Latest News

உங்கள் அம்மாவுக்கு ஏற்பட்ட அவமானம் இது.. எப்படித் துடைக்கப் போறீங்க சாமி.. கமல் கேள்வி

 Kamal Haasan blasts CM on Pollachi issue
பொள்ளாச்சி விவகாரம் தொடர்பாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆவேசமாக பல கேள்விகளைக் கேட்டுள்ளார். பொள்ளாச்சி விவகாரம் தமிழகத்தையே உலுக்கி எடுத்து வருகிறது. பெண்ணைப் பெற்ற ஒவ்வொருவரும் தகித்துப் போய்க் கிடக்கின்றனர். எங்கு திரும்பினாலும் அந்த அப்பாவிப் பெண்களின் அவலக் குரல்கள்தான் இதயத்தை அறைந்து கொண்டுள்ளன. இந்த நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு மக்கள் நீதி மய்யம் கமல்ஹாசன் அதிரடியாக பல கேள்விகளை ஆவேசத்துடன் எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதிலிருந்து சில வரிகள்... பொள்ளாச்சி சம்பவ ஆடியோவைக் கேட்டது முதல் மனசு பதறுது. அந்தப் பொண்ணோட குரலில் இருந்த அதிர்ச்சி, பயம் , தவிப்பு திரும்பத் திரும்ப காதுல கேட்குது. நிர்பயா வுக்கு நடந்த கொடுமைக்கு எதிராக ஊர் உலகமே ஒன்றாக திரண்டது. அப்போது தமிழக முதல்வராக இருந்தவர் ஒரு அறிக்கை விட்டார். 
 
பெண்களுக்கு எதிரான குற்றங்கள் கொடூரக் குற்றங்களாக கருதப்பட்டு உயர்மட்ட விசாரணை நடத்தப்படும் என்றார். அந்தப் பெண்மணியின் பெயரால் ஆட்சி செய்யும் இந்த அரசு எப்படி கவனக்குறைவாக இருக்கிறது. பெண்ணைப் பெற்ற அத்தனை பேருக்கும் பதறுகிறது., உங்களுக்குப் பதறவில்லையா.
குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கும் கட்சிக்கும் தொடர்பில்லை என்று கூறுவதில் மும்முரம் காட்டுகிறீர்கள். ஆனால் தவறு செய்தவர்களுக்கு தண்டனை உறுதி செய்யப்படும் என்று கூறுவதில் உறுதி காட்டவில்லையே. புகார் கொடுக்க வந்த பெண்ணின் பெயரைத் தவறாக சொல்லி விட்டதாக கூறுகிறார் எஸ்பி. சுப்ரீம் கோர்ட் வழிகாட்டுதலுக்கு எதிராக அவர் செய்த தவறை அரசாங்கம் ஏன் கண்டிக்காமல் இருக்கிறது. இதற்கு அடுத்த நாளே பெண்ணின் வீடியோ வெளி வருகிறது .. அது எப்படி. குற்றவாளிகள் அழித்து விட்டதாக சொன்ன வீடியோ எப்படி வெளியே வந்தது. முதலில் வந்த பாதி மறைக்கப்பட்ட வீடியோ வெளியே வந்தது எப்படி.. யார் வெளியிட்டது. பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதாக சொன்ன தலைமையின் உருவத்தை பாக்கெட்டில் வைத்துள்ள நீங்கள் செய்தது என்ன.
பாலியல் குற்றத்தை எதிர்த்துப் போராடிய மாணவர்களை பலவந்தமாக அப்புறப்படுத்தினீர்கள். வன்முறையைப் பயன்படுத்தி அவர்களை பயமுறுத்த முயற்சி செய்துள்ளீர்கள். கோபத்தை பதிவு செய்தவர்களை அப்புறப்படுத்திய இந்த காவல்துறையா எங்களின் பாதுகாப்பை உறுதி செய்யப் போகிறது மிஸ்டர் சிஎம். உங்களைத்தான் கேட்கிறேன். உங்களுக்குத்தான் இத்தனை கேள்விகளும்.
பெயரைச் சொல்கிறீர்கள்.. வீடியோ வெளியிடுகிறீர்கள்.. இதைத் தட்டிக் கேட்டால் போலீஸை விட்டு அடிக்கிறீர்கள்.மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவராக கேட்கவில்லை. 2 பெண்ணோட அப்பாவாக கேட்கிறேன்.. என்ன பண்ணி இந்த தப்புகளுக்கு பரிகாரம் செய்யப் போகிறீர்கள். எவனாவது இதுபோல செய்ய நினைத்தால் அரசாங்கம் விடாது என்ற நம்பிக்கையை கொடுக்க வேண்டும் எப்ப செய்யப் போறீங்க.. இன்னும் எதுக்காக காத்திருக்கீங்க.. தேர்தல் முடியட்டும் என்றா. இரு பெரும் காப்பியங்களான மகாபாரதமும், ராமாயணமும் பெண்களுக்கு ஏற்பட்ட அவமானத்தை துடைக்க நடந்த போர்கள் பற்றியது. உங்க அம்மாவுக்கே ஏற்பட்டுள்ள அவமானம் இது.. எப்படி துடைக்கப் போறீங்க சாமி என்று கமல்ஹாசன ஆவேசமாக கேட்டுள்ளார்.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.