது என்று தேசிய புள்ளியியல் துறை அலுவலக அறிக்கை கூறுகிறது.

மற்ற துறைகளிலும் என்ன தாக்கம்?

வணிகம், ஹோட்டல், போக்குவரத்து, தொலைத்தொடர்பு -47%

தொழிற்துறை: -38.1%

உற்பத்தித்துறை: -39.3%

கட்டுமானத்துறை: -50.3%

நிலக்கரித்துறை: -23.3%

எரிசக்தித்துறை, எரிவாயு: -7%

எதிர்வினையாற்றும் காங்கிரஸ்

ஜிடிபி கிட்டத்தட்ட 24 சதவீதம் வீழ்ச்சியை சந்தித்திருப்பது, இந்திய சுதந்திர வரலாற்றிலேயே இல்லாத ஒன்று என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். துரதிருஷ்டவசமாக இந்த விவகாரத்தில் ஆரம்பம் முதலே தங்களுடைய எச்சரிக்கையை இந்திய அரசு உதாசீனப்படுத்தி வந்தது என்று தமது டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார் ராகுல் காந்தி.

முன்னாள் நிதியமைச்சர் சிதம்பரத்தின் கருத்து

2020-21 ஆண்டுக்கான ஜிடிபி முதல் காலாண்டு அறிக்கையின் அம்சங்கள் தொடர்பான தமது பார்வையை முன்னாள் நிதியமைச்சர் பி.சிதம்பரம் விவரித்தார்.

முதல் காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 23.9 சதவீதம் குறைந்துள்ளது. அதாவது, 30-6-2019 நிலவரப்படி மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கால் பகுதி கடந்த 12 மாதங்களில் அழிக்கப்பட்டுவிட்டது. அதைப் பார்க்கும் 2019-20 ஆம் ஆண்டின் முடிவில் இருந்து, மொத்த உள்நாட்டு உற்பத்தி சுமார் 20 சதவீதம் குறைந்துள்ளது.

விவசாயம், காடு வளர்ப்பு மற்றும் மீன்பிடி தொழில்துறை மட்டும்தான் 3.4 சதவீத வளர்ச்சியை கண்டுள்ளது.

பொருளாதார வீழ்ச்சியை 'கடவுளின் செயல்' என்று குற்றம் சாட்டிய நிதியமைச்சர், விவசாயிகளுக்கும் விவசாயிகளை ஆசீர்வதித்த கடவுள்களுக்கும் நன்றியுடன் இருக்க வேண்டும் என்று ப.சிதம்பரம் தெரிவித்தார்.

பொருளாதாரத்தின் ஒவ்வொரு பிற துறையும் கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது, உற்பத்தித்துறை 39.3 சதவீதம் குறைந்துள்ளது; கட்டுமானம் 50.3 சதவீதம் குறைந்துள்ளது; மற்றும் வர்த்தக, ஹோட்டல், போக்குவரத்து மற்றும் தகவல் தொடர்பு 47.0 சதவீதம் வீழ்ச்சியை கண்டுள்ளது என்று அவர் விளக்கினார்.

இந்த மதிப்பீடுகள் எங்களுக்கு ஆச்சரியமாக இல்லை. முதல் காலாண்டின் சில நாட்களில் காணப்பட்ட ஏற்றம் ஆச்சரியமாக இருந்திருக்க வேண்டும். எதுவுமே செய்யாத, செயல் அளவில் வீழ்ச்சியைத் தடுக்க எதுவும் செய்யாத - அரசாங்கத்திற்கு அவை வெட்கக்கேடான விஷயமாக இருக்க வேண்டும், ஆனால் மோதி அரசுக்கு வெட்கமோ தவறுகளை ஏற்றுக்கொள்ளும் குணமோ இல்லை என்பது நமக்குத் தெரியும் என்று சிதம்பரம் கூறியிருக்கிறார்.

ரிசர்வ் வங்கி ஏற்கெனவே 2020ஆம் ஆண்டின் முதல் பாதியில் வீழ்ச்சி என்பது பரவலாகவும் ஆழமாகவும் மேலும் மேலும் இருக்கும் என்று சுட்டிக்காட்டியிருப்பதாகவும், பெரும் மந்தநிலை மற்றும் 2008இல் ஏற்பட்ட உலகளாவிய நிதி நெருக்கடியை விட அழிவுகரமானதாக அது இருக்கும் என்றும் கூறியுள்ளது என்றும் அவர் குறிப்பிடுகிறார்.

இந்திய பொருளாதாரம் மீண்டும் சீரான நிலைக்கு வந்து, சாதகமான வளர்ச்சிக்குத் திரும்ப பல மாதங்களாகலாம். ஆனால், அரசின் செயலற்ற நிலை விரைவில் இந்த பிரச்னைக்கு விடிவாகலத்தை தரும் என்ற நம்பிக்கையை நமக்கு அளிக்கவில்லை என்றும் சிதம்பரம் கூறியுள்ளார்.

source: bbc.com/tamil

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceTemplateism Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.