சென்னை: நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்ட ஒப்பந்தத்தை ஜெம் நிறுவனம்
கைவிடுவதாக முடிவெடுத்து இருப்பது மக்கள் போராட்டத்துக்குக் கிடைத்த வெற்றி
என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அவர்
வெளியிட்டு இருக்கும் அறிக்கையில், தமிழ்நாட்டில் மீத்தேன் திட்டத்தை 2010
இல் மத்திய அரசு கொண்டுவர முனைந்தபோது, விவசாயிகளுக்காகவே குரல்
கொடுக்கும் மன்னார்குடி ரங்கநாதன் முதல் எதிர்ப்புக் குரலைப் பதிவு
செய்தார். அடுத்து இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் அவர்களும், நானும்,
"மீத்தேன் திட்டம் காவிரி தீரத்தை நாசமாக்கும்" என அறிக்கை தந்தோம்.
செய்தியாளர்கள் சந்திப்பிலும் தொடர்ந்து மீத்தேனை எதிர்த்துக் குரல்
கொடுத்தேன்.
பின்னர் மீத்தேன் திட்டத்தை எதிர்த்து தென்மண்டல பசுமைத்
தீர்ப்பாயத்தில் கழக விவசாய அணிச் செயலாளர் ஆடுதுறை இரா.முருகன் பெயரால்
வழக்குத் தொடுத்தேன். அதுபோலவே மீத்தேனை எதிர்த்து பி.ஆர்.பாண்டியன்
அவர்களும் தீர்ப்பாயத்தில் வழக்குத் தொடுத்தார். இருவர் சார்பிலும்
தீர்ப்பாயத்தில் நான் வாதாடினேன். என் கோரிக்கையை ஏற்று தீர்ப்பாய நீதிபதி
ஜோதிமணி அவர்கள் நிபுணர் குழுவை தமிழக அரசு அமைக்குமாறு கூறினார். அதன்படி
அமைக்கப்பட்ட நிபுணர் குழு மீத்தேன் திட்டத்துக்கு எதிராக அறிக்கை தந்தது.
இதன்பின்
மத்திய அரசு ஷேல் கேஸ் எனப்படும் பாறை படிம எரிவாயுத் திட்டத்தை காவிரி
தீரத்தில் திணிக்க முற்பட்டது. அதனை எதிர்த்தும் தீர்ப்பாயத்தில் நான்
வழக்குத் தொடுத்தேன். நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தைச் செயல்படுத்த
மத்திய அரசு முனைந்தது. அரசியல் கட்சிகளின் தலையீடு இன்றி நெடுவாசல்
மற்றும் 70 கிராமங்களின் மக்கள் தன்னெழுச்சியாகப் போராடினார்கள். மத்திய
அமைச்சர்கள் திட்டத்தைச் செயல்படுத்த மாட்டோம் என்று கூறியபோதிலும், மத்திய
அரசு ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு ஜெம் லேபரெட்டரி நிறுவனத்துக்கு அனுமதி
கொடுத்தது.
புதுக்கோட்டை மாவட்டம், நெடுவாசல் வடகாடு விவசாயிகள்
சங்கத்தின் சார்பில் மதிமுக ஒன்றியச் செயலாளர் செல்வராஜ் தென்மண்டல பசுமைத்
தீர்ப்பாயத்தில் வழக்குத் தொடுத்தார். நானே தீர்ப்பாயத்தில் வாதாடினேன்.
ஜெம்
லேபரெட்டரி நிறுவனம் கடந்த வருடம் மார்ச் மாதத்தில் தீர்ப்பாயத்தில்
தாக்கல் செய்த பிரமாண வாக்குமூலத்தில், ஹைட்ரோ கார்பன் எரிவாயு எடுக்க
மத்திய அரசிடம் அனுமதி பெற்றுள்ளதாகவும், எனவே எரிவாயு எடுப்பதை யாரும்
தடுக்க முடியாது என்று மமதையோடும், திமிரோடும் குறிப்பிட்டது.
தீர்ப்பாயத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது.
மீண்டும் நெடுவாசலில்
போராட்டம் வெடிக்கும் என்று சில நாட்களுக்கு முன்பு நான் அறிவித்தேன்.
தற்போது ஜெம் நிறுவனம் நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்தைக்
கைவிடப் போவதாகவும், மாற்று இடம் கேட்டு மத்திய அரசிடம் விண்ணப்பித்து
இருப்பதாகவும் செய்தி வெளியாகி உள்ளது.
ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட
எந்த எரிவாயுத் திட்டத்தையும் தமிழ்நாட்டில் அனுமதிக்க மாட்டோம்; மக்களைத்
திரட்டி கடுமையான போராட்டத்தை மேற்கொள்வோம் என மத்திய அரசுக்கு
எச்சரிக்கிறேன்.நெடுவாசல் வெற்றிக்கு மக்கள் போராட்டமே காரணம் ஆகும், என்று
குறிப்பிட்டுள்ளார்.
source: oneindia.com
No comments:
Post a Comment