திருச்சி : பொள்ளாச்சி பாலியல்
விவகாரம் மற்றும் ஆபாச படம் எடுத்து மிரட்டிய வழக்கில் குற்றவாளிகளை
கடுமையாக தண்டிக்க வலியுறுத்தியும், நீதிகேட்டும் தமிழகம் முழுவதும்
கல்லூரி மாணவ, மாணவிகள் மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். கரூர்
தாந்தோணிமலையில் உள்ள அரசு கலைக்கல்லூரி நுழைவு வாயில் அருகே, புரட்சிகர
மாணவர் இளைஞர் முன்னணியின் மாவட்ட நிர்வாகி சுரேந்தர் தலைமையில் 20க்கும்
மேற்பட்ட மாணவ, மாணவிகள் கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இதே போல் பெரம்பலூர் புது பஸ் நிலையம் முன் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் பொள்ளாச்சி பெண்கள் மீதான பாலியல் சம்பவத்தில் குற்ற சம்பவங்களில் ஈடுபட்டவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வலியுறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் நேற்று ஈடுபட்டனர். தஞ்சையில் குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கல்லூரியில் நேற்று இந்திய மாணவர் சங்கம் சார்பில் மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி முன் ஆர்ப்பாட்டம் நடத்தினர். தஞ்சையில் இந்திய தேசிய மாதர் சம்மேளனம் சார்பில் தலைமை தபால் நிலையம் அருகே இன்று காலை 10 மணியளவில் ஆர்ப்பாட்டம் நடந்தது. தஞ்சை மன்னர் சரபோஜி கல்லூரி மாணவர்கள் இன்று வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். கும்பகோணம் அரசு ஆடவர் கல்லூரியில் பொள்ளாச்சி சம்பவத்தை கண்டித்து இன்று காலை 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்லூரி முன் போராட்டம் நடத்தினர்.
நாகை மாவட்டம் சீர்காழி பழைய பேருந்து நிலையம் அருகே இளைஞர் சங்கம் சார்பில் பொள்ளாச்சியில் மாணவிகள் மீது பாலியல் துன்புறுத்தலில் ஈடுப்பட்ட குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. புதுக்கோட்டை அரசு பெண்கள் கல்லூரி மாணவிகள் இன்று வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி முன் ஆர்ப்பாட்டம் நடத்தினர். திருச்சி மத்திய பஸ்நிலையம் அருகே மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் பொள்ளாச்சி பாலியல் வழக்கில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பாட்டுப்பாடி கோஷம் எழுப்பினர். இதே போல் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் திருச்சி ராமகிருஷ்ணா பாலம் அருகில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பொள்ளாச்சி சம்பவத்தை கண்டித்து இன்று சேலம் வின்சென்ட்டில் உள்ள அரசு கலைக்கல்லூரி முன்பு இருந்து அந்த கல்லூரியை சேர்ந்த மற்றும் தனியார் கல்லூரி மாணவர்கள் 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் ஊர்வலமாக புறப்பட்டனர். அவர்கள், அம்பேத்கர் சிலை, முள்ளுவாடி கேட் வழியாக கலெக்டர் அலுவலகம் வந்தனர். பின்னர், கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, இந்த விவகாரத்தில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும், மெத்தனம் காட்டி வரும் போலீசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டம் நடந்து கொண்டிருந்த போதே மாணவர்களின் ஒருதரப்பினர் திடீரென கலெக்டர் அலுவலகம் முன்பு சாலை மறியலுக்கு முயன்றனர். அப்போது, போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதனால் போலீசாருக்கும் மாணவர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதேபோல் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பொள்ளாச்சி கொடூர சம்பவத்திற்கு நீதி கேட்டும், குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க வலியுறுத்தியும் இன்று 3வது நாளாக மாணவ, மாணவியர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

No comments:
Post a Comment