ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா வீசிய குண்டு வீச்சில் என்ன நடந்தது என்பது
குறித்த வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.
ஆப்கானிஸ்தானில் ஐ.எஸ் தீவிரவாதிகளின் குகை மீது அமெரிக்க விமானப்படை
'ஜிபியு-43/பி மாப்' என்ற 10 ஆயிரம் கிலோ எடைகொண்ட ராட்சத குண்டை நேற்று
முன்தினம் வீசியது.
'வெடிகுண்டுகளின் தாய்' என அழைக்கப்படும் இந்த குண்டு வீச்சு தாக்குதலில்
ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் 92 பேர் கொல்லப்பட்டதாக ஆப்கன் அதிகாரிகள்
தெரிவித்துள்ளனர்.
குகையை தகர்த்தனர்
ஆப்கானிஸ்தானின் அச்சின் மாவட்டத்தில் உள்ள மோமண்ட் டாரா என்ற பகுதியில்
உள்ள குகைகள்தான் ஐ.எஸ் தீவிரவாதிகளின் புகலிடமாக இருந்து வருகிறது.
இங்கிருந்துதான் ஆப்கானிஸ்தான் படையினர் மற்றும் அமெரிக்க படையினர் மீது
தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளை
முற்றிலும் ஒழிக்க அதிபர் டிரம்ப் தலைமையிலான அமெரிக்கா முடிவு
செய்துள்ளது.
குண்டுகளின் தாய்
இந்நிலையில் மோமண்ட் டாரா குகை பகுதியில் ‘ஜிபியு-43/பி மாப்' என்ற சுமார்
10 ஆயிரம் கிலோ எடையுள்ள குண்டை வீச அமெரிக்க விமானப்படை முடிவு செய்தது.
அணு ஆயுதம் இல்லாத வகையைச் சேர்ந்த இந்த குண்டு வெடிகுண்டுகளின் தாய் என
அழைக்கப்படுகிறது. கடந்த 2003ம் ஆண்டு இந்த குண்டு சோதனை செய்யப்பட்டது.
அதன்பின் இந்த குண்டு முதல் முறையாக ஆப்கனில் பயன்படுத்தப்பட்டது.
அதிர்வு, சத்தம்
இந்த குண்டு தரைக்கு மேலே வெடிக்கும். அப்போது ஏற்படும் மிகப் பயங்கரமான
அழுத்தத்தில் குகைகள் நொறுங்கும். இந்த குண்டை ஆப்கானிஸ்தானின் மோமண்ட்
டாரா குகை மீது அமெரிக்க விமானப்படை விமானம் எம.சி-130 என்ற சரக்கு விமானம்
நேற்று முன்தினம் மாலை வீசியது. அப்போது மிகப் பெரிய அதிர்வு, சத்தம்
கேட்டதாக அப்பகுதியிலுள்ள பொதுமக்கள் தெரிவித்தனர்.
வீடியோ காட்சி
விமானத்திலிருந்து குகை குறி வைக்கப்படும் காட்சி, அது வீசப்படும் காட்சி,
வெடித்து சிதறியதும், ஒரு புகை மூட்டம் மேலே எழும் காட்சி ஆகியவற்றை
அமெரிக்க பாதுகாப்பு துறை வீடியோவாக வெளியிட்டுள்ளது. அந்த காட்சிகளை
பாருங்கள், குண்டு வீச்சின் வீரியம் எத்தகையது என்பது உங்களுக்கே தெரியும்.
No comments:
Post a Comment