
அரியலூர் மாவட்டம், மீன்சுருட்டி அடுத்துள்ளது குருவாலப்பர் கோயில்
கிராமம். இங்கு வாழும் ராதாகிருஷ்ணன் - கற்பகவல்லி தம்பதியருக்கு இரண்டு
குழந்தைகள். அதில் முதலாவது மகன் 11வது படித்துவருகிறார். அடுத்து பெண்
குழந்தை, ஐஸ்வர்யா அப்பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் 9வது படித்துவந்தார்.
பெண்
குழந்தை மீது அவ்வளவு பாசமாக இருந்த அவரது குடும்பத்தார் மற்றும்
உறவினர்கள் அவரைச் செல்லமாக வளர்த்து வந்தனர். இந்நிலையில், மாணவி ஐஸ்வர்யா
9வது வகுப்பில் தேர்ச்சி பெறவில்லை.

அதைத் தொடர்ந்து அவர் வீட்டில் இருந்து வந்தார்.
இந்நிலையில், கடந்த 20-ம்தேதி மாலை வீட்டில் இருந்த மாணவி
ஐஸ்வர்யாவைக் காணவில்லை. பதறியடித்த பெற்றோர் அவரை ஊர் முழுக்கத் தேடி
அலைந்தனர். பல்வேறு இடங்களில் தேடியும் ஐஸ்வர்யா கிடைக்கவில்லை.
தொடர்ந்து,
அவரைத் தேடும் முயற்சியில் ஈடுபட்டனர். அந்தவகையில் இணைந்த கரங்கள்-கரூர்
எனும் அமைப்பும் அதற்கான முயற்சியில் ஈடுபட்டது. கடந்த மூன்றுநாள்களாக
எடுக்கப்பட்ட முயற்சியின் பலனாய் ஐஸ்வர்யா திருச்சியில் இருப்பது
தெரியவந்தது.
இதுகுறித்து நம்மிடம் பேசிய இணைந்த கரங்கள் கரூர்
அமைப்பைச் சேர்ந்த சாதிக் அலி, ``9-ம் வகுப்பில் தோல்வியடைந்த ஐஸ்வர்யாவை
அவரது பெற்றோர் கண்டிக்கவில்லை. ஆனால் அவரின் எதிர்காலம் குறித்து அறிவுரை
கூறியுள்ளனர். ஆனாலும், அவருக்குள் ஏற்பட்ட தாழ்வு மனப்பான்மை காரணமாக
வீட்டில் வைத்திருந்த ஆயிரம் ரூபாய் பணத்தை எடுத்துக்கொண்டு
வெளியேறியுள்ளார். ஏதோ ஒரு முடிவில் பேருந்தில் ஏறிய அவர், பேருந்தில்
திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் வந்திறங்கிப் போக வழி தெரியாமல்
நின்றுள்ளார்.
அந்த
இரவில், பேருந்து நிலையத்தில் இருந்த சில வாலிபர்கள் அவரைத் தவறான
நோக்கத்தில் நெருங்கியுள்ளனர். அதைக்கண்ட கோகிலா என்கிற பெண்மணி,
ஜஸ்வர்யாவிடம் விசாரித்துள்ளார். அதற்கு ஐஸ்வர்யா, தான் அநாதை என்றும்,
ஆசிரமத்தில் வளர்ந்து வரும் நிலையில், தனது தோழிகளுடன் வேலை தேடி
வந்ததாகவும், உடன் வந்தவர்கள் வேலையில் சேர்ந்துவிட்டார்கள், நாளை என்னை
வரச்சொல்லி இருக்கிறார்கள் எனக் கூறியுள்ளார். அதை நம்பிய அந்தப் பெண்மணி,
ஐஸ்வர்யாவை வீட்டுக்கு அழைத்துச் சென்று தங்கவைத்து, உணவு கொடுத்துள்ளார்.
இந்நிலையில்,
ஐஸ்வர்யா காணாமல் போன தகவல் தெரிந்து நாம் முகநூல் மற்றும் சமூக வலைதள
நண்பர்களுடன் முயற்சி எடுத்தோம். அதன்பலனாய், ஐஸ்வர்யா குறித்த தகவல்
தெரிந்த கோகிலா திருச்சி கோட்டைக் காவல் நிலையத்தில் நடந்த விவரங்களைக்
கூறி ஐஸ்வர்யாவை ஒப்படைத்தார்.
தொடர்ந்து, விசாரணை நடத்திய
போலீஸாரிடமும், ஐஸ்வர்யா பயந்து உண்மையைக் கூறவில்லை. தொடர்ந்து நம்மை
அழைத்து விசாரித்தபிறகு, "நான் படிக்காததால் எனது பெற்றோருக்கு மிகுந்த
சிரமம். அதனால் அவர்களுக்கு பாரமாக இருக்க விரும்பவில்லை. அதனால் வீட்டை
விட்டு வெளியேறினேன்" எனக் கதறி அழுதார். அதன்பிறகு, ஐஸ்வர்யாவின் பெற்றோரை
அழைத்துவந்து, போலீஸார் முன்னிலையில் ஐஸ்வர்யாவை அவரின் பெற்றோரிடம்
ஒப்படைத்தோம்.
இந்த
முயற்சியில், ஐஸ்வர்யாவைக் கண்டுபிடிக்க துரிதமாகவும், சாமர்த்தியமாகவும்
செயல்பட்ட திருச்சி அனைத்து மகளிர் காவல்நிலைய ஆய்வாளர் அருள்ஜோதி மற்றும்
காவலர்களுக்கும், அரியலூர் மாவட்ட மீன்சுருட்டி காவல் ஆய்வாளர் மலைச்சாமி
அவர்களுக்கும், அந்தப் பெண்மணி திலகாவுக்கும் நன்றி சொல்ல
கடமைப்பட்டுள்ளோம். கொஞ்சம் மிஸ் ஆகி இருந்தாலும் ஐஸ்வர்யாவின் நிலையை
யோசித்தாலே பதறுகிறது.
ஜஸ்வர்யா காணாமல் போன நாளிலிருந்து, அவரின்
பெற்றோர் மிகவும் மனம் உடைந்து போனார்கள். பலர் அவர்களை ஏளனமாகப்
பேசியதால், மனமுடைந்து தற்கொலை செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டார்கள்.
அவர்களுக்குத் தைரியமும், ஆறுதலும் கூறி வந்தோம். அவர்களுக்குத் துணையாக
நின்று முயற்சி எடுத்தோம். ஐஸ்வர்யா கிடைத்துவிட்டார்.
பெற்றோர்
தங்கள் பிள்ளைகளின் நடவடிக்கைகளைக் கவனமாக பார்த்துக்கொள்ளவேண்டும்.
அவர்களின் எண்ண ஓட்டத்தைப் பெற்றோரிடம் சொல்லும் அளவுக்குப் பெற்றோர்
நம்பிக்கையூட்டும் விதமாக நடந்துகொள்ள வேண்டும். ஐஸ்வர்யா
கிடைத்துவிட்டார். ஆனால் ஏராளமான ஐஸ்வர்யாக்கள் பாதிக்கப்படாமல் இருக்க
பெற்றோர் விழிப்புணர்வுடன் இருக்கவேண்டும்" என்றார்.
ஐஸ்வர்யாவுக்கு
அறிவுரைகூறிய போலீஸார், அவரைப் பெற்றோருடன் அனுப்பி வைத்தனர். அப்பா -
அம்மா சொல்படி நடப்பேன் எனத் தலையாட்டியபடி கிளம்பினார் ஐஸ்வர்யா.
No comments:
Post a Comment