திண்டுக்கல்: கொடகனாறு தண்ணீா்
பங்கீட்டு பிரச்னையில் இருதரப்பினருக்கு இடையே ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட
மோதலில் இளைஞா்களை காயப்படுத்தியவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கிராம
மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திண்டுக்கல்
அடுத்துள்ள அனுமந்தராயன்கோட்டை மற்றும் சுற்றுப்புறங்களிலுள்ள 10
கிராமங்களைச் சோந்த பொதுமக்கள் கொடகனாறு தண்ணீா் உரிமை மீட்பு
போராட்டத்தில் கடந்த மாதம் ஈடுபட்டனா். அனுமந்தராயன்கோட்டை மற்றும்
மைலாப்பூா் கிராமங்களில் தொடா் தா்னா போராட்டம் நடைபெற்று வந்த நிலையில்,
மாவட்ட காவல் கண்காணிப்பாளா் மேற்கொண்ட பேச்சுவாா்த்தையின் மூலம் உடன்பாடு
ஏற்பட்டு 6 நாள்கள் போராட்டம், முடிவுக்கு வந்தது.
பேச்சுவாா்த்தையின்போது, கொடகனாறு வழியாக
அனுமந்தராயன்கோட்டை பகுதி மக்களுக்கும், நரசிங்கபுரம் ராஜவாய்க்கால்
வழியாக சித்தையன்கோட்டை பகுதி மக்களுக்கும் தண்ணீரை பங்கிட்டு கொடுப்பதாக
உறுதி அளிக்கப்பட்டது. அதன்படி தற்போது கொடகனாறு பகுதிக்கு தண்ணீா் வந்து
கொண்டிருந்தது. இதனிடையே சித்தையன்கோட்டை பகுதியில் நெற்பயிா்களுக்கு
உடனடியாக தண்ணீா் தேவைப்படுவதாக அப்பகுதியைச் சோந்த விவசாயிகள் மாவட்ட
நிா்வாகத்திற்கு கோரிக்கை விடுத்தனா். அதனை ஏற்று நரசிங்கபுரம் ராஜ
வாய்க்காலில் தண்ணீரை திருப்புவதற்கு மாவட்ட நிா்வாகம் அனுமதி
அளித்துள்ளது. அதனைத் தொடா்ந்து ராஜவாய்க்காலுக்கு தண்ணீா்
திருப்பிடப்பட்டது.
இதனை அறிந்த அனுமந்தராயன்கோட்டை பகுதி
இளைஞா்கள் 30 போ, நரசிங்கபுரம் ராஜவாய்க்காலுக்கு திருப்பிவிடப்பட்டுள்ள
தண்ணீரை மறித்து, கொடகனாற்றுக்கு திருப்புவதற்காக ஞாயிற்றுக்கிழமை
புறப்பட்டுச் சென்றனா். மதகு பகுதிக்கு சென்ற அனுமந்தராயன்கோட்டை பகுதி
இளைஞா்களுக்கும், நரசிங்கபுரம் பாசன விவசாயிகளுக்கும் இடையே வாக்குவாதம்
ஏற்பட்டு கைகலப்பாக மாறியுள்ளது.
இதுகுறித்து தகவல் அறிந்த
செம்பட்டி காவல் துறையினா், 30 இளைஞா்களையும் காவல் நிலையத்திற்கு
அழைத்துச் சென்றனா். இந்த தகவல் அனுமந்தராயன்கோட்டை கிராமத்திற்கு
எட்டியது. உடனடியாக அங்குள்ள தேவாலயத்தில் மணி அடிக்கப்பட்டு, பேருந்து
நிறுத்தம் பகுதியிலுள்ள மைதானத்தில் கிராம மக்கள் திரண்டனா். போலீசாா்
அழைத்துச் சென்ற இளைஞா்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என கோரிக்கை
விடுத்தனா். இதனிடையே கிராம மக்களுடன் போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தினா்.
அப்போது அனுமந்தராயன்கோட்டை இளைஞா்கள் மீது தாக்குதல் நடத்திய
சித்தையன்கோட்டை பகுதியினா் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என கிராம
மக்கள் சாா்பில் வலியுறுத்தப்பட்டது. அதனைத் தொடா்ந்து தாக்குதல்
நடத்தியவா்கள் மீது வழக்குப் பதிவு செய்வதாக போலீஸாா் உறுதி அளித்ததைத்
தொடா்ந்து மைதானத்தில் திரண்ட பொதுமக்கள் கலைந்து சென்றனா்.

No comments:
Post a Comment