பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலா அருகே உள்ளது டால் எரிமலை. டால் எரிமலை
பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள மிகச் சுறுசுறுப்பான எரிமலைகளில் ஒன்றாகும்.
மணிலாவின் தென்பகுதியில் 31 மைல்கள் தொலைவில் உள்ள இந்த எரிமலை ஏரிக்கு
நடுவே அமைந்திருந்தாலும் ஆபத்து நிறைந்த எரிமலையாக பார்க்கப்படுகிறது.
இதுவரை பலமுறை வெடித்து இதுவரை 6000 பேருக்கு மேல் காவு வாங்கியிருக்கிறது
இந்த எரிமலை. எனினும் ஏரிகளுக்கு நடுவே அமைந்திருப்பதால் ஆபத்தை தாண்டி
சுற்றுலா பயணிகளின் ட்ரெக்கிங் பகுதியாகவும் இருந்துவந்தது. எத்தனை முறை
வெடித்தாலும் இங்கு ட்ரெக்கிங் சென்றுக் கொண்டிருந்தார்கள்.

இதற்கிடையே,
இன்று மதியத்தில் இருந்து இந்த டால் எரிமலையில் இருந்து 1 கிலோ மீட்டர்
உயரத்துக்கு சாம்பல் வெளியேறி வருகிறது.
இதனால் அப்பகுதியே புகை மண்டலமாக காட்சி அளிக்கிறது.
மேலும் பலத்த சத்தத்துடனும், அதிர்வுகளுடனும் வெடித்து சிதறிவருகிறது.
குறிப்பாக எரிமலையில் இருந்து சாம்பலும், கொதிநீரும் 1 கிலோ மீட்டர்
தூரத்துக்கு வானை நோக்கி வீசப்பட்டு வருகிறது. இதனால் மலையை சுற்றியுள்ள
பகுதியில் வசிக்கும் சுமார் 8 ஆயிரம் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு
அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்.
இதுதொடர்பாக பேசியுள்ள பிலிப்பைன்ஸ்
எரிமலை மற்றும் நில அதிர்வு நிறுவனம், ``இன்னும் சில மணிநேரங்களில் இது
அபாயகரமான வெடிப்பாக மாறலாம். இது நிலநடுக்கதுக்கு வழிவகுக்கலாம்" என
எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதனால் அடுத்த அறிவிப்பு வெளியாகும் வரை மணிலா
விமான ஓடுதளம் மூடப்பட்டு கிட்டத்தட்ட 170 விமானங்கள் ரத்து
செய்யப்பட்டுள்ளன. மேலும் அந்தப் பகுதிக்கு நாளை விடுமுறை
அறிவிக்கப்பட்டுள்ளது.
பிலிப்பைன்ஸ் உலகில் மிகவும்
பேரழிவுக்குள்ளான நாடுகளில் ஒன்றாகும். ஆண்டுதோறும் சுமார் 20 சூறாவளிகளால்
பாதிக்கப்படும் இந்த நாடு "பசிபிக் வளையத்தின் நெருப்பு'' என்று
அழைக்கப்படுகிறது. அதிகமான பூகம்பங்கள் மற்றும் எரிமலை வெடிப்புகளுக்கு
உட்பட்ட பகுதி என்பதால் இப்படி அழைக்கப்படுகிறது.
2000
மற்றும் 2016க்கு இடையில், பிலிப்பைன்ஸில் ஏற்பட்ட இயற்கை பேரழிவுகளால்
23,000-க்கும் அதிகமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதுடன் 125 மில்லியன்
மக்கள் பாதிப்பை எதிர்கொண்டுள்ளனர் என்று ஆசிய அபிவிருத்தி வங்கி
தெரிவித்துள்ளது. பொருளாதார சேதம் சுமார் 20 பில்லியனாகவும், இதன் ஆண்டு
சராசரி 1.2 பில்லியன் டாலராகவும் இருக்கிறது என்றும் கூறப்படுகிறது.
2018ஆம்
ஆண்டில், பிலிப்பைன்ஸின் முக்கிய சுற்றுலா தளமான மேயன் எரிமலை வெடித்ததால்
பல்லாயிரக்கணக்கானோர் வெளியேற்றப்பட்டனர். பிலிப்பைன்ஸில் 24 எரிமலைகள்
உள்ளன. இதில் தற்போது வெடித்து வரும் டால் எரிமலை இரண்டாவது மிகப் பெரியது
என்று கருதப்படுகிறது. கடந்த டிசம்பர் மாதம், நியூசிலாந்து எரிமலை தீவு
எதிர்பாராதவிதமாக வெடித்ததில் 19 பேர் இறந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment